Thursday, April 20, 2006

காப்பி புராணம்

நீருக்குப் பிறகு உலகில் அதிகமாகப் பருகப்படும் பானம் என்று கருதப்படுகிறது காப்பி. காப்பிக் கொட்டைகளில் இருக்கும் கஃபீன் (caffiene) மூலம் கிடைக்கும் உற்சாக உணர்வு மற்றும் அதைத் தாங்கி வரும் பானத்தின் திடம் மற்றும் நறுமணம் ஆகிய மூன்றும் காப்பியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குக் காரணம் எனலாம்.

காப்பியின் வரலாறு எத்தியோப்பியாவில் கி.பி. 300-ல் வாழ்ந்த கல்டி (Kaldi) என்ற இடையர் வழியாகத் துவங்கியது என்பது பரவலான நம்பிக்கை. அவரது மந்தையைச் சேர்ந்த ஆடுகள், ஒரு செடியின் சிவப்பு கொட்டைகளை உண்ட பிறகு மாலை வரை மிகுந்த உற்சாகமாக இருப்பதைக் கண்ட கல்டி, தானும் அக்கொட்டைகளை உண்டு அதே உணர்வைப் பெற்றார். தன் ஊரில் வசித்து வந்த துறவிகளிடம் இதை அவர் கூறவே அவர்களும் இரவு நேரத்தில் தூங்காமல் இறை வழிபாடு செய்ய காப்பிக் கொட்டைகளை உண்ணத் துவங்கினர். தற்செயலாக, இக்கொட்டைகளை வறுத்து, பொடித்து, பானமாக்கிப் பருகினால் அதே உணர்வுடன் நல்ல சுவையும் கிடைப்பதைக் கண்டுபிடித்தனர். இப்படிப் போகிறது கதை.

அந்தக் காலத்தில் ஃபேரக்ஸ் (Farex) என்ற சத்துப் பொடி நம் நட்டில் புகழ் பெற்று விளங்கியது. சிறு வயதில் ஃபேரக்ஸை மிக விரும்பி உண்டு ஊட்டச்சத்துடன் வளர்ந்தவன் நான் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். இன்றைய தேதியிலும் நான் கொழுகொழுவென இருப்பதற்கு ஃபேரக்ஸ் ஒரு அடிப்படைக் காரணம் :-). அதற்குப் பிறகு என்றைக்கு காப்பியின் ருசி எனக்குக் காண்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து தீவிரமான காப்பி ரசிகனாக நான் மாறி விட்டேன். கொஞ்சம் பரம்பரைக் காரணமும் இருந்திருக்கலாம். கிராமத்தில் பல்வேறு தொழில்கள் செய்து வந்த என் அப்பா வழித் தாத்தா, சில வருடங்கள் காப்பிக் கடையும் வைத்திருந்தார். அவர் காப்பி ஆற்றித் தரும் அழகே அழகு.

பள்ளிப் பருவம் வரை அம்மா தரும் காப்பி மட்டுமே பெரிதும் குடிக்கப்பட்டாலும், மாலை நேரங்களில் நண்பர்களோடு விளையாடப் போகையில் அவர்களின் வீட்டிலும் காப்பி குடித்தே வளர்ந்திருக்கிறேன். கப்களில் காப்பி குடிப்பதை விடவும் எவர்சில்வர் டம்ளர்களில் காப்பி குடிப்பது ருசிகர அனுபவம். கைகளில் அந்தச் சூடு பரவிய வண்ணம் இருக்க, சூடு ஆறுவதற்குள் காப்பியைக் குடித்து முடிப்பது சுகம். தலைவலிக்கு எளிய நிவாரணமாக, சூடான காப்பி நிரம்பிய எவெர்சில்வர் டம்ளர்களை இலேசாக நெற்றியில் தேய்த்து எடுப்பது எனக்கு நெடுநாள் பழக்கம். பயந்தோடிவிடும் எனது தலைவலி.

