Thursday, April 20, 2006

காப்பி புராணம்

நீருக்குப் பிறகு உலகில் அதிகமாகப் பருகப்படும் பானம் என்று கருதப்படுகிறது காப்பி. காப்பிக் கொட்டைகளில் இருக்கும் கஃபீன் (caffiene) மூலம் கிடைக்கும் உற்சாக உணர்வு மற்றும் அதைத் தாங்கி வரும் பானத்தின் திடம் மற்றும் நறுமணம் ஆகிய மூன்றும் காப்பியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குக் காரணம் எனலாம்.

காப்பியின் வரலாறு எத்தியோப்பியாவில் கி.பி. 300-ல் வாழ்ந்த கல்டி (Kaldi) என்ற இடையர் வழியாகத் துவங்கியது என்பது பரவலான நம்பிக்கை. அவரது மந்தையைச் சேர்ந்த ஆடுகள், ஒரு செடியின் சிவப்பு கொட்டைகளை உண்ட பிறகு மாலை வரை மிகுந்த உற்சாகமாக இருப்பதைக் கண்ட கல்டி, தானும் அக்கொட்டைகளை உண்டு அதே உணர்வைப் பெற்றார். தன் ஊரில் வசித்து வந்த துறவிகளிடம் இதை அவர் கூறவே அவர்களும் இரவு நேரத்தில் தூங்காமல் இறை வழிபாடு செய்ய காப்பிக் கொட்டைகளை உண்ணத் துவங்கினர். தற்செயலாக, இக்கொட்டைகளை வறுத்து, பொடித்து, பானமாக்கிப் பருகினால் அதே உணர்வுடன் நல்ல சுவையும் கிடைப்பதைக் கண்டுபிடித்தனர். இப்படிப் போகிறது கதை.

அந்தக் காலத்தில் ஃபேரக்ஸ் (Farex) என்ற சத்துப் பொடி நம் நட்டில் புகழ் பெற்று விளங்கியது. சிறு வயதில் ஃபேரக்ஸை மிக விரும்பி உண்டு ஊட்டச்சத்துடன் வளர்ந்தவன் நான் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். இன்றைய தேதியிலும் நான் கொழுகொழுவென இருப்பதற்கு ஃபேரக்ஸ் ஒரு அடிப்படைக் காரணம் :-). அதற்குப் பிறகு என்றைக்கு காப்பியின் ருசி எனக்குக் காண்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து தீவிரமான காப்பி ரசிகனாக நான் மாறி விட்டேன். கொஞ்சம் பரம்பரைக் காரணமும் இருந்திருக்கலாம். கிராமத்தில் பல்வேறு தொழில்கள் செய்து வந்த என் அப்பா வழித் தாத்தா, சில வருடங்கள் காப்பிக் கடையும் வைத்திருந்தார். அவர் காப்பி ஆற்றித் தரும் அழகே அழகு.

பள்ளிப் பருவம் வரை அம்மா தரும் காப்பி மட்டுமே பெரிதும் குடிக்கப்பட்டாலும், மாலை நேரங்களில் நண்பர்களோடு விளையாடப் போகையில் அவர்களின் வீட்டிலும் காப்பி குடித்தே வளர்ந்திருக்கிறேன். கப்களில் காப்பி குடிப்பதை விடவும் எவர்சில்வர் டம்ளர்களில் காப்பி குடிப்பது ருசிகர அனுபவம். கைகளில் அந்தச் சூடு பரவிய வண்ணம் இருக்க, சூடு ஆறுவதற்குள் காப்பியைக் குடித்து முடிப்பது சுகம். தலைவலிக்கு எளிய நிவாரணமாக, சூடான காப்பி நிரம்பிய எவெர்சில்வர் டம்ளர்களை இலேசாக நெற்றியில் தேய்த்து எடுப்பது எனக்கு நெடுநாள் பழக்கம். பயந்தோடிவிடும் எனது தலைவலி.

இவற்றையும் விட, கண்ணாடி க்ளாஸ்களில் தெருவோரக் கடைகளில் காப்பி குடிப்பது இன்னும் சுவாரஸ்யம். 'ஸ்ட்ராங் காப்பி' என்று ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து விட்டு நின்றால், மாஸ்டர் கொட்டையின் வடிநீரை எடுத்து பால் கலந்து அருமையான நிறத்திற்குக் கொண்டு வந்து, கடைசியில் கையில் கொடுக்கும் முன்னால் கொதிக்கும் பாத்திரத்தின் ஓரங்களிலிருந்து பால் நுரையை கொஞ்சமாய்க் கரண்டியில் அள்ளி டம்ளரில் மேலாக நிரப்பித் தருவாரே, அட்டகாசம் தான் போங்கள்.

