Thursday, July 29, 2004

செம்புலப் பெயல் நீர்

ஒரு எழுத்தாளனாகவோ, கவிஞனாகவோ என்னைப் பற்றி நானே ரொம்ப உயர்வாக நினைத்து இறும்பூது எய்தி அகங்காரம் கொள்ளும் தருணங்களில் படிப்பதற்காகவே சில கவிதைகள் வைத்திருக்கிறேன். மிகத் தீவிரமான ஒரு insecurity complex-ஐ எனக்குத் தரவல்லவை அக்கவிதைகள். அவற்றுள் முக்கியமானது இந்த சங்க காலத்துத் தமிழ்க் கவிதை. ஐந்து வரிகளில் கவிஞன் என்னவித உச்சத்தைத் தொட்டு விடுகிறான் இந்தக் கவிதையில்?

யாயு ஞாயும் யாராகியரோ
எந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானு நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந்தான் கலந்தனவே.
செம்புலப் பெயல்நீர் போல் என்ற வரியில் தான் அந்தக் கவிஞன் என்னவித விளையாட்டுக் காட்டுகிறான்? 'செம்மண் நிலத்தில் பிரிக்கவொண்ணாதபடி கலந்து விடும் நீர் போல்' என்ற புரிதலில் ஆரம்பித்து, 'மழையே காணாது வாடியிருக்கும் பாலை நிலத்தில் வாராது வந்த மாமணியாய் வந்த நீரோடு அம்மண் ஆசை மிகக் கொண்டு கலந்து விடுவதைப் போல்' என்ற ஆழமான புரிதல் வரை என்னவொரு பிரமிக்க வைக்கும் கவித்திறம். எனக்கு மிகப் பிடித்தமான தமிழ்க் கவிதை இதுவே என்று நான் கூறுவேன், அதில் பெருமிதமும் கொள்வேன்.

ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்த்திருக்கிறார் ஏ.கே.ராமானுஜன். அம்மொழிபெயர்ப்பு, லண்டன் மாநகர பாதாள ரயில் கவிதைத் தொகுப்பிலும் இடம்பிடித்துள்ளது.

What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
did you and I meet ever?

But in love

our hearts have mingled
like red earth and pouring rain.

1 Comments:

Blogger தேசாந்திரி said...

இப்பாடலை பலமுறை படித்துள்ளேன் விளக்கம் தெரியாமல். விளக்கம் நன்றாக இருக்கிறது. நன்றி மீனாக்ஸ்.

April 12, 2006 8:22 AM  

Post a Comment

<< Home