இவற்றையும் விட, கண்ணாடி க்ளாஸ்களில் தெருவோரக் கடைகளில் காப்பி குடிப்பது இன்னும் சுவாரஸ்யம். 'ஸ்ட்ராங் காப்பி' என்று ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து விட்டு நின்றால், மாஸ்டர் கொட்டையின் வடிநீரை எடுத்து பால் கலந்து அருமையான நிறத்திற்குக் கொண்டு வந்து, கடைசியில் கையில் கொடுக்கும் முன்னால் கொதிக்கும் பாத்திரத்தின் ஓரங்களிலிருந்து பால் நுரையை கொஞ்சமாய்க் கரண்டியில் அள்ளி டம்ளரில் மேலாக நிரப்பித் தருவாரே, அட்டகாசம் தான் போங்கள்.

காப்பியைக் குடிப்பதிலும், அதை உறிஞ்சி மிடறு மிடறாக உடனே விழுங்கி விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை. கொஞ்சம் டம்ளரிலிருந்து உறிஞ்சி எடுத்து வாய்க்குள் முழுமையாக நிரப்பி, நாக்கை அதில் ஒரு சுழற்று சுழற்றி, நாக்கின் சுவை மொட்டுகள் அனைத்தும் அதில் நனைந்து அந்த சுகத்தை ஒரு விநாடியாவது கண்மூடி அனுபவித்து விட்டு, அப்புறம் தொண்டையை நனைத்து உள்ளே விழுங்குவதே காப்பி குடிப்பதில் உள்ள நுட்பமான செயல்.

கல்லூரிக் காலங்களில் தினமும் மாலை மெஸ்ஸில் காப்பி இலவசமாக வழங்கப்படும். அனைவரும் மெஸ்ஸுக்கு வந்து தான் குடிக்க வேண்டும். இதனால் மதியம் ஆய்வக வகுப்பு (laboratory class) இருந்தால் அதில் பரிசோதனையை முடித்து விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து காப்பி குடிப்போம். கூடப் படிக்கும் அனைத்து பெண்களும் அப்படியே வந்து குடிப்பார்கள் என்பதால், கல்லூரிச் சாலை ஓரமாக நின்று காப்பி குடித்தபடியே தேவதை தரிசன்ம் காண்பது மிக அழகு. அப்போது கூட காப்பியின் இனிமைக்கு காட்சியின் இனிமை ஈடாகவில்லை என்பதே எனது அனுபவம். (சும்மாவா சொன்னார்கள் ஒரு நகைச்சுவை வாசகம்: 99% of the girls in the world are beautiful, the remaining 1% are studying / studied engineering with me.)

வேலைக்குப் போகத் துவங்கிய பிறகு தான் காஃபி டே (Cafe Coffee Day), க்விக்கிஸ் (Qwikys), பாரிஸ்டா (Barista) போன்ற காப்பி சங்கிலிக் கடைகளின் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட வசதியாக குளிர்ந்த காப்பிகளும் எனக்கு அறிமுகமாயின. மோசமில்லை என்றாலும் சூடான காப்பியின் இனிமையை அவற்றால் ஈடு செய்ய முடியவில்லை என்பதே எனது தீர்ப்பு. வெவ்வேறு விதமான காப்பிகளை அங்கே ருசி பார்த்திருக்கிறேன். குறிப்பாக பெங்களூரில் க்ராஸ்வேர்ட் (Crossword) என்ற புத்தகக் கடை உள்ளேயே ஒரு காஃபி டே இருக்கும். புத்தகங்களை வாங்கி விட்டு, அங்கு அமர்ந்து காப்பி குடித்தபடி புத்தகங்களை வாசிக்கத் துவங்கி விடுவது எனது வழக்கம்.

