Saturday, July 31, 2004

ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி

சமீப காலமாய் எனது கதை அல்லது கவிதைக்காக ஒரு அழகான காதலியை மனத்தில் உருவப்படுத்திக் காண முனையும் பொழுதெல்லாம் வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து அதிகாரம் செய்யும் உருவம் 'ஜோ'வினுடையதாக இருக்கிறது. (என் இன்னொரு அபிமான நடிகர் மன்னிப்பாராக..!!)

இயற்கையாகவே எனக்குப் பிடித்தமான உருவ அமைப்போடு இருக்கிற அபிமான நடிகையென்றாலும் இதற்கு இன்னொரு முக்கிய காரணமாக காக்க காக்க படத்தில் அவர் மீது படமாக்கப்பட்ட இந்தப் பாடல் இருக்கக் கூடும். பெண் வர்ணிப்பில் எப்போதுமே பாடலாசிரியர்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் காட்டுவது இயல்பே ஆயினும், இந்தப் பாடல் அதில் சில உச்சங்களைத் தொட்டு விடுவதாகவே எனக்குத் தோன்றியது. குறிப்பாக பாடலாசிரியர் பெண் (தாமரை) என்கின்ற போது என் வியப்பு மேலும் பல்கிப் பெருகுகிறது.

ஒரு வேளை பெண் பாடலாசிரியர் என்பதால் தான் உருவ அமைப்பு பற்றி அதிகம் பேசாமல், 'அவள் பழகும் விதங்கள்', 'எதிலும் வாஞ்சைகள்', 'மரகத சோம்பல் முறித்தல்', புல்வெளி போல் சிலிர்த்தல்', 'விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் அழகு', 'ஏதோ அவளிடம் ஒரு தனித்துவம் ததும்பிடும்' என்று குணாதிசயத்தை மிகுதியாகப் பாடிச் செல்கிறது போலும் இந்தப் பாடல். போகிற போக்கில் என்னையும் கட்டிப் போட்டு இழுத்துச் செல்கிறது.

'ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி இருந்தாள்' என்று ஒரு கதை போல ஆரம்பிக்கும் முறையிலேயே என்னை ரசிக்க வைத்த பாடல் இது.

எப்படியிருந்தால் எனக்கென்ன, என் கதை/கவிதைகளுக்கு அழகான ஒரு நாயகி உருவம் கிடைத்தால் சரி. வேறென்ன எனக்குக் கவலை?

ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருடப் பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்

முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..(2)

(ஒரு ஊரில்)

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே

அவள் கன்னத்தின் குழியில் சிறு செடிகளும் நடலாம்

அவள் கன்னத்தின் குழியில் - அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் - விதவிதமாய்

ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம்
ததும்பிடும் ததும்பிடுமே..

(ஒரு ஊரில்)

மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனியொரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்

அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய்த் திரும்பும்

அவள் கடந்திடும் போது - நிச்சயமாய்
தலை அனிச்சையாய் திரும்பும் - அவள் புறமாய்

என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல
மொழியினில் வழி இல்லையே

(ஒரு ஊரில்)
அதிருக்கட்டும், ஒரு பெண்ணே 'என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழியில்லையே' என்று அத்தனை தூரம் ஃபீலாகி எழுதுகின்ற அளவு அழகாக இருக்கும் ஜோ மீது நான் இப்படிக் கொஞ்சூண்டு அன்பாக இருப்பதற்கு என்மேல் ஏன் இத்தனை கோபம் பல பேருக்கு என்று தான் எனக்குப் புரிவதேயில்லை. :-) :-)

Thursday, July 29, 2004

செம்புலப் பெயல் நீர்

ஒரு எழுத்தாளனாகவோ, கவிஞனாகவோ என்னைப் பற்றி நானே ரொம்ப உயர்வாக நினைத்து இறும்பூது எய்தி அகங்காரம் கொள்ளும் தருணங்களில் படிப்பதற்காகவே சில கவிதைகள் வைத்திருக்கிறேன். மிகத் தீவிரமான ஒரு insecurity complex-ஐ எனக்குத் தரவல்லவை அக்கவிதைகள். அவற்றுள் முக்கியமானது இந்த சங்க காலத்துத் தமிழ்க் கவிதை. ஐந்து வரிகளில் கவிஞன் என்னவித உச்சத்தைத் தொட்டு விடுகிறான் இந்தக் கவிதையில்?

யாயு ஞாயும் யாராகியரோ
எந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானு நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந்தான் கலந்தனவே.
செம்புலப் பெயல்நீர் போல் என்ற வரியில் தான் அந்தக் கவிஞன் என்னவித விளையாட்டுக் காட்டுகிறான்? 'செம்மண் நிலத்தில் பிரிக்கவொண்ணாதபடி கலந்து விடும் நீர் போல்' என்ற புரிதலில் ஆரம்பித்து, 'மழையே காணாது வாடியிருக்கும் பாலை நிலத்தில் வாராது வந்த மாமணியாய் வந்த நீரோடு அம்மண் ஆசை மிகக் கொண்டு கலந்து விடுவதைப் போல்' என்ற ஆழமான புரிதல் வரை என்னவொரு பிரமிக்க வைக்கும் கவித்திறம். எனக்கு மிகப் பிடித்தமான தமிழ்க் கவிதை இதுவே என்று நான் கூறுவேன், அதில் பெருமிதமும் கொள்வேன்.

ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்த்திருக்கிறார் ஏ.கே.ராமானுஜன். அம்மொழிபெயர்ப்பு, லண்டன் மாநகர பாதாள ரயில் கவிதைத் தொகுப்பிலும் இடம்பிடித்துள்ளது.

What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
did you and I meet ever?

But in love

our hearts have mingled
like red earth and pouring rain.

Monday, July 26, 2004

This Child is Me

நான் பெங்களூர் ஐ.ஐ.எம்.மில் படித்துக் கொண்டிருந்த போது வேறெங்கும் இல்லாத ஒரு புதிய course எங்களுக்கு வழங்கப்பட்டது. Tracking Creative Boundaries என்று அதற்குப் பெயர். (இது பற்றிய Financial Express பத்திரிக்கைச் செய்திக் கட்டுரை இங்கே.) கலை மற்றும் இலக்கியத்துறைகளில் மிகச் சிறந்த சிலரை வகுப்புக்கு அழைத்து வந்து எங்களோடு பேச வைத்து அவர்களின் படைப்புக்களை அலசி ஆராய்ந்து அதன் மூலம் மேலாண்மையில் சில புதிய பரிணாமங்களை எங்களுக்குக் காண்பிக்கின்ற ஒரு முயற்சி. என் வாழ்வில் நான் படித்த மிகச் சிறந்த course அது தான்.

அதில் ஒரு குறும்பட இயக்குனர் எங்களிடம் பேச வந்திருந்தார். பள்ளி செல்லும் பருவத்தில் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய மன நிலைகளைப் பற்றிய அவரது ஒரு குறும்படத்தையும் பார்த்து அது குறித்து விவாதித்தோம். அந்தப் படத்தைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதப் பணித்தார் எங்கள் பேராசிரியர்.

அந்தக் கட்டுரையில் பயன்படுத்துவதற்காக குழந்தையொன்றின் மனநிலையை அழகாகச் சொல்லுகின்ற கவிதையைத் தேடிய போது கிடைத்தது ஒரு ஹீப்ரூ மொழிக் கவிதை. யெஹுதா அட்லாஸ் என்பவர் எழுதியது. ஒரு சின்னக் குழந்தை தன் அம்மாவிடம் சொல்வதாக வரும் அந்தக் கவிதையின் தமிழாக்கம் இதோ:

This Child is Me

நான் கேட்காத எதையும் எனக்கு விளக்காதே..
நான் விளையாடிக் கொண்டிருக்கையில்
என்னைக் கூப்பிடாதே..
அதிலும் நான் அப்போது தான்
ஆரம்பித்திருக்கிறேன் என்றால்..!

என்னை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதே..
நான் உனக்கு உதவலாம் என்று வரும்போது
"உன்னால் இது முடியாது" என்று சொல்லாதே..!

மற்றவர் முன்னிலையில்
என் மீது கோபம் கொள்ளாதே..!

அப்புறம் முக்கிமானது..
எனக்கு ஒன்றுமே செய்வதற்கு இல்லாத
பிறர் வீடுகளுக்கு
தயவு செய்து கூட்டிப் போகாதே..
நான் இங்கே என் பொம்மைகளோடே
இருந்து கொள்வேன்..!!
எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது இந்தக் கவிதையும், அது சொல்லும் செய்தியும்.

"மற்றவர் முன்னிலையில் என் மேல் கோபம் கொள்ளாதே" என்று சொல்லும் அந்தக் குழந்தையின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே போல், சும்மா அலங்கரித்துக் குழந்தையைப் பிறர் வீட்டுக்கு அழைத்துப் போய் 'அங்கே போகாதே, அதைத் தொடாதே, ஓடிக்கொண்டிருக்காதே' என்றெல்லாம் சட்டமியற்றி ஒரே இடத்தில் உட்கார வைக்கும் பழக்கத்திற்கும் எதிர்ப்புக் காட்டுகிறது குழந்தை. எவ்வளவு ஆழமான உண்மை..!!

Sunday, July 25, 2004

ஷெல்லி என்றொரு கவிஞன்

ஆங்கிலத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு கவிஞன் ஷெல்லி. பெர்ஸி பிஸ்ஸெ ஷெல்லி. (Percy Bysshe Shelley, 1792-1822) முப்பது வயதில் நாம் அவனை இழந்தது மிகுந்த துர்ப்பாக்கியமானது. ஷெல்லியை நான் முதலில் படித்தது பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில். ஓஸிமாண்டியஸ் (Ozymandias) என்பது கவிதையின் தலைப்பு.

I met a traveller from an antique land
Who said: Two vast and trunkless legs of stone
Stand in the desert ... Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamped on these lifeless things,
That hand that mocked them and the heart that fed;
And on the pedestal these words appear:
"My name is OZYMANDIAS, king of kings:
Look on my works, ye Mighty, and despair!"
Nothing beside remains. Round the decay
Of that colossal wreck, boundless and bare
The lone and level sands stretch far away.
என் ஆங்கில ஆசிரியர் பொருளை விளக்க விளக்க எனக்கு உலகமே மறந்து போனது போலானது. மனித வாழ்வின் நிலையாமையை அழகாகச் சொல்லியிருந்தான் ஷெல்லி. எத்தனை மகத்தான மன்னர்மன்னனாக இருந்தாலும் கடைசியில் அவனது வெற்றிகள் மண்ணோடு மண்ணாகிப் போன காட்சி எனக்குள் நுண்ணிய அதிர்வுகளைத் தந்தது. குறிப்பாக, உடலற்ற இரு கால்கள் நிற்பதும், பக்கத்தில் மண்ணில் அமிழ்ந்து பாதி மட்டுமே வெளியே தெரியும் அந்த முகம், அதன் உதடுகளில் ஒரு எக்காளம் என்று வரிசையாக வர்ணித்து விட்டு, இறுதியாக ஷெல்லி கொடுக்கும் க்ளைமாக்ஸ் பட்டையைக் கிளப்புகிறது.

