Friday, February 25, 2005

குழந்தை வளர்ப்பு

நேற்று மாலை என் அலுவலகத்தில், பெற்றோர்கள் தங்கள் வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பேச்சு நடைபெற்றது. நானும் போயிருந்தேன்.'இன்னும் கல்யாணம் கூட ஆகலை, அதுக்குள்ளே குழந்தை வளர்ப்பு பத்தி இவ்ளோ அக்கறையா? வெரி குட்' என்று நிகழ்ச்சி நடத்தியவர்கள் என்னைப் பாராட்டிய போது, 'அதெல்லாம் ஒண்ணும் இல்லை, என் அப்பா அம்மா என் கிட்ட சரியான முறையில நேரம் செலவழிச்சாங்களான்னு தெரிஞ்சு கொள்ள வந்தேன்' என்று ஜோக்கடித்தேன். இருந்தாலும் எனக்கு மகள் பிறக்க வேண்டுமென்றும் அவளை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமென்றும் எனக்கு இருக்கும் ஆசைகள் பலரும் அறிந்ததே என்பதால் நான் அந்த நிகழ்ச்சிக்குப் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அதிலே சொல்லப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள் இவை -

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

-- பெற்றோருடன் அதிக ஒட்டுதல் எற்படும் (Bonding)
-- பெற்றோர்கள்கள் குழந்தைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். புரிந்து கொண்டால் தான் அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய இயலும் (Understanding)
-- குழந்தைகள் தனது அனுபவங்களைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் (Sharing of experiences)
-- பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் பாடங்களை குழந்தைகளுக்குக் கற்றுத் தர ஒரு சந்தர்ப்பமாக அமையும் (Passing of the knowledge)
-- குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரிடம் எந்த விஷயமானாலும் பேசலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் (Building trust)
-- தங்கள் பெற்றோரின் வாழ்வில் தாங்கள் ஒரு முக்கிய பகுதி என்பதை அறிந்து அவர்களுக்கு ஒரு சுயமதிப்பு ஏற்படும் (Self-esteem)

பெற்றோர்களுடன் சிறு வயதில் அதிக நேரம் செலவழித்து நெருக்கம் பெற்ற குழந்தைகள், தங்கள் பதின்ம வயதுகளில் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும்.

நேரம் செலவழிப்பது என்பதை "தரமான நேரம்" (Quality Time) என்று கூறுகிறார்கள். ஏனோதானோவென்று குழந்தையுடன் இருப்பதை தரமான நேரம் என்று கருத இயலாது. அதற்கென்று சில அம்சங்கள் இருக்கின்றன:

-- குழந்தையுடன் தனியாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களோடு பழக வேண்டும் (alone with and interacting with the child). இதிலே இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஏதோ ஒரு கல்யாணத்துக்குக் குழந்தையுடன் போய்வந்து விட்டு, "இன்று நான் என் குழந்தையோடு தரமான நேரம் செலவழித்தேன்" என்பது ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. நீங்களும் குழந்தையும் ஒரு தனி இடத்தில் இருக்க வேண்டும். இன்னொன்று இருவரும் ஒரு தனி அறையில் அமர்ந்து ஆளுக்கு தனியாக ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் அதுவும் சரி கிடையாது. இருவரும் பேசிப் பழக வேண்டும் அப்போது தான் அது தரமான நேரமாகக் கருதப்படும். இதிலே ஒருமித்த நேரம் (focussed time) என்றும், இணைந்து இருக்கும் நேரம் (hang around time) என்று இருவகைகள் உண்டு. ஒருமித்த நேரம் என்பது, இருவரும் இணைந்து ஒரு முக்கியமான செயலைச் செய்வது. இணைந்து இருக்கும் நேரம் என்பது இருவரும் சேர்ந்து ஏதாவது (முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) செய்வது. ஆனால் எந்த வகையில் நேரம் கழித்தாலும் உங்களது கவனம் 100 % குழந்தையை நோக்கியதாக இருக்க வேண்டும்.

-- சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது (demonstrating love through words and actions). நீங்கள் இணைந்து இருக்கின்ற நேரத்தில் உங்களது சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இருப்பினும் இதனை சூழ்நிலை மற்றும் குழந்தையின் வயது ஆகியவற்றை மனதில் கொண்டு செய்யலாம்.