பெங்களூர் கோரமங்கலாவில் நான் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் காஃபி வேர்ல்ட் (Coffee World) என்ற புதிய கடை துவங்கப் பட்ட போது மிக மகிழ்ந்தேன். இரவுகளில் சினிமா பாரடைஸோ வரை நடந்தே சென்று டி.வி.டி.க்கள் எடுத்து வரும் வழியில் அங்கே நுழைந்து காப்பி குடித்து வருவது எனது வாடிக்கை. காஃபி வேர்ல்ட், பெங்களூர்வாசிகளுக்கு நான் சிபாரிசு செய்யும் நிறுவனம்.

இப்போது சென்னை திரும்பி விட்ட பிறகு எங்கள் பகுதியின் மாஸ்டர் கடையில் தான் வழக்கமாக காப்பி குடிக்கும் வழக்கம். காலை நடைபயிற்சி முடித்துத் திரும்பி வரும் போது ஆறு மணிக்குக் கடை திறக்கப்பட்டதும் முதல் வாடிக்கையாளர் நானே. தவிர மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிவதால் பணியிலும் ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு வரை தானியங்கி இயந்திரத்தின் காப்பி குடிப்பது வாடிக்கை. அமெரிக்க க்ளையண்ட்களுடன் தொலைபேசி மாநாடு (conference call) முடித்து அவசியம் ஒரு காப்பியாவது தேவைப்படுகிறது என்பது எனது அனுபவம்.

காப்பிக் கொட்டைகளின் ருசிக்கு அவை வளரும் மண்ணும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க் பிரதேசத்திற்கு அலுவல் காரணமாகப் போயிருந்தபோது நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து காவிரி ஆறு வரை ஒரு trekking போனோம். அப்போது வழியெங்கு காப்பித் தோட்டங்கள் மிக ரம்மியமாக இருந்தன. அங்கு வளர்ந்த காப்பிக் கொட்டைகளிலிருந்து தயார் செய்யப்பட்ட காப்பி வித்தியாசமான சுவையோடு தான் இருந்தது.

சென்ற ஆண்டு திண்ணை இதழும், மரத்தடி குழுவும் நடத்திய அறிவியல் புனைகதை போட்டிக்கு நான் எழுதி அனுப்பிய கதையில், எதிர்காலத்தில் காப்பிக் கடைகள் எப்படி வடிவம் பெறும் என்பதில் எனது கற்பனையை இந்த பிரத்தியேக மண் சார்ந்த சுவை என்ற சமாசாரத்தில் புகுத்தியிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி (எதிர்காலம் என்று ஒன்று என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற கதை):

அந்த இளைஞன் மறு வாசல் வழியாக இறங்கிக் கொண்டிருந்தான். நேராக நடந்து காஃபி-டே' கடையில் போய் நின்றான்.
"ஒரு மைசூர் காஃபி" என்றான்.

கடையிலிருந்த பணியாளர் "நல்ல தேர்வு" என்று சொல்லிப் புன்னகைத்து விட்டு, தனக்கு முன்னாலிருந்த சிறிய ஃப்ரிட்ஜ் அளவிலான மெஷினை ஆன் செய்தார். 'மைசூர்' என்று எழுதியிருந்த பெட்டியிலிருந்து ஒரு பெரிய கரண்டியால் மண் எடுத்து மெஷினுக்குள் போட்டார். ஒரு விதையை உள்ளே போட்டு, பிறகு தண்ணீருக்கான பச்சை பொத்தானை அழுத்தினார். தண்ணீர் மெஷினுக்குள் வழிந்து மண்ணை நனைத்தது. சற்று நேரத்தில் கண்ணெதிரில் அந்த மாயம் நிகழ்ந்தது. ஒரு காப்பிச் செடி மெஷினுக்குள் முளை விட்டு வளர்ந்து, பச்சை நிறத்தில் எல்லிப்டிகல் இலைகளை உருவாக்கிக் கொண்டு, பூக்கள் மலர்ந்து, கொட்டைகள் ஏற்படுத்தி, அவை பச்சையிலிருந்து சிகப்பும் பிரவுனும் கலந்த நிறத்துக்கு மாறின. ஒரு ரோபோ கரம் எங்கிருந்தோ முளைத்து வந்து தகுதியான கொட்டைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பறித்தது. பறித்த காஃபி கொட்டைகளை அரவைக்குள் அனுப்பி அரைத்து, ஃப்ளேவர் சேர்த்து கொதிக்கும் பாலில் கலந்து ஒரு கோப்பையில் நிரப்பி வெளியே அனுப்பி வைத்தது. இரண்டு நிமிடங்களில் சுவையான 'லொக்கேஷன் காஃபி' தயார்.

