Monday, April 10, 2006

வருங்கால மனைவியை சந்திக்கப் போதல் - சில குறிப்புகள்

தலைப்பில் குறிப்பிடப் பட்டிருக்கும் நோக்கத்துடன் சென்ற வார இறுதியில் மதுரை வரை சென்றிருந்தேன். ஒவ்வொரு மதுரை வருகையின் போதும் நான் தவறாமல் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் இந்த முறையும் ஆஜர்:

செல்லும் இடங்கள்: மீனாட்சியம்மன் திருக்கோவில், சர்வோதய இலக்கியப் பண்ணை
சாப்பிடும் உணவு: மிட்நைட் இட்லி
பருகும் பானம்: ஜில் ஜில் ஜிகர்தண்டா

வருங்கால மனைவியைச் சந்திக்கப் போகையில் அதன் பின்னணியில் இருக்கும் ஜொள்ளார்ந்த, மன்னிக்கவும், உள்ளார்ந்த காரணத்தை வெளியில் சொல்லாமல், திருமணப் பத்திரிக்கையின் 'மாதிரி'களைக் (நன்றி: மேனகா கார்ட்) காண்பிக்கப் போவதாக சொன்னபோது அனைவராலும் 'ஒரு மாதிரி' பார்க்கப்பட்டேன் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். குறிப்பாக என் தங்கை என்னை மேலும் கீழுமாகப் பார்த்து, தன் தலையை இடமும் வலமுமாக அசைத்தபடியே போய் விட்டாள். என் வருங்கால மைத்துனியும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு எதிர்செயலுடன் (reaction?) "எதுக்கு மாம்ஸ் இந்த வெட்டி பில்டப் எல்லாம்?" என்று அலுத்துக் கொண்டாள்.

இது போன்ற அவப்பெயர்களை நீக்குவதற்காகவேனும் மதுரையில் திருமணம் நடைபெற இருக்கும் மண்டபத்தைப் பார்வையிடவும், திருமண நாளன்று எதிர்பார்க்கக்கூடிய விருந்தினர்களுக்குத் தங்கும் வசதியை விடுதிகளில் உறுதி செய்துகொள்ளவும் உச்சி வெயிலில் அலைய வேண்டியது அவசியமாகி விட்டது.

இப்படியாக முதல் நாள் பொழுதை நகம் கடித்தல், உறவினர்களைப் பார்த்து 'ஹி ஹி' என்ற சத்தத்துடன் தலை சொறிதல், அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்து மனம் சோர்தல், இன்ன பிற அவஸ்தைகளுடன் கழித்து மறுநாள் அதிகாலை புகுந்த வீடு நோக்கிப் புறப்பட்டேன். வில்லினின்று புறப்பட்ட அம்பு போல் சாலையிலே பாய்ந்தது அரசுப் பேருந்து. இதுவே இரண்டு மாதங்களுக்கு முன்பாக என்றால் பேருந்தின் சின்னத்திரையில் காண்பிக்கப்பட்ட ஜோவின் திரைப்படம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கக் கூடும். ஹூம்!! அதெல்லாம் அந்தக் காலம். ஜோவையெல்லாம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியாயிற்று இப்போது. :-)

இடையிடையே செல்பேசியில் பேசிக் கொண்டே புகுந்த ஊரில் பேருந்தினின்று இறங்கினேன். இந்த தருணத்திற்கு ஏற்ற வகையில், அண்மையில் வெங்கட் எழுதி மூக்கர் பாடி நம்மை மகிழ்வித்த அந்தப் பாடலைக் கூட சற்றே மாற்றித் தான் பாட வேண்டியிருக்கும். 'சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்.. அது புகுந்த ஊரைப் போல வருமாஆஆஆ?' :-)

பிடித்த பெண்ணுக்குப் பூ வாங்குவது என்பது ஒரு கலை. அது இன்னும் எனக்கு சரிவரக் கைவரவில்லை என்பது உண்மை. மல்லிகைப் பூக்கள் வாங்கினாலும், அது முழுக்க மலர்ந்திருக்க வேண்டுமா, கொஞ்சம் மொட்டுகளாய் இருக்க வேண்டுமா, இன்ன பிற சிக்கலில்கள் சிக்கிக் கொள்ளாமல், சிகப்பு நிற ரோஜாப் பூக்களை வாங்கிக் கொண்டால் தான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது எனக்கு.