-- சிறப்பான தாக்கம் ஏற்படுத்த வேண்டும் (having a special impact). ஒருமிக்கும் நேரம் (connect times) என்று ஒன்று உண்டு. அதாவது நாம் குழந்தையை நீண்ட நேரம் பிரிவதற்கு சற்று முந்தைய நேரம் (நாம் அலுவலகம் செல்லும் போது அல்லது குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது), நீண்ட காலத்துக்குப் பின் மறுபடி காணும் நேரம் (அலுவலகத்திலிருந்து/பள்ளியிலிருந்து திரும்பிய நேரம்), இரவு படுக்கைக்குச் செல்லும் நேரம் போன்றவை. இந்த நேரங்களில் குறிப்பாக பெற்றோரின் அன்பும் கவனமும் கிடைக்கப்பெற்றால் குழந்தைகள் மிகவும் மனம் மகிழ்கிறார்கள். இது அவர்களின் மனதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களின் பிறந்த நாள் அல்லது அவர்கள் மேடையில் கலைத் திறனை வெளிப்படுத்தும் நேரம் ஆகியவற்றின் போதும் பெற்றோர்கள் உடனிருப்பது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

-- குழந்தைகள் விரும்பும் மற்றும் குழந்தைகள் ஆரம்பித்த வேலைகளின் போது (child initiated and child sanctioned activities). அதாவது குழந்தைக்குப் பிடித்தமான ஒரு வேலையின் போது நீங்கள் உடனிருந்தால் தான் அது தரமான நேரமாக கருதப்படும். ஒரு குழந்தைக்கு வீட்டுப் பாடம் செய்ய அவ்வளவாய்ப் பிடிக்காது எனும்போது வீட்டுப்பாடம் செய்ய நீங்கள் உதவினாலும் அது தரமான நேரமாக குழந்தைக்குத் தோன்றாது. அதற்குப் பிடிக்கிற ஒரு வேலையை அதற்கு அடுத்து அந்தக் குழந்தை செய்யும்போது நீங்கள் உடனிருந்தால் அது நன்று.

தரம் என்பதோடு நேரத்தின் அளவும் (quantity of time) முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக குழந்தைகள் சிறிய வயதினராய் இருக்கும் போது மேலே குறிப்பிட்ட வகைகளில் அதிக நேரத்திற்கு அவர்களோடு பழகி இருக்க வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் சிறிய வயதில் அவர்களுக்கு உங்களின் அன்பும் கவனிப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறது. மேலும் சிறிய வயதிலே தான் உங்களாலும் அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்த இயலும்.

குழந்தைகளோடு நெருக்கத்தை வளர்க்க உங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய அவர்களின் முதல் பதினைந்து வருடங்களுக்காவது அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது கண்டிப்பாக பின்னாட்களில் அதிகமான பலனை அளிக்கும்.

Sunday, February 20, 2005

'பங்கு' - அசோகமித்திரன் சிறுகதை

இந்த வாரம் வலையுலகில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா குறித்து சில பதிவுகள் இருந்தன. என் பங்குக்கு, அவரது சிறுகதை ஒன்றை இங்கு உள்ளிடுகிறேன். சிறுகதையின் பெயர் - பங்கு.

-o0o-

தலை தீபாவளிக்கு ஊருக்கு அண்ணா, மன்னியுடன் லலிதாவும் போவதாக முடிவாயிற்று. மன்னியின் பெயரும் லலிதா தான்.

'லலிதா!' என்று கூப்பிட்ட குரலுக்கு இருவர் பதில் கொடுப்பதில் அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம் தான். ஆனால் மன்னி வீட்டுக்கு வந்தவுடன் முதல் மாறுதல் இந்தப் பெயர் விஷயத்தில் தான் நிகழ்ந்தது. அண்ணாதான் முடிவெடுத்தான். மன்னியின் பெயரைக் கூப்பிடும் அளவிலாவது மாற்ற வேண்டும். என்ன புதுப்பெயர் வைப்பது? அம்மா காமாட்சி என்றாள். அண்ணா பத்மினி என்றான். லலிதாவுக்கு முதலில் இந்தப் புதுப் பெயரின் காரணம் தெரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் லலிதா, பத்மினி என்று இரு சகோதரிகள் கொடி கட்டிப் பறந்தார்கள் என்று. மன்னி பெயரைப் பத்மினி என்று கூடக் கூப்பிடாமல் பப்பி என்று அண்ணா அழைக்க ஆரம்பித்தான்.