அவன் பணம் கொடுத்து விட்டு கோப்பையை எடுத்து பருகி,
"எத்தனை முறை இதைப் பார்த்தாலும் சலிப்பதேயில்லை" என்றான்.

பணியாளர் சில்லறையைக் கொடுத்து,
"உண்மை தான். சிறியவர், பெரியவர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இது பிடித்திருக்கிறது. எங்கள் சேவையைப் பயன்படுத்தியதற்கு மிக்க நன்றி" என்றார்.

காப்பியைப் பற்றி நான் படித்த மிகச் சிறந்த வர்ணனை, ப்ரெஞ்சு அறிஞர் டாலிரேண்ட் (Talleyrand) கூறியதே ஆகும். அவரது வர்ணனை: "Black as the devil, hot as hell, pure as an angel, sweet as love." என்னை போலவே அவரும் ஒரு சிறந்த ரசிகராய் இருந்திருக்க வேண்டும்.

அது சரி, இப்போது எதற்கு திடீரென்று இந்த நீளமான காப்பி புராணம் என்று தானே கேட்கிறீர்கள்? என்ன தான் சுவையாக இருந்தாலும், இத்தனை காப்பி குடித்தால் உடலுக்குக் கேடு என்று கட்டிக்கப் போகிற பெண் சொன்னதால் அண்மையில் சென்ற வாரத்திலிருந்து என் உயிரினும் மேலான, என் ரத்தத்தின் ரத்தமான, என்னை வாழ வைக்கும் தெய்வமான என் அருமைக் காப்பியை நான் துறந்து விட்டேன். காப்பி என்பது ஒரு பானமல்ல, அது ஒரு இனிமையான ஞாபகம் என்று சொல்பவர்கள் உண்டு. என்னளவில் அது உண்மையாகி விட்டது. அதன் இனிமையான நினைவுகள் எப்போதும் என் நெஞ்சாங்கூட்டில் அலைந்து கொண்டே இருக்கும்.

பின் குறிப்பு:
"உனக்காக நான் காப்பியை தியாகம் செய்தேனே, நீ எனக்காக என்ன தியாகப் செய்யப் போகிறாய்?" என்று கேட்டேன்.

அதற்கு வந்த பதில் - "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே பெரிய தியாகம் தானே, அதற்கு மேல் என்ன தியாகம் செய்யணும்?"

ஹூம், என்னவோ போங்க.

இன்பங்கள் பலவிதம் - Cognitive Seduction

சுடோகு (Sudoku) போன்ற புதிர்களை எதிர்கொள்வதிலும், சதுரங்க விளையாட்டில் ஈடுபடும்போதும், மனதினுள் உணரும் இன்பம் அலாதியானது என்பது எனது அனுபவம். அவ்வளவு ஏன், நான் பணிபுரியும் நிறுவனத்தின் "பொட்டி தட்டாளுனர்கள்" மென்பொருள் எழுதுகையில் அதன் சவாலான கட்டங்களை நிறைவேற்றும் போதும் இத்தகைய "உயர் உணர்வினை" (feeling of high) அடைவதாக சொல்லக் கேள்வி. இப்படிப்பட்ட இன்பம் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி அண்மையில் படிக்க நேர்ந்தது.

அனுபவித்து உணரும் இன்பம் (User Experience pleasures) என்பவை சுமாராக பதின்மூன்று வகைப்படுகின்றன. அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள் கீழே: (இவை எந்தவொரு வரிசையிலும் இல்லை.)

