Monday, July 12, 2004

நதிக் காதலன் நான்

என் எழுத்தின் பல தளங்களில் நதிகள் ஒரு குறிப்பிடத்தக்க பாகத்தை வகிக்கின்றன. இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடுமென்று எனக்கு விளங்கவில்லை. சில உதாரணங்கள்:

- எனது முதல் சிறுகதை: நதிக்கரை நாகரிகம் (மரத்தடி குளிர்காலப் போட்டி 2004-க்கு எழுதியது)

- எனது ஆங்கில வலைப்பதிவின் பெயர்: The River of My Life (சக வலைப்பதிவாளர் பவித்ரா, தனது ஆங்கில வலைப்பதிவில் எனக்கு link தரும்போது, என்னை "The River Guy" என்று சொல்லி, "This one is river-mad :-)" என்றும் வர்ணிக்கிறார்.)

- நான் தற்போது தொடர்ந்து எழுதி வரும் நதிக் கவிதைகள்: 1 | 2 | 3 | 4 | 5

இந்த உதாரணங்கள் இல்லாமல், இயல்பு வாழ்க்கையிலேயும் கூட எனக்கு நதிகளைப் பற்றிய ஒரு பிரமிப்பு உண்டு. என் பொறியியல் கல்லூரியின் சார்பில் நாங்கள் சுற்றுலா சென்ற போது ரிஷிகேஷில், லக்ஷ்மண் ஜூலா என்ற பாலத்தில் நின்று கொண்டு, நடுக்கும் குளிரில் பெருநதியாய்ப் பிரவாகமெடுத்துக் கொண்டிருந்த கங்கையைப் பார்த்த போது என்னுள் ஏற்பட்ட பிரமிப்பு அடங்க வெகு காலமாகியது. இயற்கையின் முன்னால் மனிதன் எவ்வளவு சிறியவன் என்று எனக்கு உணர்த்திய ஒரு நிகழ்வு அது.

நதிகளின் மீதான எனது இந்த fascination-க்கு என்ன காரணமாக இருக்கும்?

அப்படியொன்றும் நான் நதியென்னும் தொட்டிலில் மிதந்து, கரைகளில் விளையாடி வளர்ந்தவன் கிடையாது. பத்து வயது வரை தூத்துக்குடியில் வளர்ந்தேன். ஆனால் தாமிரபரணியிலிருந்து ரொம்பத் தூரம். ஒரு தடவையும் போனதே இல்லை. அதற்குப் பிறகு நான் சென்னை வாசி. கூவத்தைப் பார்த்தெல்லாம் நதிகளின் மேல் ஒரு பிடிப்பு வருமென்று நான் நம்பத் தயாராயில்லை. இப்போது சில ஆண்டுகளாக இருக்கும் பெங்களூரில் நதியுமில்லை, கடலுமில்லை.

உலகில் எனக்குப் பிடித்தமான இடம் மதுரை. ஆனால் இது வரை ஒரு முறை கூட வைகை கரை புரண்டு ஓடி நான் பார்த்ததில்லை. (ஒரு முறை மதுரையிலிருந்து அலுவலகப் பணியாக ராமநாதபுரத்துக்கு ஒரு வட இந்திய நண்பனுடன் போய்க் கொண்டிருந்தேன். சாலையில் ஒரு பக்கம் வைகை. அவன் நதியின் பெயர் கேட்க நானும் உணர்ச்சி வசப்பட்டு, வைகையைப் பற்றிக் கேட்டிருந்த கதைகள் பலவற்றை எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன். அவன் கொஞ்ச நேரம் கழித்து, "நானும் எத்தனையோ நதிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் அழுக்குத் துணிகளை எடுத்து வந்து அலசி எடுத்து எங்காவது கொண்டு சென்று காயப் போடுவார்கள். ஆனால் இப்போது தான் முதல் முறையாக வீட்டிலிருந்து துணிகளை அலசிக் கொண்டு வந்து நதியிலே (நதியோடிய இடத்திலே) காயப் போடுவதைப் பார்க்கிறேன்" என்றான். என் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வதென்று எனக்குத் தெரியாமற் போயிற்று.) :-(

'நதிக்கரையில் தோன்றிய மனித நாகரிகத்தின் நதி குறித்த fascination என்னுள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது' என்றால் நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு, 'தம்பி! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்-னு உனக்கே தோணலியா?' என்பீர்கள். வேண்டாம்.

டார்வினின் விரிவளர்ச்சித் தத்துவப்படி (theory of evolution) நாமெல்லோரும் நீர் வாழ் உயிரினங்களிலிருந்து விரிவளர்வடைந்து வந்தோமென்று வைத்துக் கொண்டாலும் கூட என்னைப் போலப் பிறருக்கு நதியின் மேல் இவ்வளவு ஈடுபாடு இருக்குமாவென்று தெரியவில்லை. பல்வேறு நீர் ஆதாரங்கள் இருக்கும் போது குறிப்பாக நதி மீது மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு என்றும் புரியவில்லை.

ஒரு வேளை நதியின் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறதோ என்னவோ. ஓரிடத்தில் பிறந்து, ஓடும் திசையெல்லாம் முடிந்ததைச் சேர்த்து, வளமை கொடுத்து, தாற்காலிகமாக கடலில் முடிந்து, மீண்டும் ஓரிடத்தில் பிறந்து...

நானும் நதி போல வாழ விரும்புகிறேனோ என்னவோ?

ரிதம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய நதிப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

நடந்தால் ஆறு, எழுந்தால் அருவி, நின்றால் கடலல்லோ.

இங்கு விழுந்தால் அருவி என்று சொல்லாமல் எழுந்தால் அருவி என்று சொல்லும் இடத்தில் தான் என்ன ஒரு நயம்.

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரை தொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே.

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்,
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே.
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருனை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே.

வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் பட்டால் உருகும்
நீரும் ......... ஒன்று வாடையிலே.

தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் ஓஹோ.

தீங்கனியில் சாறாகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே.

நதியே நதியே காதல் நதியே..!!

0 Comments:

Post a Comment

<< Home