அவன் வாங்கி வந்த இரயில் டிக்கெட்டுகளை லலிதா வாங்கிப் பார்த்தாள். ஒன்று அண்ணாவுடையது. அடுத்தது பத்மினியுடையது. மூன்றாவது அவளுடையது. தனித்தனி டிக்கெட்டுகளை எப்படி வேண்டுமானாலும் வரிசைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அண்ணா ரிஸர்வே்ஷன் விண்ணப்பத்தில் என்ன வரிசயில் எழுதியிருப்பான் என்று எண்ணிப் பார்த்த போது லலிதாவுக்கு ஒருகணம் மனம் சுருங்கியது.

தீபாவளி காலமாதலால் இரயில் பெட்டிகள் நிரம்பியிருந்தன. மூவராக ஊருக்குக் கிளம்புவதாக இருக்கக் கூடாது என்று தம்பியும் ஸ்டே்ஷன் வரையில் வந்தான். இரயிலில் இடம் கண்டுபிடித்துச் சாமான்களை ஏற்றியவுடன் அண்ணா அவனைத் திருப்பி அனுப்பி விட்டான்.

இரண்டாம் வகுப்பில் மூன்றடுக்குப் படுக்கை வண்டி. மூன்று பேருக்கும் ஒரே பிரிவில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கீழ் பெஞ்சில் மூவரும் உட்கார்ந்தார்கள். லலிதா ஜன்னல் பக்கம் போய் உட்கார்ந்தாள். அவளுக்குப் பக்கத்தில் மன்னி. அவளுக்குப் பக்கத்தில் அண்ணா. இரயிலில் ஏறியதிலிருந்து மன்னி உஸ் உஸ்ஸென்று புடவைத் தலைப்பால் தன்னை விசிறிக் கொண்டிருந்தாள்.

எதிர் பெஞ்சில் இரு சிறு குழந்தைகள் கொண்ட ஐவர் குடும்பம். மன்னியின் பக்கம் ஒரு மின்சார விசிறியைத் திருப்ப முடியுமாவென்று அண்ணா முயன்று பார்த்தான். ஆனால் விசிறிகள் ஒரே நிலையில் இருக்கும்படியாகப் பொருத்தப் பட்டவை.

"லலிதா. நீ இந்தப் பக்கம் வந்து உட்காரேன். மன்னியை ஜன்னலுக்கு விட்டுடு!" என்று அண்ணா சொன்னான். லலிதா எழுந்திருக்க மன்னி ஜன்னலருகில் நகர்ந்தாள். அவளுடன் அண்ணாவும் நகர்ந்தான். லலிதா பெஞ்சு கோடியில் உட்கார்ந்தாள்.

இரயில் கிளம்பியது. உடனேயே எதிர்வரிசைக் குடும்பம் உணவு மூட்டையைப் பிரிக்கத் தொடங்கியது. லலிதாவுக்குப் பசிப்பது போலிருந்தது. "நாம்பளும் சாப்பிட்டுடலாமா?" என்று அண்ணாவைக் கேட்டாள். மன்னி முந்திக் கொண்டு, "எட்டு மணியாவது ஆகட்டுமே" என்றாள். வீட்டில் இரவுச் சாப்பாடு எட்டு, எட்டரைக்குத்தான் துவங்கும். ஆனால் இரயிலில் ஏழு மணிக்கு லலிதாவுக்குப் பசித்தது.

இரயில் இருளைக் கிழித்துக் கொண்டு விரைந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த இருளிலும் அண்ணா ஜன்னல் வழியாக மன்னிக்கு எதையோ சுட்டிக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தான். அவளும் அதை மிகவும் ரசித்தபடி தோற்றம் கொண்டிருந்தாள். உண்மையில் அவன் நெருக்கியடித்து உட்கார்ந்தது தான் அந்த மலர்ச்சியை உண்டு பண்ணி இருக்க வேண்டும்.

அவனுக்கும் லலிதாவுக்கும் இடையில் நிறைய இடைவெளி இருந்தது. அப்படியே காலை மடக்கிக் கொண்டு படுத்து விடலாம் என்று கூட எண்ணினாள். ஆனால் எதிர்வரிசைக் குடும்பத்தின் குழந்தை ஒன்றை எதிர்வரிசைக்காரர் அங்கு உட்கார வைத்தார். லலிதா உட்கார்ந்தபடியே தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாள்.