1. கண்டுபிடிப்பு (Discovery): இதுவரை அறியாத பொருள்/உணர்வு/பயன் அடையும் போது ஏற்படும் அனுபவம்

2. சவால் (Challenge): இலக்குகள் அல்லது தடைகள், தனது தற்போதைய அறிவு மற்றும் திறனுக்கு அப்பாற்பட்டு இருக்கும் போது அவற்றை எதிர்கொள்வதன் மூலம் ஏற்படும் அனுபவம்

3. கதையாடல் (Narrative): கதாபாத்திரமாகத் தன்னை உருவப்படுத்திப் பிறருக்கு ஒரு கதையைக் கூறும்போது ஏற்படும் அனுபவம்

4. சுய-வெளிப்பாடு (Self-expression): தன்னை உணர்தல் மற்றும் கற்பனை சார்ந்த வெளிப்பாடுகளின் மூலம் பெறும் அனுபவம்

5. சமூகக் கட்டமைப்பு (Social framework): சமூகத்திலே பிறரோடு பழகவும், உறவுகள் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பெறும் அனுபவம்

6. அறிவு சார் எழுச்சி (Cognitive arousal): மூளையின் நரம்புகளைத் தூண்டிவிடும் சிந்தனைப் பாய்ச்சல் மூலம் ஏற்படும் அனுபவம்

7. பரபரப்பு (Thrill): பாதுகாப்பு வலையுடன் (safety net) கூடிய ரிஸ்க் எடுப்பதன் மூலம் பெறும் அனுபவம்

8. புலன் உணர்ச்சி (Sensation): புலன்களைத் தூண்டி அதன் மூலம் கிடைக்கும் அனுபவம்

9. கொண்டாட்டம் (Triumph): வெற்றி சார்ந்த மனநிலையை அடைவதன் மூலம் பெறும் அனுபவம்

10. ஒன்றுதல் (Focus): பரிபூரண ஈடுபாடு கொண்டு தன்னை மறந்து ஒன்றிச் செயல்படுவதன் மூலம் கிடைக்கும் அனுபவம்

11. சாதனை (Accomplishment): குறிப்பிடத்தக்க வகையில் ஏதேனும் வெற்றி அல்லது சாதனை மூலம் பெறும் அனுபவம்

12. கற்பனை (Fantasy): யதார்த்தத்தை மீறிய சம்பவம் அல்லது நிகழ்வினைக் கற்பனை செய்வதன் மூலம் ஏற்படும் அனுபவம்

13. படிப்பினை (Learning): வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக அமையும் அனுபவம்

பின் குறிப்பு: எனது தற்போதைய நிலையின் காரணமாகவோ என்னவோ, இவை அனைத்தும் திருமணத்துடன் நெருங்கிய தொடர்போடு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. பெண்ணைத் தேடிக் கண்டுபிடிப்பு, அவளைச் சம்மதம் சொல்ல வைக்கின்ற சவால், நிகழ்ந்ததைப் பிறருக்குச் சொல்லும் கதையாடல், அவளிடம் பேசுகையில் சுய வெளிப்பாடு, திருமணம் மூலம் சமூகக் கட்டமைப்பில் இடம்பெறுதல், எதிர்பார்ப்பு நிறைந்த பரபரப்பு, புலன் உணர்ச்சிகள், திருமணத்தன்று சாதனை நிகழ்த்தியதாய் கொண்டாட்டம், வாழ்வில் அவளுடன் ஒன்றுதல், எதிர்கால வாழ்க்கை பற்றிய கற்பனை, அதெல்லாம் யதார்த்தத்தை மீறியது என்ற இறுதிப் படிப்பினை :-)) - என்ன நான் சொல்வது?