காப்பியைக் குடிப்பதிலும், அதை உறிஞ்சி மிடறு மிடறாக உடனே விழுங்கி விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை. கொஞ்சம் டம்ளரிலிருந்து உறிஞ்சி எடுத்து வாய்க்குள் முழுமையாக நிரப்பி, நாக்கை அதில் ஒரு சுழற்று சுழற்றி, நாக்கின் சுவை மொட்டுகள் அனைத்தும் அதில் நனைந்து அந்த சுகத்தை ஒரு விநாடியாவது கண்மூடி அனுபவித்து விட்டு, அப்புறம் தொண்டையை நனைத்து உள்ளே விழுங்குவதே காப்பி குடிப்பதில் உள்ள நுட்பமான செயல்.

கல்லூரிக் காலங்களில் தினமும் மாலை மெஸ்ஸில் காப்பி இலவசமாக வழங்கப்படும். அனைவரும் மெஸ்ஸுக்கு வந்து தான் குடிக்க வேண்டும். இதனால் மதியம் ஆய்வக வகுப்பு (laboratory class) இருந்தால் அதில் பரிசோதனையை முடித்து விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து காப்பி குடிப்போம். கூடப் படிக்கும் அனைத்து பெண்களும் அப்படியே வந்து குடிப்பார்கள் என்பதால், கல்லூரிச் சாலை ஓரமாக நின்று காப்பி குடித்தபடியே தேவதை தரிசன்ம் காண்பது மிக அழகு. அப்போது கூட காப்பியின் இனிமைக்கு காட்சியின் இனிமை ஈடாகவில்லை என்பதே எனது அனுபவம். (சும்மாவா சொன்னார்கள் ஒரு நகைச்சுவை வாசகம்: 99% of the girls in the world are beautiful, the remaining 1% are studying / studied engineering with me.)

வேலைக்குப் போகத் துவங்கிய பிறகு தான் காஃபி டே (Cafe Coffee Day), க்விக்கிஸ் (Qwikys), பாரிஸ்டா (Barista) போன்ற காப்பி சங்கிலிக் கடைகளின் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட வசதியாக குளிர்ந்த காப்பிகளும் எனக்கு அறிமுகமாயின. மோசமில்லை என்றாலும் சூடான காப்பியின் இனிமையை அவற்றால் ஈடு செய்ய முடியவில்லை என்பதே எனது தீர்ப்பு. வெவ்வேறு விதமான காப்பிகளை அங்கே ருசி பார்த்திருக்கிறேன். குறிப்பாக பெங்களூரில் க்ராஸ்வேர்ட் (Crossword) என்ற புத்தகக் கடை உள்ளேயே ஒரு காஃபி டே இருக்கும். புத்தகங்களை வாங்கி விட்டு, அங்கு அமர்ந்து காப்பி குடித்தபடி புத்தகங்களை வாசிக்கத் துவங்கி விடுவது எனது வழக்கம்.

பெங்களூர் கோரமங்கலாவில் நான் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் காஃபி வேர்ல்ட் (Coffee World) என்ற புதிய கடை துவங்கப் பட்ட போது மிக மகிழ்ந்தேன். இரவுகளில் சினிமா பாரடைஸோ வரை நடந்தே சென்று டி.வி.டி.க்கள் எடுத்து வரும் வழியில் அங்கே நுழைந்து காப்பி குடித்து வருவது எனது வாடிக்கை. காஃபி வேர்ல்ட், பெங்களூர்வாசிகளுக்கு நான் சிபாரிசு செய்யும் நிறுவனம்.

இப்போது சென்னை திரும்பி விட்ட பிறகு எங்கள் பகுதியின் மாஸ்டர் கடையில் தான் வழக்கமாக காப்பி குடிக்கும் வழக்கம். காலை நடைபயிற்சி முடித்துத் திரும்பி வரும் போது ஆறு மணிக்குக் கடை திறக்கப்பட்டதும் முதல் வாடிக்கையாளர் நானே. தவிர மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிவதால் பணியிலும் ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு வரை தானியங்கி இயந்திரத்தின் காப்பி குடிப்பது வாடிக்கை. அமெரிக்க க்ளையண்ட்களுடன் தொலைபேசி மாநாடு (conference call) முடித்து அவசியம் ஒரு காப்பியாவது தேவைப்படுகிறது என்பது எனது அனுபவம்.

