Sunday, July 18, 2004

லஜ்ஜாவதியே

சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த திரைப் பாடலாக அமைந்துவிட்டது இந்த லஜ்ஜாவதியே. 4 தி பீப்பிள் என்ற மலையாளப் படத்தின் தமிழ் மொழிமாற்றமான 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் ஜஸ்ஸீ கிஃப்ட் (Jassie Gift) இசையமைத்துப் பாடியிருக்கும் கானா டைப் பாடல் இது.

மனிதருக்கு குரல் என்னமாய் இருக்கிறது!! 'சர்க்கரைக் குரலில் தேன் தடவிப் பாடுகிறார்' என்று cliche-வாக இருந்தாலும் பரவாயில்லை என்று வர்ணிக்கலாம்.  சில வார்த்தைக் கூட்டங்களை (அதான்ப்பா, சொர்றொடர்களை) அவர் உச்சரிக்கும் போது மட்டும் எப்படித் தான் மாயாஜாலம் நிகழ்ந்து சொக்க வைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் பாடல் பட்டையைக் கிளப்பி விட்டது. SS Music தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை விரும்பிக் கேட்கும் நேயர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

பாடல் வரிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. காதல் பாட்டுக்கேயுரிய romance, தவிப்பு, கொஞ்சூண்டு naughtyness என்று எல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறது. குழந்தைப் பருவ, இளமைப்பருவ நினைவுகளை காதலோடு அசைபோட்டுப் பார்க்கும் சுவையான வரிகள்
 
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ

தொட்டவுடன் ஓடுறியே (2)
தொட்டாசிணுங்கி பெண்தானோ (2)
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி

(அடி லஜ்ஜாவதியே...)

பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம்
பள்ளிக்கூடப் பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம்

பனங்காயின் வண்டியில் பசுமாட்டுத் தொழுவத்தை
சுற்றி வந்து பம்பாய்க்குப் போனதாக சொல்லினோம்

அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
மீண்டும் அந்தக் காலம் வந்து மழலையாக மாற்றுமா

(லஜ்ஜாவதியே...)

காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டித் தவளை விழுந்ததும்
கைகொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா
 
கட்ட வண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்து விட்டு ராஜ ராஜன் என்றதும்

அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும் காதல் கடந்து போகுமா

(லஜ்ஜாவதியே...)

 
பாடலுக்கு பாய்ஸ் படத்தில் வந்த பரத்தும் ஆட்டோகிராஃப் புகழ் கோபிகாவும் போட்டிருக்கும் ஆட்டத்தைப் பற்றிச் சொல்லாவிட்டால் ஜென்மம் சாபல்யம் அடையாது. கலக்கியெடுத்துவிட்டார்கள். குறிப்பாக பாடல் வரியெதுவும் இல்லாமல் கோபிகா தன் முக ரியாக்ஷன்களால் நமக்குள் [சரி, எனக்குள் :-)] ஏற்படுத்தும் பரவசம் இருகிறதே, அது ஒரு sweet and necessary evil.
 
என் அலுவலகத்தில் அடுத்த மாதம், ஆண்டு விழா வருகிறது. அதில் இந்தப் பாடலைப் பாடுவது அல்லது இந்தப் பாடலுக்கு ஆடுவது என்று நான் முடிவு செய்து விட்டேன். கூட சேர்ந்து பாட அல்லது ஆட அலுவலகத்தில் எந்த லஜ்ஜாவதியாவது சம்மதிப்பாளா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். :-)

0 Comments:

Post a Comment

<< Home