சக கவிஞன் ஜான் கீட்ஸ் (John Keats) இறந்த போது ஷெல்லி எழுதிய Adonais என்ற (சற்றே நீளமான) இரங்கற்பா மிகவும் பிரபலமானது, துயரம் மிக்கது.

நிலமுடைய பெருங்குடியில் பிறந்திருந்தாலும், சமூக அக்கறை மிக்கவனாக வாழ்ந்தான் ஷெல்லி. அதனாலேயே வீட்டிலிருந்தும், பிறகு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலிருந்தும் விலக்கப்பட்டான். அவனது நெடுங்கவிதைகள் பலவற்றில் இத்தகைய புரட்சிக் கருத்துக்கள் மிளிர்கின்றன. உங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஷெல்லியைப் படித்துப் பாருங்கள். உள்ளொளியை ஏற்றவல்லது அவன் எழுத்து.

Wednesday, July 21, 2004

பொன்னியின் செல்வனில் ஒரு காதல் காட்சி

('என்னைப் பாதிக்கும், எனக்கு ஆச்சர்யங்கள் தரும் எழுத்துக்களைப் பற்றி இங்கு கூறுவேன்' என்று preamble கொடுத்து விட்டு இன்னும் நம்ம ஆள் பத்தி எழுதாமல் இருக்கிறாயே, இது blasphemy இல்லையா? என்று க்ருபாவோ பவித்ராவோ என் மேல் குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் முன்னால் இந்தப் பதிவு.)

என்னை எழுதத் தூண்டியவர்களுள் முக்கியமானவர் கல்கி. அவர் எழுத்தைப் படித்து பேச்சு மூச்சில்லாமல் பிரமிப்பில் ஆழ்ந்து போய் நான் நின்ற கணங்கள் என் வாழ்நாளில் பாதிக்கு மேல் இருக்கும். அதற்குக் காரணம் ஒரு கதையல்ல. ஒரு கதாபாத்திரம்: வந்தியத்தேவன். தமிழ் கூறும் நல்ல்லுலகில் என்னைப் போன்ற பல ஆண்களுக்கு மிகச் சிறந்த ஒரு ஆதர்சமாக இருப்பது வந்தியத்தேவனே என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கைகளில் ஒன்று.

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரத்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்
என்று நமக்கு முதல் பக்கத்தில் அறிமுகமாகும் வாணர்குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன், அதன் பிறகு பொன்னியின் செல்வன் புதினத்தில் செல்லும் இடங்கள், ஏற்படுத்திக் கொள்ளும் அனுபவங்கள், புரியும் வீர தீரச் செயல்கள், சமயோசிதமாகச் செய்து முடிக்கும் காரியங்கள், முன்யோசனையின்றி மாட்டிக் கொள்ளும் தருணங்கள் என்று அத்தனையும் அருமையான காட்சிகள். இவை எல்லாவற்றிலும் சிறந்தது, குந்தவை மேல் அவன் கொள்ளும் காதலும், அவன் மேல் குந்தவை கொள்ளும் காதலும். சக்கரவர்த்தியின் மகளுக்கும் நாடோடி வீரனுக்கும் கல்கி நுணுக்கமாகப் போடும் அந்த முடிச்சு மிகச் சுவாரஸ்யமானது.

குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த காட்சி, சிறையிலிருக்கும் வந்தியத்தேவனிடம் குந்தவை தன் மனதை வெளிப்படுத்தும் காட்சி. பிரமாதமான வசனங்களுடனும் வர்ணனைகளுடனும் காதலின் உச்சத்தை எளிமையாக எய்தியிருப்பார் கல்கி.

(வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறான். இளவரசி குந்தவை அவனைப் பார்க்க அங்கு வந்திருக்கிறாள்.)

"... போதும்! என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்..."

"அப்படியானால் உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியது தான்" என்றாள்.

வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான்.

"நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?"

"இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?"

இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு,
"ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?" என்றாள்.
--மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு--
"அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்."

"நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர் தப்ப முடியாது..."

"சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?"

"இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்..."

"பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?"

"என்னுடைய இதயமாகிய சிறைச் சாலையைத் தான் சொல்கிறேன்."

"தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி..."

"யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒரு நாள் பழைய கதை ஆகலாம்."
--அவன் சொன்னதை வைத்தே குந்தவை அவனை மடக்கும் புத்திசாலித்தனம்--
"ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதன்மந்திரியும் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணிய மாட்டார்கள்..."

"இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?"
--மீண்டும் அவன் சொன்னதை வைத்தே அவனை மடக்கும் சாதுரியம்--
"அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்."

"அதிலே தான் என்ன தவறு?"

"நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம் தான் தவறு..."

"'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?"

"அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ?"
--இப்போது வந்தியத்தேவனின் முறை, குந்தவை சொன்னதை வைத்தே அவளை மடக்குவது--
"ம்! பொருந்தும் தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்..."
--வந்தியத்தேவனும் நாமும் கூட எதிர்பாராத வகையில் குந்தவை இவ்விதம் தன் தவறை ஒப்புக் கொள்வது--
"நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் வலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்..."

"இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?"

"ம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் லயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!..."

"மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்..."

"தேவி, தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவர வேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது. விடை கொடுங்கள்..."

"ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?"

"தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்..."

இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனது உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.
--என் பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்று தன் திருக்கரத்தை நீட்டியிருந்தால் கூட நான் இவ்வளவு பரவசம் அடைந்திருப்பேனா தெரியாது--
"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாதரில் சிலர் கணவனுடன் உடன்கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்..!"

"கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!"

"உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம், இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."

வல்லவரையன் சொல்லிழந்து, செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.
--ஒவ்வொரு ஆணும், தன்னிடம் வந்து இப்படி ஒரு பெண் சொல்ல மாட்டாளா என்றும், ஒவ்வொரு பெண்ணும், தான் இப்படி சொல்லத்தக்க ஒரு ஆண் நமக்குக் கிடைக்க மாட்டானா என்று காதல் மயக்கத்தோடு நினைத்துப் பார்த்து ஏங்க வைக்கும் அற்புதமான முடிவு--

Historical Romance எழுதுவதில் கல்கியை வெல்ல இனியும் எவனும் பிறந்து வர முடியாது. ஆமாம்!!

Sunday, July 18, 2004

பாப்லோ நெரூதா (Pablo Neruda)

அண்மையில் நூற்றாண்டு கண்ட பாப்லோ நெரூதா என்ற ஸ்பானிய கவிஞரைப் பற்றி ஊரெங்கும் பேச்சாயிருந்தது. தி ஹிந்துவில் ஞாயிறு தோறும் பத்தியொன்று எழுதும் ஷாஷி தரூரும் (Shashi Tharoor) கூட இந்த வாரம் அவரைப் பற்றித் தான் எழுதியிருந்தார். 'One of the greatest literary figures of last century' என்று.

பாப்லோ நெரூதா கம்யூனிஸம் பற்றி எழுதிய சில வரிகள் அதில் இடம் பெற்றிருந்தன:
You have given me brotherhood towards the man I do not know.
You have given me the added strength of all those living.
You showed me how one person's pain could die in the victory of all.
You have made me indestructible, for I no longer end in myself.

எத்தனை அபாரமான வரிகள். தான் நம்பிக்கை வைத்துள்ள சித்தாந்தத்தின் உயர்ந்த சிந்தனையை இதை விட அழகாக யாரும் எழுதி விட முடியாது. பிரமித்துப் போனேன்.

முதல் வேலையாக நெரூதாவின் வேறு கவிதைகளைத் தேடினேன். கண்ணில் சிக்கியது இது. காதல் தோல்வியைப் பாடிச் செல்லும் ஒரு உன்னதமான கவிதை. ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட இதில் இவ்வளவு ஜீவன் இருக்க முடியும் என்றால் ஸ்பானிய மூலக் கவிதை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் படித்த மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று இது. பொதுவாக நான் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்ய முயல்வேன். இந்தக் கவிதைக்கு என்னால் அதை நினைக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு தயக்கமாக இருக்கிறது. காதலின் ஆழத்தையும், பிரிவின் துயரத்தின் உச்சத்தையும் மிகுந்த அழகுணர்ச்சியோடும் மிகுந்த இயலாமையோடும் சொல்லுகிற கவிதை இது:
I can write the saddest poem of all tonight.

Write, for instance: "The night is full of stars,
and the stars, blue, shiver in the distance."

The night wind whirls in the sky and sings.

I can write the saddest poem of all tonight.
I loved her, and sometimes she loved me too.

On nights like this, I held her in my arms.
I kissed her so many times under the infinite sky.

She loved me, sometimes I loved her.
How could I not have loved her large, still eyes?

I can write the saddest poem of all tonight.
To think I don't have her. To feel that I've lost her.

To hear the immense night, more immense without her.
And the poem falls to the soul as dew to grass.

புல்லின் மேல் பனித்துளி வந்து விழுவது போல் என் ஆன்மாவில் விழுகிறது கவிதை. எத்தனை அருமையான சொற்சித்திரம்.!!
What does it matter that my love couldn't keep her.
The night is full of stars and she is not with me.

That's all. Far away, someone sings. Far away.
My soul is lost without her.

As if to bring her near, my eyes search for her.
My heart searches for her and she is not with me.

The same night that whitens the same trees.
We, we who were, we are the same no longer.

I no longer love her, true, but how much I loved her.
My voice searched the wind to touch her ear.

Someone else's. She will be someone else's. As she oncebelonged to my kisses.
Her voice, her light body. Her infinite eyes.

I no longer love her, true, but perhaps I love her.
Love is so short and oblivion so long.

Because on nights like this I held her in my arms,
my soul is lost without her.

Although this may be the last pain she causes me,
and this may be the last poem I write for her.

நான் சொல்ல என்ன இருக்கிறது, இதற்கு மேலே?

லஜ்ஜாவதியே

சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த திரைப் பாடலாக அமைந்துவிட்டது இந்த லஜ்ஜாவதியே. 4 தி பீப்பிள் என்ற மலையாளப் படத்தின் தமிழ் மொழிமாற்றமான 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் ஜஸ்ஸீ கிஃப்ட் (Jassie Gift) இசையமைத்துப் பாடியிருக்கும் கானா டைப் பாடல் இது.