Monday, April 10, 2006

வருங்கால மனைவியை சந்திக்கப் போதல் - சில குறிப்புகள்

தலைப்பில் குறிப்பிடப் பட்டிருக்கும் நோக்கத்துடன் சென்ற வார இறுதியில் மதுரை வரை சென்றிருந்தேன். ஒவ்வொரு மதுரை வருகையின் போதும் நான் தவறாமல் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் இந்த முறையும் ஆஜர்:

செல்லும் இடங்கள்: மீனாட்சியம்மன் திருக்கோவில், சர்வோதய இலக்கியப் பண்ணை
சாப்பிடும் உணவு: மிட்நைட் இட்லி
பருகும் பானம்: ஜில் ஜில் ஜிகர்தண்டா

வருங்கால மனைவியைச் சந்திக்கப் போகையில் அதன் பின்னணியில் இருக்கும் ஜொள்ளார்ந்த, மன்னிக்கவும், உள்ளார்ந்த காரணத்தை வெளியில் சொல்லாமல், திருமணப் பத்திரிக்கையின் 'மாதிரி'களைக் (நன்றி: மேனகா கார்ட்) காண்பிக்கப் போவதாக சொன்னபோது அனைவராலும் 'ஒரு மாதிரி' பார்க்கப்பட்டேன் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். குறிப்பாக என் தங்கை என்னை மேலும் கீழுமாகப் பார்த்து, தன் தலையை இடமும் வலமுமாக அசைத்தபடியே போய் விட்டாள். என் வருங்கால மைத்துனியும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு எதிர்செயலுடன் (reaction?) "எதுக்கு மாம்ஸ் இந்த வெட்டி பில்டப் எல்லாம்?" என்று அலுத்துக் கொண்டாள்.

இது போன்ற அவப்பெயர்களை நீக்குவதற்காகவேனும் மதுரையில் திருமணம் நடைபெற இருக்கும் மண்டபத்தைப் பார்வையிடவும், திருமண நாளன்று எதிர்பார்க்கக்கூடிய விருந்தினர்களுக்குத் தங்கும் வசதியை விடுதிகளில் உறுதி செய்துகொள்ளவும் உச்சி வெயிலில் அலைய வேண்டியது அவசியமாகி விட்டது.

இப்படியாக முதல் நாள் பொழுதை நகம் கடித்தல், உறவினர்களைப் பார்த்து 'ஹி ஹி' என்ற சத்தத்துடன் தலை சொறிதல், அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்து மனம் சோர்தல், இன்ன பிற அவஸ்தைகளுடன் கழித்து மறுநாள் அதிகாலை புகுந்த வீடு நோக்கிப் புறப்பட்டேன். வில்லினின்று புறப்பட்ட அம்பு போல் சாலையிலே பாய்ந்தது அரசுப் பேருந்து. இதுவே இரண்டு மாதங்களுக்கு முன்பாக என்றால் பேருந்தின் சின்னத்திரையில் காண்பிக்கப்பட்ட ஜோவின் திரைப்படம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கக் கூடும். ஹூம்!! அதெல்லாம் அந்தக் காலம். ஜோவையெல்லாம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியாயிற்று இப்போது. :-)

இடையிடையே செல்பேசியில் பேசிக் கொண்டே புகுந்த ஊரில் பேருந்தினின்று இறங்கினேன். இந்த தருணத்திற்கு ஏற்ற வகையில், அண்மையில் வெங்கட் எழுதி மூக்கர் பாடி நம்மை மகிழ்வித்த அந்தப் பாடலைக் கூட சற்றே மாற்றித் தான் பாட வேண்டியிருக்கும். 'சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்.. அது புகுந்த ஊரைப் போல வருமாஆஆஆ?' :-)

பிடித்த பெண்ணுக்குப் பூ வாங்குவது என்பது ஒரு கலை. அது இன்னும் எனக்கு சரிவரக் கைவரவில்லை என்பது உண்மை. மல்லிகைப் பூக்கள் வாங்கினாலும், அது முழுக்க மலர்ந்திருக்க வேண்டுமா, கொஞ்சம் மொட்டுகளாய் இருக்க வேண்டுமா, இன்ன பிற சிக்கலில்கள் சிக்கிக் கொள்ளாமல், சிகப்பு நிற ரோஜாப் பூக்களை வாங்கிக் கொண்டால் தான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது எனக்கு.