காப்பிக் கொட்டைகளின் ருசிக்கு அவை வளரும் மண்ணும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க் பிரதேசத்திற்கு அலுவல் காரணமாகப் போயிருந்தபோது நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து காவிரி ஆறு வரை ஒரு trekking போனோம். அப்போது வழியெங்கு காப்பித் தோட்டங்கள் மிக ரம்மியமாக இருந்தன. அங்கு வளர்ந்த காப்பிக் கொட்டைகளிலிருந்து தயார் செய்யப்பட்ட காப்பி வித்தியாசமான சுவையோடு தான் இருந்தது.

சென்ற ஆண்டு திண்ணை இதழும், மரத்தடி குழுவும் நடத்திய அறிவியல் புனைகதை போட்டிக்கு நான் எழுதி அனுப்பிய கதையில், எதிர்காலத்தில் காப்பிக் கடைகள் எப்படி வடிவம் பெறும் என்பதில் எனது கற்பனையை இந்த பிரத்தியேக மண் சார்ந்த சுவை என்ற சமாசாரத்தில் புகுத்தியிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி (எதிர்காலம் என்று ஒன்று என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற கதை):

அந்த இளைஞன் மறு வாசல் வழியாக இறங்கிக் கொண்டிருந்தான். நேராக நடந்து காஃபி-டே' கடையில் போய் நின்றான்.
"ஒரு மைசூர் காஃபி" என்றான்.

கடையிலிருந்த பணியாளர் "நல்ல தேர்வு" என்று சொல்லிப் புன்னகைத்து விட்டு, தனக்கு முன்னாலிருந்த சிறிய ஃப்ரிட்ஜ் அளவிலான மெஷினை ஆன் செய்தார். 'மைசூர்' என்று எழுதியிருந்த பெட்டியிலிருந்து ஒரு பெரிய கரண்டியால் மண் எடுத்து மெஷினுக்குள் போட்டார். ஒரு விதையை உள்ளே போட்டு, பிறகு தண்ணீருக்கான பச்சை பொத்தானை அழுத்தினார். தண்ணீர் மெஷினுக்குள் வழிந்து மண்ணை நனைத்தது. சற்று நேரத்தில் கண்ணெதிரில் அந்த மாயம் நிகழ்ந்தது. ஒரு காப்பிச் செடி மெஷினுக்குள் முளை விட்டு வளர்ந்து, பச்சை நிறத்தில் எல்லிப்டிகல் இலைகளை உருவாக்கிக் கொண்டு, பூக்கள் மலர்ந்து, கொட்டைகள் ஏற்படுத்தி, அவை பச்சையிலிருந்து சிகப்பும் பிரவுனும் கலந்த நிறத்துக்கு மாறின. ஒரு ரோபோ கரம் எங்கிருந்தோ முளைத்து வந்து தகுதியான கொட்டைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பறித்தது. பறித்த காஃபி கொட்டைகளை அரவைக்குள் அனுப்பி அரைத்து, ஃப்ளேவர் சேர்த்து கொதிக்கும் பாலில் கலந்து ஒரு கோப்பையில் நிரப்பி வெளியே அனுப்பி வைத்தது. இரண்டு நிமிடங்களில் சுவையான 'லொக்கேஷன் காஃபி' தயார்.

அவன் பணம் கொடுத்து விட்டு கோப்பையை எடுத்து பருகி,
"எத்தனை முறை இதைப் பார்த்தாலும் சலிப்பதேயில்லை" என்றான்.

பணியாளர் சில்லறையைக் கொடுத்து,
"உண்மை தான். சிறியவர், பெரியவர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இது பிடித்திருக்கிறது. எங்கள் சேவையைப் பயன்படுத்தியதற்கு மிக்க நன்றி" என்றார்.

காப்பியைப் பற்றி நான் படித்த மிகச் சிறந்த வர்ணனை, ப்ரெஞ்சு அறிஞர் டாலிரேண்ட் (Talleyrand) கூறியதே ஆகும். அவரது வர்ணனை: "Black as the devil, hot as hell, pure as an angel, sweet as love." என்னை போலவே அவரும் ஒரு சிறந்த ரசிகராய் இருந்திருக்க வேண்டும்.

