Wednesday, July 21, 2004

பொன்னியின் செல்வனில் ஒரு காதல் காட்சி

('என்னைப் பாதிக்கும், எனக்கு ஆச்சர்யங்கள் தரும் எழுத்துக்களைப் பற்றி இங்கு கூறுவேன்' என்று preamble கொடுத்து விட்டு இன்னும் நம்ம ஆள் பத்தி எழுதாமல் இருக்கிறாயே, இது blasphemy இல்லையா? என்று க்ருபாவோ பவித்ராவோ என் மேல் குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் முன்னால் இந்தப் பதிவு.)

என்னை எழுதத் தூண்டியவர்களுள் முக்கியமானவர் கல்கி. அவர் எழுத்தைப் படித்து பேச்சு மூச்சில்லாமல் பிரமிப்பில் ஆழ்ந்து போய் நான் நின்ற கணங்கள் என் வாழ்நாளில் பாதிக்கு மேல் இருக்கும். அதற்குக் காரணம் ஒரு கதையல்ல. ஒரு கதாபாத்திரம்: வந்தியத்தேவன். தமிழ் கூறும் நல்ல்லுலகில் என்னைப் போன்ற பல ஆண்களுக்கு மிகச் சிறந்த ஒரு ஆதர்சமாக இருப்பது வந்தியத்தேவனே என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கைகளில் ஒன்று.

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரத்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்
என்று நமக்கு முதல் பக்கத்தில் அறிமுகமாகும் வாணர்குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன், அதன் பிறகு பொன்னியின் செல்வன் புதினத்தில் செல்லும் இடங்கள், ஏற்படுத்திக் கொள்ளும் அனுபவங்கள், புரியும் வீர தீரச் செயல்கள், சமயோசிதமாகச் செய்து முடிக்கும் காரியங்கள், முன்யோசனையின்றி மாட்டிக் கொள்ளும் தருணங்கள் என்று அத்தனையும் அருமையான காட்சிகள். இவை எல்லாவற்றிலும் சிறந்தது, குந்தவை மேல் அவன் கொள்ளும் காதலும், அவன் மேல் குந்தவை கொள்ளும் காதலும். சக்கரவர்த்தியின் மகளுக்கும் நாடோடி வீரனுக்கும் கல்கி நுணுக்கமாகப் போடும் அந்த முடிச்சு மிகச் சுவாரஸ்யமானது.

குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த காட்சி, சிறையிலிருக்கும் வந்தியத்தேவனிடம் குந்தவை தன் மனதை வெளிப்படுத்தும் காட்சி. பிரமாதமான வசனங்களுடனும் வர்ணனைகளுடனும் காதலின் உச்சத்தை எளிமையாக எய்தியிருப்பார் கல்கி.

(வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறான். இளவரசி குந்தவை அவனைப் பார்க்க அங்கு வந்திருக்கிறாள்.)

"... போதும்! என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்..."

"அப்படியானால் உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியது தான்" என்றாள்.

வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான்.

"நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?"

"இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?"

இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு,
"ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?" என்றாள்.
--மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு--
"அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்."

"நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர் தப்ப முடியாது..."

"சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?"

"இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்..."

"பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?"

"என்னுடைய இதயமாகிய சிறைச் சாலையைத் தான் சொல்கிறேன்."

"தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி..."

"யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒரு நாள் பழைய கதை ஆகலாம்."
--அவன் சொன்னதை வைத்தே குந்தவை அவனை மடக்கும் புத்திசாலித்தனம்--
"ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதன்மந்திரியும் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணிய மாட்டார்கள்..."

"இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?"
--மீண்டும் அவன் சொன்னதை வைத்தே அவனை மடக்கும் சாதுரியம்--
"அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்."

"அதிலே தான் என்ன தவறு?"

"நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம் தான் தவறு..."

"'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?"

"அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ?"
--இப்போது வந்தியத்தேவனின் முறை, குந்தவை சொன்னதை வைத்தே அவளை மடக்குவது--
"ம்! பொருந்தும் தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்..."
--வந்தியத்தேவனும் நாமும் கூட எதிர்பாராத வகையில் குந்தவை இவ்விதம் தன் தவறை ஒப்புக் கொள்வது--
"நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் வலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்..."

"இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?"

"ம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் லயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!..."

"மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்..."

"தேவி, தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவர வேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது. விடை கொடுங்கள்..."

"ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?"

"தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்..."

இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனது உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.
--என் பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்று தன் திருக்கரத்தை நீட்டியிருந்தால் கூட நான் இவ்வளவு பரவசம் அடைந்திருப்பேனா தெரியாது--
"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாதரில் சிலர் கணவனுடன் உடன்கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்..!"

"கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!"

"உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம், இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."

வல்லவரையன் சொல்லிழந்து, செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.
--ஒவ்வொரு ஆணும், தன்னிடம் வந்து இப்படி ஒரு பெண் சொல்ல மாட்டாளா என்றும், ஒவ்வொரு பெண்ணும், தான் இப்படி சொல்லத்தக்க ஒரு ஆண் நமக்குக் கிடைக்க மாட்டானா என்று காதல் மயக்கத்தோடு நினைத்துப் பார்த்து ஏங்க வைக்கும் அற்புதமான முடிவு--

Historical Romance எழுதுவதில் கல்கியை வெல்ல இனியும் எவனும் பிறந்து வர முடியாது. ஆமாம்!!

3 Comments:

Blogger kumaresan said...

summa nachnnu irukku! i am longing to read ponniyin selvan... aanaal innum vaaippu kidaikavillai. I felt somewhat good readinf thru urs. please write more..very nice selections....

July 21, 2004 3:27 PM  
Blogger Pavithra said...

Aha...one of my most favourite bits. No matter how many times you read/quote from PS, it remains as fresh as ever.:-)

July 23, 2004 7:18 AM  
Blogger ரவியா said...

//முன்யோசனையின்றி மாட்டிக் கொள்ளும் தருணங்கள் //இதுவே அப்பாத்திரத்திற்க்கு மெருகேற்றுகிறது. A typical action man (not tamil cinema Action man)

July 27, 2004 6:25 AM  

Post a Comment

<< Home