வெயிலுக்குப் பயந்து (என்ற பொய்க் காரணம் காட்டி) காலை உணவுக்கே வந்து சேர்ந்து விட்டதால், வீட்டு வாசலிலேயே எனக்குப் பிடித்த கேசரியின் நறுமணமும், 'அவங்க'ளோட கொலுசு, கண்ணாடி வளையல் சத்தமும் என்னை வரவேற்றன. அவங்க வந்து கதவைத் திறந்தாங்க. சில யுகங்களுக்குப் போதுமான அளவில் பார்வைகளைப் பறிமாறித் தீர்த்துக் கொண்டோம். இருவரும் வெட்கப்பட்ட படி பார்வைகளால் பரஸ்பர நலம் விசாரித்து முடித்தோம். 'போன தடவை பார்த்ததை விட மெலிஞ்சுட்டியே' என்ற என் கவலை மிக்க விசாரிப்புக்கு பதிலாகக் கிடைத்தது, 'அதான் எனக்கும் சேர்த்து நீ குண்டாகிட்டியே.' என்ற நையாண்டி. தந்தை சொல்பேச்சுக் கேளாமல், காலையில் நடைப்பயிற்சிக்கு வாரமிருமுறை டிமிக்கி கொடுத்து விடும் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

காலை உணவருந்தி முடித்து, ஒருவருக்கொருவர் வாங்கியிருந்த மற்ற பரிசுப் பொருட்களைக் கொடுத்து விட்டு அருகருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஏதேதோ. இப்போது ஒன்றும் நினைவில்லாத, சுவாரஸ்யமான பல விஷயங்கள். எதிர்காலம் பற்றிய சில திட்டமிடல்கள். கடந்த காலம் பற்றிய சிறு குறிப்புகள். அவ்வப்போது சில கை தீண்டல்கள், அத்துமீறல்கள்.

இப்படியாக நேரமாகிவிட்டது, மதிய உணவுக்கு. 'விருந்துன்னு வந்துட்டா non-veg இல்லாமல் சமைக்கிற வழக்கம் எங்கள் பரம்பரைக்கே கிடையாது' எனும்படியாக மாமனார் வீட்டு சம்பிரதாயம் என்பதால் கணிசமான வேட்டை காத்திருந்தது. போன மாதம் கோவில் கொடை நிகழ்ச்சியின் போது நான் தொலைபேசி மூலம் அவர்கள் வீட்டு உறவினர் ஒருவரிடம் பேசிய போது, 'நீங்க ஏன் வரலை மாப்ளே? இங்க நாங்க ஒவ்வொருத்தரும் இலைக்கு பேப்பர் வெயிட்டாவே கிடா தலையைத் தான் வச்சு சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்' என்று என்னை ஜஸ்ட் லைக் தட் மிரட்டிய பரம்பரை, பிறகு சும்மாவா இருக்கும்? நானும் ஒன்றும் சாதாரணம் இல்லை. கல்லூரிக் காலத்தில் நண்பர்களிடயேயான வருங்கால மாமனார் வீடு பற்றிய கருத்துக் கேட்புகளின் போது 'சின்னதா ஒரு தோப்பு, அது நடுவில ஒரு அழகான வீடு. வீட்டு வாசலில பெரிய வேப்பமரம். அதன் நிழலில் ஒரு கயித்துக் கட்டில். வந்தா போனா அதுல படுத்துக் கிடக்கணும். நடுநடுவில இளநீர், மோர் எல்லாம் சப்ளை ஆகணும். மத்தியான நேரமா மச்சினர் வந்து, "மாப்ளே! கிடா அடிச்சிருக்கோம், வாங்க சாபிடலாம்"னு கூப்பிட்டுப் போக வரணும்' எனும்படியாக எனது கற்பனை இருந்தது என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும்.

வ.மாமியார் சமைத்து, வ.மனைவி பரிமாறிக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது தினமும் காலையில் கண்ணாடியைப் பார்த்து ஏற்படுத்திக் கொள்ளும் 'இனிமேல் என்னாவாயிருந்தாலும் அதிகமா சாப்பிடக் கூடாது' என்பதான வைராக்கியங்கள் கிடைத்த சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆகி விடுகின்றன.