செவி மட்டும் செயல்படும்போது ஒரே நேரத்தில் இவ்வளவு ஒலிகள் எழும்பப்படுகின்றன என்று லலிதாவுக்கு உணர முடிந்தது. அவள் பார்வை எட்ட முடியாத அந்தப் பெட்டியின் பிற இடங்களில் கூட நிறைய பேர் பேசிக் கொண்டிருப்பதை அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது. கூரையில் பொருந்த்தி வைக்கப்பட்ட விசிறிகள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாகச் சப்தம் எழுப்பின. இதெல்லாவற்றுக்கும் பின்னணியாக இரயிலோட்டத்தின் சப்தம். அண்ணாவும் மன்னியும் விடாது பேசிக் கொண்டிருந்தார்கள். நடு நடுவில் மன்னியின் சிரிப்பொலியும் கேட்கும்.

அண்ணா வேடிக்கையாகப் பேசக் கூடியவன் தான். அவர்கள் குடும்பத்தில் இரயில் பயணம் நேரும்போதெல்லாம் அவனும் லலிதாவும் தான் சேர்ந்து உட்காருவார்கள். அவனுக்கு அவளிடம் பேச அவ்வளவு வி்ஷயங்கள் இருந்தது. அவளாலும் அவனைத் தொடர்ந்து பேச வைக்ககூடிய வகையில் அவன் பேசும் விஷயங்களிலும் கலந்து கொள்ள முடிந்திருக்கிறது. அவள் வாய்விட்டுச் சிரிக்கமாட்டாள். அதே நேரத்தில் அவன் பேசிலுள்ள நகைச்சுவை என்றும் அவளிடமிருந்து நழுவிப் போனதில்லை. அதுவே அண்ணாவை இன்னும் அதிகமாகவும் புதுமையாகவும் பேச வைக்கும். இப்போது அந்த அண்ணாவுக்கு அவளிடம் பேச எதுவுமே இல்லாது போயிருந்தது. இரயிலில் ஏறியதிலிருந்து 'ஜன்னல் பக்கத்தை மன்னிக்குக் கொடுத்து விடு' என்று மட்டுந்தான் பேசத் தோன்றியிருக்கிறது.

மன்னிக்குப் பசி வந்துவிட்டது என்று எண்ணும்படி அவளே அண்ணாவிடம், "இப்ப சாப்பிடறேளா, இன்னும் கொஞ்சம் நாழியாகட்டுமா?" என்று கேட்டாள். அவன் என்ன பதில் சொன்னான் என்று கண்களை மூடிக் கொண்டிருந்த லலிதாவுக்குத் தெரியவில்லை. மன்னி டிபன் கேரியரைத் திறக்கும் சப்தம் கேட்டது. லலிதா கண்ணைத் திறந்தாள்.

மன்னி டிபன் கேரியர் மூடியில் உணவு எடுத்து வைத்து லலிதாவிடம் தான் முதலில் கொடுத்தாள். அவன் முறைக்காக அண்ணாவும் காத்திருந்தான். ஒரு டிப்ன காரியர் தட்டை ஒரு மாதிரி காலை செய்து அதில் அண்ணாவுக்குச் சாப்பாடு தந்தாள். லலிதாவும் அண்ணாவும் சாப்பிடத் தொடங்கினார்கள். அண்ணா லலிதாவின் பக்கம் திரும்பி, "ஏன் ஒரு மாதிரி இருக்கே? உடம்பு ஏதாவது சரியில்லையா?" என்று கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லையே" என்று லலிதா பதில் சொன்னாள்.

அண்ணா மன்னியைப் பார்த்து, "நீ சாப்பிடலயா?" என்று கேட்டான்.

"நீங்க முதல்லே முடிங்கோ" என்று மன்னி சொன்னாள். அண்ணா மன்னிக்கு சற்று அதிகமாகவே பணிந்து போவது போல் லலிதாவுக்குத் தோன்றியது. அவன் மறுபேச்சு பேசாமல் சாப்பிட்டான்.