மனிதருக்கு குரல் என்னமாய் இருக்கிறது!! 'சர்க்கரைக் குரலில் தேன் தடவிப் பாடுகிறார்' என்று cliche-வாக இருந்தாலும் பரவாயில்லை என்று வர்ணிக்கலாம்.  சில வார்த்தைக் கூட்டங்களை (அதான்ப்பா, சொர்றொடர்களை) அவர் உச்சரிக்கும் போது மட்டும் எப்படித் தான் மாயாஜாலம் நிகழ்ந்து சொக்க வைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் பாடல் பட்டையைக் கிளப்பி விட்டது. SS Music தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை விரும்பிக் கேட்கும் நேயர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

பாடல் வரிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. காதல் பாட்டுக்கேயுரிய romance, தவிப்பு, கொஞ்சூண்டு naughtyness என்று எல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறது. குழந்தைப் பருவ, இளமைப்பருவ நினைவுகளை காதலோடு அசைபோட்டுப் பார்க்கும் சுவையான வரிகள்
 
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ

தொட்டவுடன் ஓடுறியே (2)
தொட்டாசிணுங்கி பெண்தானோ (2)
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி

(அடி லஜ்ஜாவதியே...)

பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம்
பள்ளிக்கூடப் பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம்

பனங்காயின் வண்டியில் பசுமாட்டுத் தொழுவத்தை
சுற்றி வந்து பம்பாய்க்குப் போனதாக சொல்லினோம்

அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
மீண்டும் அந்தக் காலம் வந்து மழலையாக மாற்றுமா

(லஜ்ஜாவதியே...)

காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டித் தவளை விழுந்ததும்
கைகொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா
 
கட்ட வண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்து விட்டு ராஜ ராஜன் என்றதும்

அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும் காதல் கடந்து போகுமா

(லஜ்ஜாவதியே...)

 
பாடலுக்கு பாய்ஸ் படத்தில் வந்த பரத்தும் ஆட்டோகிராஃப் புகழ் கோபிகாவும் போட்டிருக்கும் ஆட்டத்தைப் பற்றிச் சொல்லாவிட்டால் ஜென்மம் சாபல்யம் அடையாது. கலக்கியெடுத்துவிட்டார்கள். குறிப்பாக பாடல் வரியெதுவும் இல்லாமல் கோபிகா தன் முக ரியாக்ஷன்களால் நமக்குள் [சரி, எனக்குள் :-)] ஏற்படுத்தும் பரவசம் இருகிறதே, அது ஒரு sweet and necessary evil.
 
என் அலுவலகத்தில் அடுத்த மாதம், ஆண்டு விழா வருகிறது. அதில் இந்தப் பாடலைப் பாடுவது அல்லது இந்தப் பாடலுக்கு ஆடுவது என்று நான் முடிவு செய்து விட்டேன். கூட சேர்ந்து பாட அல்லது ஆட அலுவலகத்தில் எந்த லஜ்ஜாவதியாவது சம்மதிப்பாளா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். :-)

Wednesday, July 14, 2004

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே...

கொச்சியின் ல மெரிடியன் ஹோட்டல் மிக அழகாக இருக்கிறது. (அங்கிருந்து தான் பதிகிறேன் இந்தப் பதிவை.) தென்னை மரங்கள் சூழ்ந்த லௌஞ்சை ஒட்டினாற்போல கேரளத்தின் தனிப் புகம் மிக்க Backwaters. ஒரு படகுச்சவாரியில் அழைத்துப் போகிறார்கள். விடுமுறையில் வந்தால் போய் வரலாம். அலுவலகப் பணிகளுக்கிடையில் அதற்கு நேரமெடுக்க முடியவில்லை.

பெங்களூரிலிருந்து ஃப்லைட்டில் வரும்போதே ஜன்னல் வழியாகப் பார்த்தால் எங்கெங்கு நோக்கினும் ஆறு, Backwaters, கிளை நதி என்று ஒரே நீர்நிலைகளின் ஆதிக்கம். தமிழ்க்கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறை.

இங்கே படகுச்சவாரியைப் பார்க்கும் போதெல்லாம் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோடிகள் ஓட்டி விளயாடி வருவோம்

மாலை நேரம், ஹோட்டல் லாபியில் தலை முதல் கால் வரை தென்றல் வருடிக் கொடுக்கும் ரம்மியமான வேளையில், கொஞ்சம் கொஞ்சம் நம்ம ஆள் ஜோ சாயலில் இருக்கின்ற ரிஸப்ஷனிஷ்டை ரசித்தபடி கவிதை எழுத வருகிறதாவென்று முயற்சி செய்து பார்த்தேன். ம்ஹூம்..!!

பாரதி சொன்ன மாதிரி, வந்தாளென்றால் தோடிகள் ஓட்டி விளையாட வேண்டுமானால் போகலாம் போலிருக்கிறது.

("கவிதையையே தடுமாற வைத்த கவிதையே" என்றெல்லாம் நான் எழுதினால் அதைக் கவிதையென்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்களென்று தெரியும். அதனால் தான் அநதக் கவிதை எழுதின தாளைக் கிழித்து Backwaters-ல் வீசி விட்டேன்.)