நான் வெற்றிலை மடித்துத் தர இருவரும் நாக்கு சிவக்கிறதா என்று பார்த்தபடி வெற்றிலை போட்டுக் கொண்டது முதல், 'ஒரு டம்ளர், இரு ஸ்ட்ரா' எனும்படி குளிர்பானம் அருந்தியது வரை எல்லாம் இன்ப மயம். ஓரளவு சுமாராக கல்லூரிக் காலம் முதல் மேடைகளில் பாட்டுப் பாடும் பழக்கமுள்ளவன் என்பதால் கொஞ்ச நேரம் பாடல் பாடிக் கழிந்தது. 'நேயர் விருப்பம்' தான், வேறென்ன?

அண்மையில் திருமணமான நண்பன் ஒருவன், கல்யாணத்திற்குக் காத்திருக்கும் காலத்தை 'Legalised Loving Period' என்று வர்ணித்தான். அவன் மகா தீர்க்கதரிசி.

இரவு புகுந்த ஊரிலிருந்தே சென்னைக்குப் பேருந்தில் பயணம். பேருந்தில் ஏறி நான் அமர்ந்ததும் ஜன்னலருகே வந்து நின்றவள் கண்ணில் சிறு நீர்த்துளி. 'கண்ணில் தூசி விழுந்துடிச்சு' என்று திரும்பி அதைத் துடைத்துக் கொண்டாள். கை நீட்டி அவள் கைப்பிடித்தி அழுத்திக் கொண்டேன்.

இரவு பேருந்தில் கரகாட்டக்காரன் திரைப்படம். அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் இரவெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு..
உன்னை மாலையிடத் தேடிவரும் நாளு எந்த நாளு??'

28 Comments:

Anonymous Anonymous said...

அட்றா சக்கை... அட்றா சக்கை... அட்றா சக்கை...

April 10, 2006 7:01 AM  
Blogger வானம்பாடி said...

அடா அடா அடா...

April 10, 2006 7:25 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் மீனாக்ஸ்...

உங்க பதிவ தேசிப்ண்டிட்ல இணைத்துள்ளேன்...ஆட்சேபம் இருக்காது என நம்புகிறேன்

http://www.desipundit.com/2006/04/10/lovess/

April 10, 2006 7:26 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Thanks abirama for the tip and wishes.

Thanks dubukku.

April 10, 2006 7:49 AM  
Blogger Boston Bala said...

பழைய நெனப்பு எல்லாம் எனக்கு மலர வச்சுட்டீங்களே ;-)

April 10, 2006 8:35 AM  
Blogger சிங். செயகுமார். said...

அண்ணே! எங்க ஊட்ல பொண்ணு பாக்க சொல்லிட்டேன்=))

April 10, 2006 8:59 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

சிங்.செயகுமார், சீக்கிரமே நீங்களும் இந்தக் கல்யாணக் கடல்ல தொபுக்கடீர்னு விழ என்னுடைய வாழ்த்துகள் :-)

April 10, 2006 9:09 AM  
Blogger Mookku Sundar said...

படிக்கும்போது ரொம்ப கூச்சமா இருக்குது ராசா..கன்னமெல்லாம் சிவந்து போச்சு ;-)

கொஞ்ச நாளைக்கு ரொம்ப டீடெயில்டா எழுதாதீங்க. !!!

அது சரி.."பேப்பர் வெயிட்" சூப்பரா..?? ரொம்ப வெயிட் போட்டுறப் போவுது. தினமும் ஒரு 30 நிமிடம் ரன்னிங் போங்கப்பு..;-)

April 10, 2006 9:40 AM  
Blogger ilavanji said...

ஆஹா! மீனாக்ஸ்..

வரவர சேரன் மாதிரி ஆகிட்டு வரீங்க! சொந்தக்கதை சொல்லி இருக்கறவ னுக்கு மலரும் நினைவுகளையும் இல்லாதவனுக்கு கனவுகளையும் கெளப்பி விடறீங்க!

துளசியக்கா! எனக்கு ஒரு கொசுவத்தி டப்பா பார்சல்!!! :)))

April 10, 2006 10:15 AM  
Blogger துளசி கோபால் said...

அனுபவி ராஜா அனுபவி.