அது சரி, இப்போது எதற்கு திடீரென்று இந்த நீளமான காப்பி புராணம் என்று தானே கேட்கிறீர்கள்? என்ன தான் சுவையாக இருந்தாலும், இத்தனை காப்பி குடித்தால் உடலுக்குக் கேடு என்று கட்டிக்கப் போகிற பெண் சொன்னதால் அண்மையில் சென்ற வாரத்திலிருந்து என் உயிரினும் மேலான, என் ரத்தத்தின் ரத்தமான, என்னை வாழ வைக்கும் தெய்வமான என் அருமைக் காப்பியை நான் துறந்து விட்டேன். காப்பி என்பது ஒரு பானமல்ல, அது ஒரு இனிமையான ஞாபகம் என்று சொல்பவர்கள் உண்டு. என்னளவில் அது உண்மையாகி விட்டது. அதன் இனிமையான நினைவுகள் எப்போதும் என் நெஞ்சாங்கூட்டில் அலைந்து கொண்டே இருக்கும்.

பின் குறிப்பு:
"உனக்காக நான் காப்பியை தியாகம் செய்தேனே, நீ எனக்காக என்ன தியாகப் செய்யப் போகிறாய்?" என்று கேட்டேன்.

அதற்கு வந்த பதில் - "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே பெரிய தியாகம் தானே, அதற்கு மேல் என்ன தியாகம் செய்யணும்?"

ஹூம், என்னவோ போங்க.

16 Comments:

Blogger பூனைக்குட்டி said...

மீனாக்ஸ் அடிச்சு ஆடுறீங்க, பிரமாதம்.

April 21, 2006 12:00 AM  
Blogger ROSAVASANTH said...

படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. ரசித்து படித்தேன். அஃப்கோர்ஸ் நானும் காப்பி ரசிகன்.

April 21, 2006 12:41 AM  
Blogger ரவியா said...

//உறிஞ்சி எடுத்து வாய்க்குள் முழுமையாக நிரப்பி, நாக்கை அதில் ஒரு சுழற்று சுழற்றி, நாக்கின் சுவை மொட்டுகள் அனைத்தும் அதில் நனைந்து அந்த சுகத்தை ஒரு விநாடியாவது கண்மூடி அனுபவித்து விட்டு, அப்புறம் தொண்டையை நனைத்து உள்ளே விழுங்குவதே //

wine ன் கூட இப்படி தான் குடிக்கனும்பா !!

// என்னை வாழ வைக்கும் தெய்வமான என் அருமைக் காப்பியை நான் துறந்து விட்டேன்//

இதைப் படித்தாவது அவங்களுக்கு மனம் இளங்காதா என்ன !!!

April 21, 2006 1:10 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

நன்றி மோகன்தாஸ், ரோஸா.

ரவியா, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

April 21, 2006 5:23 AM  
Blogger ilavanji said...

மீனாக்ஸ்,

இதுக்குத்தான் கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணி சாப்படறது, பொகை வளையம் விடறதுன்னு சில அரிய பழக்கங்களை வைச்சுக்கனுங்கறது!! கண்ணாலத்துக்கு அப்பறம் நல்ல பிள்ளையா வரப்போறவகளுக்குக்காக அதையெல்லாம் விட்டுட்டு காபி டீயை காப்பாத்திக்கலாம்!! :)

என்னவோ போங்க! ஜமாய்க்கறீங்க!! :)

April 21, 2006 5:49 AM  
Blogger G.Ragavan said...

அடடா! காப்பிய இவ்வளவு ரசிச்சிக் குடிச்சிருக்கீங்க. படிக்கும் போதே கடைசீல இவ்வளவு குடிக்காதீங்கன்னு சொல்லனும்னு நெனச்சேன். அதச் சொல்ற ஆள் ரொம்பவே பதமாச் சொல்லீட்டாங்க. :-))))))))

அந்தக் மைசூர் காப்பிக்கதை ரொம்ப நல்லாயிருக்கு.

April 21, 2006 9:43 PM  
Blogger பரஞ்சோதி said...

நன்றாக ரசித்து, ருசித்து எழுதியிருக்கீங்க.

எனக்கு சின்ன வயசு முதலே காப்பி, டீ பிடிக்காது, குடிக்காததாலே என்னௌ சுற்றி இருப்பவங்க, நான் ரொம்ப நல்லபிள்ளை என்று சர்டிபிகேட் கொடுக்க, பல வருடங்கள் அதை ருசிக்கவில்லை.

இங்கே சில ஆண்டுகளுக்கு முன்னர் கப்பசினோ குடித்த பின்னர் தான் காப்பியின் அருமை தெரிந்தது, இருந்தாலும் காப்பியின் கசப்பு என்னமோ அதிகம் குடிக்க வைக்க மாட்டேங்குது.

அரபிக்காரர்கள் குடிக்கும் காப்பி தயாரிக்கும் விதமே தனி. கூழ் மாதிரி கெட்டியாக இருக்கும்.