Monday, July 12, 2004

நதிக் காதலன் நான்

என் எழுத்தின் பல தளங்களில் நதிகள் ஒரு குறிப்பிடத்தக்க பாகத்தை வகிக்கின்றன. இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடுமென்று எனக்கு விளங்கவில்லை. சில உதாரணங்கள்:

- எனது முதல் சிறுகதை: நதிக்கரை நாகரிகம் (மரத்தடி குளிர்காலப் போட்டி 2004-க்கு எழுதியது)

- எனது ஆங்கில வலைப்பதிவின் பெயர்: The River of My Life (சக வலைப்பதிவாளர் பவித்ரா, தனது ஆங்கில வலைப்பதிவில் எனக்கு link தரும்போது, என்னை "The River Guy" என்று சொல்லி, "This one is river-mad :-)" என்றும் வர்ணிக்கிறார்.)

- நான் தற்போது தொடர்ந்து எழுதி வரும் நதிக் கவிதைகள்: 1 | 2 | 3 | 4 | 5

இந்த உதாரணங்கள் இல்லாமல், இயல்பு வாழ்க்கையிலேயும் கூட எனக்கு நதிகளைப் பற்றிய ஒரு பிரமிப்பு உண்டு. என் பொறியியல் கல்லூரியின் சார்பில் நாங்கள் சுற்றுலா சென்ற போது ரிஷிகேஷில், லக்ஷ்மண் ஜூலா என்ற பாலத்தில் நின்று கொண்டு, நடுக்கும் குளிரில் பெருநதியாய்ப் பிரவாகமெடுத்துக் கொண்டிருந்த கங்கையைப் பார்த்த போது என்னுள் ஏற்பட்ட பிரமிப்பு அடங்க வெகு காலமாகியது. இயற்கையின் முன்னால் மனிதன் எவ்வளவு சிறியவன் என்று எனக்கு உணர்த்திய ஒரு நிகழ்வு அது.

நதிகளின் மீதான எனது இந்த fascination-க்கு என்ன காரணமாக இருக்கும்?

அப்படியொன்றும் நான் நதியென்னும் தொட்டிலில் மிதந்து, கரைகளில் விளையாடி வளர்ந்தவன் கிடையாது. பத்து வயது வரை தூத்துக்குடியில் வளர்ந்தேன். ஆனால் தாமிரபரணியிலிருந்து ரொம்பத் தூரம். ஒரு தடவையும் போனதே இல்லை. அதற்குப் பிறகு நான் சென்னை வாசி. கூவத்தைப் பார்த்தெல்லாம் நதிகளின் மேல் ஒரு பிடிப்பு வருமென்று நான் நம்பத் தயாராயில்லை. இப்போது சில ஆண்டுகளாக இருக்கும் பெங்களூரில் நதியுமில்லை, கடலுமில்லை.

உலகில் எனக்குப் பிடித்தமான இடம் மதுரை. ஆனால் இது வரை ஒரு முறை கூட வைகை கரை புரண்டு ஓடி நான் பார்த்ததில்லை. (ஒரு முறை மதுரையிலிருந்து அலுவலகப் பணியாக ராமநாதபுரத்துக்கு ஒரு வட இந்திய நண்பனுடன் போய்க் கொண்டிருந்தேன். சாலையில் ஒரு பக்கம் வைகை. அவன் நதியின் பெயர் கேட்க நானும் உணர்ச்சி வசப்பட்டு, வைகையைப் பற்றிக் கேட்டிருந்த கதைகள் பலவற்றை எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன். அவன் கொஞ்ச நேரம் கழித்து, "நானும் எத்தனையோ நதிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் அழுக்குத் துணிகளை எடுத்து வந்து அலசி எடுத்து எங்காவது கொண்டு சென்று காயப் போடுவார்கள். ஆனால் இப்போது தான் முதல் முறையாக வீட்டிலிருந்து துணிகளை அலசிக் கொண்டு வந்து நதியிலே (நதியோடிய இடத்திலே) காயப் போடுவதைப் பார்க்கிறேன்" என்றான். என் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வதென்று எனக்குத் தெரியாமற் போயிற்று.) :-(

'நதிக்கரையில் தோன்றிய மனித நாகரிகத்தின் நதி குறித்த fascination என்னுள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது' என்றால் நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு, 'தம்பி! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்-னு உனக்கே தோணலியா?' என்பீர்கள். வேண்டாம்.

டார்வினின் விரிவளர்ச்சித் தத்துவப்படி (theory of evolution) நாமெல்லோரும் நீர் வாழ் உயிரினங்களிலிருந்து விரிவளர்வடைந்து வந்தோமென்று வைத்துக் கொண்டாலும் கூட என்னைப் போலப் பிறருக்கு நதியின் மேல் இவ்வளவு ஈடுபாடு இருக்குமாவென்று தெரியவில்லை. பல்வேறு நீர் ஆதாரங்கள் இருக்கும் போது குறிப்பாக நதி மீது மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு என்றும் புரியவில்லை.

ஒரு வேளை நதியின் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறதோ என்னவோ. ஓரிடத்தில் பிறந்து, ஓடும் திசையெல்லாம் முடிந்ததைச் சேர்த்து, வளமை கொடுத்து, தாற்காலிகமாக கடலில் முடிந்து, மீண்டும் ஓரிடத்தில் பிறந்து...

நானும் நதி போல வாழ விரும்புகிறேனோ என்னவோ?

ரிதம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய நதிப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

நடந்தால் ஆறு, எழுந்தால் அருவி, நின்றால் கடலல்லோ.