April 10, 2006 2:31 PM  
Blogger Pavals said...

எனக்கென்னவோ பயமாயிருக்கு ;)

April 10, 2006 8:23 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//Mookku Sundar said...
அது சரி.."பேப்பர் வெயிட்" சூப்பரா..?? //

ண்ணா! இன்னாதுண்ணா இது பேப்பர் வெயிட்டு? ஒண்ணியும் பிர்லீங்ணா..!!

April 10, 2006 9:31 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//இளவஞ்சி said...
ஆஹா! மீனாக்ஸ்.. வரவர சேரன் மாதிரி ஆகிட்டு வரீங்க! சொந்தக்கதை சொல்லி இருக்கறவ னுக்கு மலரும் நினைவுகளையும் இல்லாதவனுக்கு கனவுகளையும் கெளப்பி விடறீங்க! //

ஹி ஹி.. ஏதோ நம்மால முடிஞ்ச சின்ன கைங்கர்யம்.. அது சரி, எல்லார் மனசுக்குள்ளயும் ஒரு சேரன் கவுந்தடிச்சுப் படுத்துக்கிட்டுத் தான் இருக்காரு. கூப்பிட்டா வருவாரு..

April 10, 2006 9:34 PM  
Blogger Mookku Sundar said...

//போது நான் தொலைபேசி மூலம் அவர்கள் வீட்டு உறவினர் ஒருவரிடம் பேசிய போது, 'நீங்க ஏன் வரலை மாப்ளே? இங்க நாங்க ஒவ்வொருத்தரும் இலைக்கு பேப்பர் வெயிட்டாவே கிடா தலையைத் தான் வச்சு சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்' என்று என்னை ஜஸ்ட் லைக் தட் மிரட்டிய பரம்பரை//

ராசா, மேலே உள்ளதை எழுதினது யாரு..?? இருந்தாலும், இப்படி "மொதக்கக்" கூடாது.

April 10, 2006 10:16 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//Mookku Sundar said...
இருந்தாலும், இப்படி "மொதக்கக்" கூடாது. //

ஹி ஹி.. மூக்ஸ்ண்ணா.. ஸாரி, அது ஒண்ணுமில்லீங்ணா.. நான் மட்டும் தான் சென்னை திரும்பிட்டேன்.. நெனப்பெல்லாம் அந்தப் பக்கமாவே சுத்திக்கிட்டிருக்கா.. அதான்.. ஹி ஹி..

அதெல்லாம் நல்லாவே இருந்திச்சு..

April 10, 2006 11:20 PM  
Blogger ரவியா said...

கல்யாணத்தை ஜூலை மாதத்தில் வைத்துக் கொள்ளகூடாதா??

Legal loving period நீடிக்குமே !!
:))
கடா தலை சாப்பிடலாமே என்ற நப்பாசைத்தான் !!

April 11, 2006 1:44 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//ரவியா said...
கல்யாணத்தை ஜூலை மாதத்தில் வைத்துக் கொள்ளகூடாதா?? Legal loving period நீடிக்குமே !! :))
கடா தலை சாப்பிடலாமே என்ற நப்பாசைத்தான் !! //

அருமை அண்ணன் ரவியா அவர்கள் எப்போ வந்தாலும் கிடைக்கும். ஒண்ணும் கவலை வேண்டாம்.

April 11, 2006 2:11 AM  
Blogger rajkumar said...

மதுரை மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.

April 11, 2006 3:21 AM  
Blogger பத்மா அர்விந்த் said...

வசந்தகால வாழ்த்துகள் . அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இனிமேல் இதுபோல கவித்துவமான பதிவுகள் நிறைய வரும் என்று எதிர்பார்க்கிறேன். மார்க்கெட்டிங்-பதிவிற்கு விடுமுறையா?

April 11, 2006 4:42 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

// தேன் துளி said...
மார்க்கெட்டிங்-பதிவிற்கு விடுமுறையா? //

விடுமுறை எதுவுமில்லை பத்மா. கொஞ்சம் எழுத சோம்பல்.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இருவர் சார்பிலும் :-)

April 11, 2006 5:23 AM  
Anonymous Anonymous said...

அடேங்கப்பா!! இவ்ளோ விஷயம் இருக்கா ?

மிக நல்ல பதிவு !! இனிய நல்வாழ்த்துக்கள் !!

