Saturday, August 20, 2005

பொரட்சித் தலீவரு எம்சியாரு

புரட்சித் தலைவர் என்ற அடைமொழியுடன் தமிழகத்தின் முன்னணி நடிகராகவும் அரசியல் தலைவராகவும் விளங்கிய எம்.ஜி.ஆரின் ஆளுமை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டதுண்டு. என் தந்தையே கூட எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்று அறிவேன். அவர் 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தை 25 முறை தியேட்டரில் பார்த்ததாகச் சொல்லியதைக் கேட்டு அசந்திருக்கிறேன். (என் அம்மா சிவாஜி ரசிகர். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணமான புதிதில் தூத்துக்குடியில் இருந்த போது அம்மாவிடம் சிவாஜி படத்துக்குப் போகலாம் என்று பொய் சொல்லி அழைத்துப் போய் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற அளவுக்குத் தீவிர அபிமானி என் அப்பா.) ஆனாலும் இன்னும் கூட கிராமப் புறங்களில் எம்.ஜி.ஆர். உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டு சில ஆசாமிகள் இருக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆர். தன் ஆளுமையை விரித்தது எப்படி என்பது குறித்து நான் பலமுறை அதிசயித்ததுண்டு.

நானும் என் பங்குக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் தான். ஐ.ஐ.எம்.மிலே படித்துக் கொண்டிருந்தபோது ரிலீஸான 'பாபா' திரைப்படத்துக்கு எங்கள் ஹாஸ்டல் முழுக்க போஸ்டர் எழுதி ஒட்டியது போல் நானும் என்னால் முடிந்த அளவுக்கு crazy things செய்திருக்கிறேன். ஆனாலும் இந்த எம்.ஜி.ஆர். என்ற ஆளுமையின் பிரம்மாண்டம் என்னை எப்போது அதிசயப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. அவரது படங்களில் அவர் முன்னிறுத்திய 'ரொம்ப நல்லவர்', 'ஏழைப் பங்காளன்', 'பெண்களின் மீது அன்பும் மரியாதையும் மிக்கவர்' என்பது போன்ற இமேஜ்களையும் மீறி அவர் மக்கள் மனத்தில் அந்த இடத்தைப் பிடிக்க என்னமோ மாயாஜாலம் செய்திருப்பதாகத் தான் எனக்கு எப்போதும் தோன்றும்.

எதற்கு இப்போது இந்தக் கதை என்றால், அண்மையில் எனது அலுவலகத்தில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஒரு 'filmy fashion show' நடத்தினோம். திரை நடிகர்-நடிகையர் போல் மேடையில் தோன்றி ஆடிப் பாடும் ஒரு நிகழ்ச்சி. அதில் ஒரு பகுதியாக எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் இடம்பெறும் 'நான் ஆணையிட்டால்' பாடலுக்கு எம்.ஜி.ஆர். போல் மேடையில் தோன்றி நடித்தேன். நீலக் கலர் சில்க் துணியில் அரைக்கைச் சட்டை (புஜம் தெரிய மடித்து விட்டுக் கொண்டு!!), வெள்ளையில் கால்சட்டை, கூலிங் க்ளாஸ், தொப்பி என்று சகலமும் அணிந்திருந்தேன். சுமார் ஒரு நிமிடம் நான் செய்த அந்த performance-க்குக் கிடைத்த வரவேற்பு என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டது. கன்னடியர்களும் வட இந்தியர்களும் நிறைந்த அந்த அரங்கில் கொஞ்சப் பேரே தமிழர்கள் இருப்பார்கள். இருந்தாலும் 'ஒன்ஸ் மோர்' கேட்டு அடுத்த நிகழ்ச்சிக்குப் போக முடியாத அளவுக்கு அப்படி ஒரு அப்ளாஸ். நானும் பத்து வருடங்களாக மேடையில் தோன்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். என் மேடை வாழ்க்கை வரலாற்றிலேயே அன்று தான் நான் வாங்கிய பலத்த கரகோஷமும் விசிலும்.





நானே எதிர்பார்க்காத அளவுக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகப் பிடித்துப் போனது. எனது நிறுவனத்தின் எம்.டி. கூட தான் ஒரு நல்ல எம்.ஜி.ஆர். ரசிகர் என்று கூறி என்னைப் பாராட்டினார். குறிப்பாக கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கால்களை ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி நீட்டி குதித்துக் கொண்டு போவாரே எம்.ஜி.ஆர், அதைச் செய்த பாங்கை அனைவரும் பாராட்டினார்கள். 'அன்பே வா' படத்தில் புதிய வானம், புதிய பூமி பாடலில் புதிய வானம் என்று சொல்லி எம்.ஜி.ஆர். பூமியைக் காட்டுவார் என்றும், புதிய பூமி என்று சொல்லி வானத்தைக் காட்டுவார் என்று நுட்பமாக ரசித்திருந்ததையெல்லாம் அவர் நினைவு கூர்ந்து பேசும் அளவுக்குப் போனது.

அன்றைக்குத் தான் எனக்கு எம்.ஜி.ஆர். என்ற திரை ஆளுமையின் மகோன்னதம் கண்கூடாகப் புலப்பட்டது. His charisma is beyond my words.