இங்கு விழுந்தால் அருவி என்று சொல்லாமல் எழுந்தால் அருவி என்று சொல்லும் இடத்தில் தான் என்ன ஒரு நயம்.

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரை தொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே.

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்,
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே.
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருனை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே.

வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் பட்டால் உருகும்
நீரும் ......... ஒன்று வாடையிலே.

தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் ஓஹோ.

தீங்கனியில் சாறாகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே.

நதியே நதியே காதல் நதியே..!!

Sunday, July 11, 2004

நான் எழுதும் நேரம் - 10:00 PM முதல் 02:00 AM வரை

காலை ஏழே முக்கால் மணிக்கு அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டால் இரவு ஒன்பது மணிக்குத் தான் வீடு வந்து சேர்வேன். (அதிகப் படிப்பும், அதிக சம்பளமும் கொண்டவனுக்கு, அதிக வேலையும் இருப்பது நியாயம் தானே?) பிறகு சமைத்து சாப்பிட்டு முடிக்க இரவு பத்து மணி ஆகி விடும். பிறகு தான் எழுத்தும் வாசிப்பும்.

ஏன் அந்த நேரத்தில் எழுதுகிறாய் என்று கேட்கும் சிலரிடம் 'பின்னிரவு இரண்டு மணீக்கு ZEE English சேனலில் ஒளிபரப்பாகும் FRIENDS ஆங்கில நகைச்சுவைத் தொடரைப் பார்க்க வேண்டும். அது வரை விழித்திருக்க நேரும் நேரத்தை எழுதவும் படிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறேன்' என்று நான் சொல்வதுண்டு. அது பொய்யோ என சில நேரம் சந்தேகிக்கிறேன். 'எனக்கு அத்தனை நேரம் வரை எழுதப் பிடித்திருக்கிறது. அதற்காக இரண்டு மணிக்கு அந்தத் தொடரைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்தை வலிந்து உருவாக்கிக் கொண்டேன்' என்பது உண்மைக்கு சற்று அருகாமையில் இருக்கக்கூடும்.

எழுதுவதற்கு எதுவும் இல்லாமலெல்லாம் கிடையாது. எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் வலைப்பதிவுக்கு கட்டுரைகள் எழுத வேண்டியதிருக்கும். எனக்குப் பிடித்தமான கலீல் கிப்ரான் கவிதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்ய வேண்டும். எப்போதாவது ஒரு திரைப்பட விமர்சனம். இப்போது இந்த வலைப்பதிவுக்காக எழுதுவதும். பிறகு இருக்கவே இருக்கின்றன என்னுடைய கதை முயற்சிகள். இப்படி நிறைய இருக்கின்றன எழுத.

நிறைய எழுத வேண்டும் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஒரு வேளை இரவின் தனிமையில் தான் எனக்கு எழுதப் பிடிகிக்கிறதோ? ஆனால் அது ஓசைகளற்ற தனிமை என்று சொல்லி விட முடியாது. வீட்டில் தங்கியிருக்கும் மற்ற நண்பர்கள் தூங்கப் போய்விட்டதால் மனிதப் பேச்சுகளற்ற தனிமை என்று மட்டுமே சொல்லலாம். டி.வி.யிலோ, MP3 பிளேயரிலோ நான் ஒலிக்க விடும் பாடல்களின் மெல்லிய இசை என்னைச் சூழ்ந்திருக்கும்படியான இந்தத் தனிமை, எந்த வகையில் சேர்த்தி என்று புரியவில்லை. அன்றியும், எனது Musings வலைப்பதிவில் நான் இடும் கவிதைகள், சிறுகதைகள் அனைத்துமே (மரத்தடியிலும் இவற்றை இடுகிறேன் நான்) அலுவலக மதிய உணவு இடைவேளையின் போதோ, வெளிசெல்லும் சிறு ஆட்டோ பயணங்களின் போதோ, மேலதிகாரி தன் மீட்டிங் முடித்து வரக் காத்திருக்கும் போதோ, சில சமயம் பெருந்தலைகள் பேசிப் பேசிப் போரடித்துக் கொண்டிருக்கும் மீட்டிங்கின் போதோ கூட எழுதப்படுபவை தான். எனவே இரவில் மட்டுமே என் கற்பனைக் குதிரை ஓடும் என்பதெல்லாம் சரியல்ல.

ஒரு வேளை அன்றாடம் எழுதிப் பழகவில்லையென்றால் நாளை எனக்கு என் எழுத்து மறந்து விடும், அழிந்து விடும் என்ற அச்சம் தான் காரணமோ? என் பள்ளிக் கால நண்பன் ஒருவன். அந்த வயதில் பரதம் அவனிடம் அப்படிக் குடி கொண்டிருந்தது, ஞானசம்பந்தரிடம் தமிழ் குடிகொண்டிருந்ததைப் போன்று. கல்லூரிப் படிப்புக்காக நானும் அவனும் வெவேறு ஊர்களுக்குப் பிரிந்து விட்டாலும், கல்லூரியிலும் அவன் தனது நடனத்தைக் கைவிடவில்லை என்றறிந்தே இருக்கிறேன். இன்றோ, மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிந்து, பரதத்துக்கு நேரமில்லாமல் போய், தனக்கு ஒரு காலத்தில் கைவந்த, கால்வந்த கலை தன்னைக் கொஞ்சங்கொஞ்சமாகக் கைவிட்டுக் கொண்டிருப்பதாக அவன் புலம்புவதைக் கேட்கும் போது என் மனதையும் அறிவையும் பற்றிப் படரும் பதற்றம் தான் என்னை எழுதத் தூண்டுகிறதோ, இரவென்றும் பாராமல்?