April 13, 2006 4:55 PM  
Anonymous Anonymous said...

அடடா, முதல் வரவேற்பைக் கொடுக்கணும்னு நினச்சேன். ஆனா அதுக்குள்ள இப்படி ..: Enga ooru maappillaiya vareenge, vaanga vaanga, nalla irunga :)
Cheers
D the D
சரி பரவாயில்லை...நானும்சொல்லிடறேன். எங்க ஊரு மாப்பிள்ளையா வர்ரதில ரொம்ப மகிழ்ச்சி...
அதென்னன்னு தெரியலையே..எங்க ஊரு 'மக்கள்' வலைப்பதிவர்களாக இருப்பதைவிட 'மருமக்கள்'தான் நிறைய இருப்பார்கள் போலும்.

April 16, 2006 5:56 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//srinidhi said...
Hello Sir, what is the response of your fiancee to this blog. You can tell me in private if you are shy of revealing it in public. //

She has no negative response to this post. She smiled when I told her about this.

April 17, 2006 10:03 PM  
Anonymous Anonymous said...

அது என்ன 'ஜில் ஜில் ஜிகர்தண்டா'?

ரொம்ப தூரத்துல இருந்து வீட்டுக்கு வந்தா 'எதுக்கு வந்த'ன்னு அவங்க வீட்ல கேட்டா என்ன சொல்றதுன்னு குழம்ப வேண்டாம். ஆனா ரெண்டு தெரு தள்ளி இருக்கறவங்க வீட்டுக்கு என்ன சொல்லி உள்ள போறது? :-((

பொ.செ. பத்தி எதுவும் பேசலையா?

ஒருவருக்கொருவர் வாங்கியிருந்த மற்ற பரிசுப் பொருட்களைக் கொடுத்து விட்டு அருகருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம.

ஹ ஹ ஹா. நானே பரவாயில்லை. என்ன அப்படிப் பார்க்கறீங்க... பரிசுப்பொருட்கள் பரிமாறிக்கொண்டதை சொன்னேன். எனக்கு வாங்கி மட்டும்தான் பழக்கம். 'அல்ப்பம்'னு நெனசதை கல்யாணம் ஆனப்பறம்தான் தெரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கறேன். மற்றபடி, அவ்வளவு தொலைவு சென்று அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பற்றியெல்லாம் நான் ஒன்றும் சொல்லவே இல்லை.

April 19, 2006 11:24 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//சு. க்ருபா ஷங்கர் said...
அது என்ன 'ஜில் ஜில் ஜிகர்தண்டா'?//

க்ருபா, ஜிகர்தண்டா என்பது மதுரை பழரசக் கடைகளில் கிடைக்கும் ஒரு பிரத்யேகப் பானம். சென்னையின் equivalent சொல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் நம்ம ஃபலூடா மாதிரி என்று சொல்லலாம்.

April 19, 2006 9:17 PM  
Blogger ஜெ. ராம்கி said...

//அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பற்றியெல்லாம் நான் ஒன்றும் சொல்லவே இல்லை.

//நான் மட்டும் தான் சென்னை திரும்பிட்டேன்.. நெனப்பெல்லாம் அந்தப் பக்கமாவே சுத்திக்கிட்டிருக்கா.. அதான்.. ஹி ஹி..


அடபாவிகளா, எவன்டா அவன் அந்த MaleKindடை இழுத்து மூடுங்கடா! :-(

April 19, 2006 9:59 PM  
Blogger Udhayakumar said...

உண்மைய சொல்லித்தான் தீரணும்... என் போன்ற வாலிப நெஞ்சங்களின் எரிச்சலைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்...

ம்ம்ம்...ஒரு ஜோசியன் பையனுக்கு 29துலதான் கல்யாணம் நடக்கும்ன்னு சொல்லிட்டு போயிட்டான். இதை படிச்சதுக்கு அப்புறம் கண்ணை கட்டுதே ....

நல்லா இருந்தீங்கன்னா சரி...

April 19, 2006 10:01 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

உதயகுமார், ரொம்ப வருத்தப்படாதீங்க. சீக்கிரமே சுப காரியம் நடக்க வாழ்த்துகள்.

April 19, 2006 10:31 PM  

Post a Comment

<< Home