April 21, 2006 9:47 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//இளவஞ்சி said...
இதுக்குத்தான் கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணி சாப்படறது, பொகை வளையம் விடறதுன்னு சில அரிய பழக்கங்களை வைச்சுக்கனுங்கறது!! கண்ணாலத்துக்கு அப்பறம் நல்ல பிள்ளையா வரப்போறவகளுக்குக்காக அதையெல்லாம் விட்டுட்டு காபி டீயை காப்பாத்திக்கலாம்!! :)//

இளவஞ்சி, நீர் ரொம்ப வெவ(கா)ரமான ஆள் தானய்யா. ஹூம்!! இப்பொ பொலம்பி என்ன பிரயோசனம், இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டிய் வயசில உம்ம கூட சேராமப் போயிட்டேனே..!!

April 23, 2006 9:41 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//பரஞ்சோதி said...
நன்றாக ரசித்து, ருசித்து எழுதியிருக்கீங்க.//

நன்றி பரஞ்சோதி, எல்லாம் காப்பி மகிமை தான்.

April 23, 2006 9:42 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//G.Ragavan said...
அடடா! காப்பிய இவ்வளவு ரசிச்சிக் குடிச்சிருக்கீங்க. படிக்கும் போதே கடைசீல இவ்வளவு குடிக்காதீங்கன்னு சொல்லனும்னு நெனச்சேன். அதச் சொல்ற ஆள் ரொம்பவே பதமாச் சொல்லீட்டாங்க. :-))))))))//

என்னாது, பதமாச் சொன்னாங்களா? ஹையோ, ஹையோ..!!

//அந்தக் மைசூர் காப்பிக்கதை ரொம்ப நல்லாயிருக்கு. //

நன்றி GR

April 23, 2006 9:45 PM  
Blogger பெத்தராயுடு said...

எங்க cafeteria-வுல விக்கிற காரமான(ஸ்பெசல்) வெஜ்ஜி பரீட்டோவோட, சூடான French-vanilla (80%) + Capuchinno (20%) காக்டெயில அடிக்கிற சொகம் இருக்கே... அட.. அட.. அடடடா...

April 24, 2006 2:02 AM  
Blogger மகேஸ் said...

நான் தினமும் Costa வில் Latte யுடன் caramel அல்லது vennila flavour சேர்த்துக் குடிப்பது வழக்கம். காசு தான் கொஞ்சம் ஜாஸ்தி. 2 பவுண்டுகள். என்ன செய்ய காப்பிக்குதான் அடிமையாகி விட்டோமே :)_ (காப்பி வாயில் இருந்து ஒழுகுதுங்கோ)

April 25, 2006 5:39 AM  
Blogger Mookku Sundar said...

// உடலுக்குக் கேடு என்று கட்டிக்கப் போகிற பெண் சொன்னதால் அண்மையில் சென்ற வாரத்திலிருந்து என் உயிரினும் மேலான, என் ரத்தத்தின் ரத்தமான, என்னை வாழ வைக்கும் தெய்வமான என் அருமைக் காப்பியை நான் துறந்து விட்டேன். //

ஆரம்பிச்சிட்டாங்கய்யா..ஆரம்பிச்சிட்டாங்க...

தியாகம் பண்ணனுமுன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எவ்ளோ தூரம் போவப் போவுதோ..???!! சுவதானமா இருங்க ராசா...;-)

அவங்களையும் காப்பி ரசிகையா ஆக்கியிருக்க வேணாமா..?? உம்ம IIM வித்தையெல்லாம் அங்க ஜெல்லுபடி ஆவலையோ..?? ;-)

April 25, 2006 10:45 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//Mookku Sundar said...
அவங்களையும் காப்பி ரசிகையா ஆக்கியிருக்க வேணாமா..?? உம்ம IIM வித்தையெல்லாம் அங்க ஜெல்லுபடி ஆவலையோ..?? ;-) //

ஹி ஹி.. அதாவது நாமளே விரும்பி தோத்துப் போறதுன்னு ஒண்ணு இருக்கில்லையா. அந்த அடிப்படையில் ஒண்ணுமே முயற்சி பண்ணலைங்ணா..

April 25, 2006 11:23 PM  
Blogger K Bright Inbasagaran said...

As a serious coffee lover, this blog brought out the flavour of the "greatest coffee aroma" registered in my brain...

April 30, 2006 2:41 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Thank you Bright Inbasagaran

May 01, 2006 11:30 PM  

Post a Comment

<< Home