வெயிலுக்குப் பயந்து (என்ற பொய்க் காரணம் காட்டி) காலை உணவுக்கே வந்து சேர்ந்து விட்டதால், வீட்டு வாசலிலேயே எனக்குப் பிடித்த கேசரியின் நறுமணமும், 'அவங்க'ளோட கொலுசு, கண்ணாடி வளையல் சத்தமும் என்னை வரவேற்றன. அவங்க வந்து கதவைத் திறந்தாங்க. சில யுகங்களுக்குப் போதுமான அளவில் பார்வைகளைப் பறிமாறித் தீர்த்துக் கொண்டோம். இருவரும் வெட்கப்பட்ட படி பார்வைகளால் பரஸ்பர நலம் விசாரித்து முடித்தோம். 'போன தடவை பார்த்ததை விட மெலிஞ்சுட்டியே' என்ற என் கவலை மிக்க விசாரிப்புக்கு பதிலாகக் கிடைத்தது, 'அதான் எனக்கும் சேர்த்து நீ குண்டாகிட்டியே.' என்ற நையாண்டி. தந்தை சொல்பேச்சுக் கேளாமல், காலையில் நடைப்பயிற்சிக்கு வாரமிருமுறை டிமிக்கி கொடுத்து விடும் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

காலை உணவருந்தி முடித்து, ஒருவருக்கொருவர் வாங்கியிருந்த மற்ற பரிசுப் பொருட்களைக் கொடுத்து விட்டு அருகருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஏதேதோ. இப்போது ஒன்றும் நினைவில்லாத, சுவாரஸ்யமான பல விஷயங்கள். எதிர்காலம் பற்றிய சில திட்டமிடல்கள். கடந்த காலம் பற்றிய சிறு குறிப்புகள். அவ்வப்போது சில கை தீண்டல்கள், அத்துமீறல்கள்.

இப்படியாக நேரமாகிவிட்டது, மதிய உணவுக்கு. 'விருந்துன்னு வந்துட்டா non-veg இல்லாமல் சமைக்கிற வழக்கம் எங்கள் பரம்பரைக்கே கிடையாது' எனும்படியாக மாமனார் வீட்டு சம்பிரதாயம் என்பதால் கணிசமான வேட்டை காத்திருந்தது. போன மாதம் கோவில் கொடை நிகழ்ச்சியின் போது நான் தொலைபேசி மூலம் அவர்கள் வீட்டு உறவினர் ஒருவரிடம் பேசிய போது, 'நீங்க ஏன் வரலை மாப்ளே? இங்க நாங்க ஒவ்வொருத்தரும் இலைக்கு பேப்பர் வெயிட்டாவே கிடா தலையைத் தான் வச்சு சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்' என்று என்னை ஜஸ்ட் லைக் தட் மிரட்டிய பரம்பரை, பிறகு சும்மாவா இருக்கும்? நானும் ஒன்றும் சாதாரணம் இல்லை. கல்லூரிக் காலத்தில் நண்பர்களிடயேயான வருங்கால மாமனார் வீடு பற்றிய கருத்துக் கேட்புகளின் போது 'சின்னதா ஒரு தோப்பு, அது நடுவில ஒரு அழகான வீடு. வீட்டு வாசலில பெரிய வேப்பமரம். அதன் நிழலில் ஒரு கயித்துக் கட்டில். வந்தா போனா அதுல படுத்துக் கிடக்கணும். நடுநடுவில இளநீர், மோர் எல்லாம் சப்ளை ஆகணும். மத்தியான நேரமா மச்சினர் வந்து, "மாப்ளே! கிடா அடிச்சிருக்கோம், வாங்க சாபிடலாம்"னு கூப்பிட்டுப் போக வரணும்' எனும்படியாக எனது கற்பனை இருந்தது என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும்.

