நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் புரிந்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
ஏனென்று தெரியாமலேயே பாரதியின் வரிகளில் எனக்கு மிகப் பிடித்தவையாக இவை தான் இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக அந்தக் கடைசி வரி. யாரிடம் சொல்கிறான், யாருக்காகச் சொல்கிறானென்று முதல் முறை படித்த போது புரியாவிட்டாலும், என்ன சொல்கிறானென்று எனக்குப் புரிந்தது. "நான் வீழ மாட்டேன்" என்ற அவனது பிரகடனமாகத் தான் நான் அன்று புரிந்து கொண்டேன். இன்றும் எனக்கு அது தான் பிடித்திருக்கிறது. வேறு பொருளினை நான் அறிந்து கொள்ள முற்படவில்லை.
எனக்கும் வீழ்ந்து கிடப்பது பிடிக்காது என்பதாலோ? இணையத்தில் நான் கண்டு கொண்ட மிகப் பிரியமான நண்பர் ரவியா, என்னைப் பற்றி இப்படிச் சொல்வார்: "மீனாக்ஸ், நீ ரொம்பவும் அதிகமாக perfection-க்கு முயல்கிறாய்." எவ்வளவு தூரம் சாதிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படி முயல்கிறேன் என்பது உண்மை தான். வீழ்ந்தாலோ, அல்லது வீழ்த்தப்பட்டாலோ முக்கி முனகி, திக்கித் திணறி மீண்டும் மேலேறி உச்சிக்கு வரத் தான் நான் விரும்புகிறேன். பெரும்பாலான நேரங்களில் இது சரி தானென்றாலும், எல்லா நேரங்களிலுமா? என் கவிதை ஒன்றைச் சிலர் கடுமையாக விமர்சனம் செய்யும் போது கூட, அந்தக் கவிதையையும் விமர்சனங்களையும் பொறுமையாக அணுகி ஆராய்ந்து குற்றங்கள் இருப்பின் களைய எனக்குத் தோன்றுவதில்லை. மாறாக, விமர்சித்தவர்கள் கண் இமைக்கும் நேரத்துக்குள் இன்னும் நாலு கவிதைகளை எழுதி அனுப்பி, 'இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்கத் துடிக்கும் எனது வெறி சரியா தவறா என்று சரியாகப் புரிவதில்லை.
எதிர்பாராமல் எனக்கு சில தோல்விகள் நேர்ந்து விடும்போது, என் நெருங்கிய நண்பர்களிடம் கூட அவற்றைப் பகிர்ந்து கொள்ள எனக்குப் பிடிக்கவில்லை. வெட்கப்படுகிறேன். அவமானத்தால் குறுகிப் போகிறேன். எதுவுமே நடக்காதது போல் அவர்கள் முன் நடிக்கத் தலைப்படுகிறேன். இது நிறையப் பேருக்கு நடக்கச் சாத்தியமுள்ளதே என்றாலும், எனக்குள் சில அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக உணர்கிறேன். தோல்வியில்லாத எவனும் இருக்க முடியாது என்பதை நான் நம்ப மறுக்கிறேனோ? அல்லது எனது தோல்விகளை நான் சரியாக அணுகிப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேனோ? நண்பனின் தோளில் கை போட்டு சிரிப்பதைப் போலவே, நண்பனின் தோளில் முகம் புதைத்து அழுவதிலும் சில நன்மைகள் உண்டு என்பதை நான் கற்றுக் கொள்ளத் தயங்குகிறேன்.
இவற்றையெல்லாம் நேர் செய்து என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவரை, நான் வீழ்வேனென்றே நினைக்கிறேன்.
0 Comments:
Post a Comment
<< Home