விடை காண முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன், இவ்வகைக் கேள்விகளோடு. சங்கச் சித்திரங்கள் தொடரில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதைப் படிக்கும் வரை. அவர் இது பற்றி அழகாகச் சொல்கிறார் இப்படி:
இப்படி எழுதிக் குவிக்க வேண்டுமா என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. 'ஒருவன் தன் எழுத்தியக்கத்தை ஒரு போதும் பிரக்ஞைப்பூர்வமாக கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது' என்று என் ஆசானும், மலையாள எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியருமாம பி.கெ.பாலகிருஷ்ணன் என் தொடக்க காலத்தில் சொன்னார். எழுத்து எப்போதுமே எழுத்தாளனை மீறிய ஒரு உத்வேகத்தின் விளைவு. அதற்கு தன்னை ஒப்புக் கொடுப்பதே அவன் செய்யக் கூடியது. கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் அவன் இழப்பது பிறகு ஒரு போதும் திரும்பாது. அந்த உத்வேகம் அவனைக் கைவிடும் காலம் ஒன்று வரும். அப்போது ஒரு பக்கம் எழுத ஒரு தேரை நகர்த்துமளவுக்கு அவன் சிரமப்பட வேண்டியிருக்கும்.

சரி தான். எனக்கு இது பயமாகவோ நம்பிக்கையின்மையாகவோ தோன்றவில்லை. இயலாமையின் பாற்பட்ட யதார்த்தமாகவே நான் இதைப் பார்க்கிறேன். இந்த யதார்த்தமே என்னையும் எழுதத்தூண்டுவதாக நான் நம்பிக்கை கொள்கிறேன்.

Saturday, July 10, 2004

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் புரிந்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

ஏனென்று தெரியாமலேயே பாரதியின் வரிகளில் எனக்கு மிகப் பிடித்தவையாக இவை தான் இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக அந்தக் கடைசி வரி. யாரிடம் சொல்கிறான், யாருக்காகச் சொல்கிறானென்று முதல் முறை படித்த போது புரியாவிட்டாலும், என்ன சொல்கிறானென்று எனக்குப் புரிந்தது. "நான் வீழ மாட்டேன்" என்ற அவனது பிரகடனமாகத் தான் நான் அன்று புரிந்து கொண்டேன். இன்றும் எனக்கு அது தான் பிடித்திருக்கிறது. வேறு பொருளினை நான் அறிந்து கொள்ள முற்படவில்லை.

எனக்கும் வீழ்ந்து கிடப்பது பிடிக்காது என்பதாலோ? இணையத்தில் நான் கண்டு கொண்ட மிகப் பிரியமான நண்பர் ரவியா, என்னைப் பற்றி இப்படிச் சொல்வார்: "மீனாக்ஸ், நீ ரொம்பவும் அதிகமாக perfection-க்கு முயல்கிறாய்." எவ்வளவு தூரம் சாதிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படி முயல்கிறேன் என்பது உண்மை தான். வீழ்ந்தாலோ, அல்லது வீழ்த்தப்பட்டாலோ முக்கி முனகி, திக்கித் திணறி மீண்டும் மேலேறி உச்சிக்கு வரத் தான் நான் விரும்புகிறேன். பெரும்பாலான நேரங்களில் இது சரி தானென்றாலும், எல்லா நேரங்களிலுமா? என் கவிதை ஒன்றைச் சிலர் கடுமையாக விமர்சனம் செய்யும் போது கூட, அந்தக் கவிதையையும் விமர்சனங்களையும் பொறுமையாக அணுகி ஆராய்ந்து குற்றங்கள் இருப்பின் களைய எனக்குத் தோன்றுவதில்லை. மாறாக, விமர்சித்தவர்கள் கண் இமைக்கும் நேரத்துக்குள் இன்னும் நாலு கவிதைகளை எழுதி அனுப்பி, 'இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்கத் துடிக்கும் எனது வெறி சரியா தவறா என்று சரியாகப் புரிவதில்லை.

எதிர்பாராமல் எனக்கு சில தோல்விகள் நேர்ந்து விடும்போது, என் நெருங்கிய நண்பர்களிடம் கூட அவற்றைப் பகிர்ந்து கொள்ள எனக்குப் பிடிக்கவில்லை. வெட்கப்படுகிறேன். அவமானத்தால் குறுகிப் போகிறேன். எதுவுமே நடக்காதது போல் அவர்கள் முன் நடிக்கத் தலைப்படுகிறேன். இது நிறையப் பேருக்கு நடக்கச் சாத்தியமுள்ளதே என்றாலும், எனக்குள் சில அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக உணர்கிறேன். தோல்வியில்லாத எவனும் இருக்க முடியாது என்பதை நான் நம்ப மறுக்கிறேனோ? அல்லது எனது தோல்விகளை நான் சரியாக அணுகிப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேனோ? நண்பனின் தோளில் கை போட்டு சிரிப்பதைப் போலவே, நண்பனின் தோளில் முகம் புதைத்து அழுவதிலும் சில நன்மைகள் உண்டு என்பதை நான் கற்றுக் கொள்ளத் தயங்குகிறேன்.

இவற்றையெல்லாம் நேர் செய்து என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவரை, நான் வீழ்வேனென்றே நினைக்கிறேன்.