வ.மாமியார் சமைத்து, வ.மனைவி பரிமாறிக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது தினமும் காலையில் கண்ணாடியைப் பார்த்து ஏற்படுத்திக் கொள்ளும் 'இனிமேல் என்னாவாயிருந்தாலும் அதிகமா சாப்பிடக் கூடாது' என்பதான வைராக்கியங்கள் கிடைத்த சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆகி விடுகின்றன.

நான் வெற்றிலை மடித்துத் தர இருவரும் நாக்கு சிவக்கிறதா என்று பார்த்தபடி வெற்றிலை போட்டுக் கொண்டது முதல், 'ஒரு டம்ளர், இரு ஸ்ட்ரா' எனும்படி குளிர்பானம் அருந்தியது வரை எல்லாம் இன்ப மயம். ஓரளவு சுமாராக கல்லூரிக் காலம் முதல் மேடைகளில் பாட்டுப் பாடும் பழக்கமுள்ளவன் என்பதால் கொஞ்ச நேரம் பாடல் பாடிக் கழிந்தது. 'நேயர் விருப்பம்' தான், வேறென்ன?

அண்மையில் திருமணமான நண்பன் ஒருவன், கல்யாணத்திற்குக் காத்திருக்கும் காலத்தை 'Legalised Loving Period' என்று வர்ணித்தான். அவன் மகா தீர்க்கதரிசி.

இரவு புகுந்த ஊரிலிருந்தே சென்னைக்குப் பேருந்தில் பயணம். பேருந்தில் ஏறி நான் அமர்ந்ததும் ஜன்னலருகே வந்து நின்றவள் கண்ணில் சிறு நீர்த்துளி. 'கண்ணில் தூசி விழுந்துடிச்சு' என்று திரும்பி அதைத் துடைத்துக் கொண்டாள். கை நீட்டி அவள் கைப்பிடித்தி அழுத்திக் கொண்டேன்.

இரவு பேருந்தில் கரகாட்டக்காரன் திரைப்படம். அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் இரவெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு..
உன்னை மாலையிடத் தேடிவரும் நாளு எந்த நாளு??'

Wednesday, April 05, 2006

Pink Floyd கவிதைகள் - 2

விரும்பப்படாமையால் அஃது துயரம்

பெருந்துயரத்தின் நறுமணமொன்று
நிலத்தின் மீது கவிந்திருக்கும்.
சலனமற்ற வானத்தைப் புகை மண்டலம் மூடி மறைக்கும்.
பச்சை வயல்களையும் நதிகளையும்
தன் கனவில் காணும் ஒருவன்
காலையில் கண் விழிக்கிறான், விழிப்பின் காரணங்கள் அறியாமல்.
இழந்த சொர்க்கத்தின் நினைவுகள்
அவன் உள்ளத்தைக் கூறுபோடும்.
இழந்தவற்றை அவன் கொண்டிருந்தது
இளமையிலா, கனவிலா என்பதை அவன் சந்தேகிக்கிறான்.
நீங்கிச் சென்ற உலகத்தோடு
அவன் என்றென்றும் நீங்காமல் பிணைந்திருக்கிறான்.

பெருநதியைப் போல் நிச்சயங்களுடன்
நகர்ந்து செல்கிறது காலம்.
இழந்த காதலிடம் பேசுகிறான் அவன்.
மௌனத்தின் மொழி பேசியபடி அவனை விட்டகன்று
கடலுக்குள் கரைகிறது அது.

கண்ணில் தூசி விழ
நில்லாமல் வீசுகின்றது இந்த இரவினுள் ஒரு புயல்.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் துயரத்தை
வார்த்தைகளை விட
சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் மௌனம்.

-o0o-

நன்றி: Pink Floyd rock band