பசி அடங்கியதில் லலிதாவுக்கு உற்சாகம் திரும்பியது. அவள் அண்ணாவுடன் பேசக் காத்திருந்தாள். பேசி முடிவெடுக்க வேண்டிய காரியம் ஒன்றும் கிடையாது. என்றாலும் அவளுக்கு ஏதாவது பேச வேண்டும் என்றிருந்தது. ஆனால் மன்னியும் அவள் உணவை முடித்துக் கொண்டவுடன் அண்ணா படுக்கையைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டான். கீழ் அடுக்கில் மன்னி. நடு அடுக்கில் லலிதா, அவன் மூன்றாவதில் ஏறிப் படுத்தும் விட்டான். இனி காலை ஆறு மணி வரை அவர்கள் யாவரும் படுத்தபடியே தான் இருக்க வேண்டும். மூன்றடுக்குப் படுக்கை வண்டியில் யாவரும் படுத்தபடி இன்னொருவருடன் பேச முடியாது.

எதிர்வரிசைக் குடும்பமும் ஒரு மாதிரி தூக்கத்துக்கு ஆயத்தமாகி விட்டது. லலிதா தூங்க முடியவில்லை. வீடு வரையில் மன்னி வந்து சேர்ந்தது, சில மேலோட்டமான மாறுதல்களை தான் சேர்த்திருந்தது. ஆனால் இந்த இரயில் பயணத்தின் போதுதான் அந்த மாறுதல்களின் பரிணாமங்களை அதிகமாக உணர முடிந்தது. உடைமைகளைப் பகிர்ந்து கொள்வதைவிட உடன்பிறந்தவனைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமமான காரியம் என்று தெரிந்தது.

லலிதா படுத்தபடியே தலையை நீட்டித் தன் மன்னியை எட்டிப் பார்த்தாள். நாளெல்லாம் உழைத்துக் களைப்புற்றதை அவள் தூங்குவதில் நன்கு காண முடிந்தது. வீட்டு மருமகளாக ஒருத்தி வந்துவிட்டால் எப்படியோ அந்த வீட்டு வேலைகள் அதிகரித்து விடுகின்றன. அவற்றில் பெரும்பகுதி அந்த மருமகள் தலையில் விடிந்து விடுகிறது.

லலிதாவுக்கு அவள் புகப் போகும் வீடு எப்படி இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. மன்னியும் அவள் திருமணத்திற்கு முன்பு எப்படியெல்லாம் நினைத்திருப்பாளோ? ஆனால் இப்போது அவளது எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி அடைந்த மாதிரி தான் நடந்து கொள்கிறாள். உண்மையிலேயே அப்படித் தானா?

லலிதா அவள் பார்த்த தமிழ் சினிமா எல்லாவற்றிலும் ஏதாவது ஓரிடத்தில் பெண் மனதைப் பெண் தான் அறிய முடியும் என்று வசனம் பேசப்பட்டதை நினைத்துக் கொண்டாள். அவளுக்கு அவளுடைய மனதையே அறிய முடியவில்லை. இதே மன்னியை ஒரு சமயம் பார்க்கும் போது எரிச்சல் வந்தது. இன்னொரு முறை பச்சாதாபம் மேலிட்டது. ஆனால் ஒன்று மட்டும் ஒருவாறு புலனாயிற்று. யாரோ ஒருவருடைய சுகசௌகரியத்தைப் பறிக்காதபடி கல்யாணமே சாத்தியமில்லை.

அவளுக்கு அந்த நேரத்தில் கல்யாணமே வேண்டாம் என்று தான் எண்ணத் தோன்றியது.


-o0o-

நன்றி: நெஞ்சில் நிற்பவை - 60 முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள் - முதல் தொகுப்பு - தொகுப்பாசிரியர்: சிவசங்கரி, வானதி பதிப்பகம், இரண்டாம் பதிப்பு மே 2003, ரூ.150

Saturday, February 19, 2005

தேஷ் (Desh) - வங்காள மொழிப் பத்திரிக்கை

அண்மையில் ஆனந்த பஸார் பத்ரிகா குழுமத்தின் சார்பில் பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வட-கிழக்கு பகுதியிலுள்ள சந்தை வாய்ப்புகள பற்றியும், அங்குள்ள சந்தையை எளிதாக சென்றடைய தங்கள் குழுமப் பத்திரிக்கைகள் எவ்வாறு பயன்படும் என்பதைப் பற்றியும் அந்நிகழ்ச்சியில் விளக்கினார்கள். என்னுடைய மார்க்கெட்டிங் டைரக்டர், இந்நிகழ்ச்சிக்குப் போய் வருமாறு என்னைப் பணித்தார்.



அங்கு சென்றிருந்த போது, ஆனந்த பஸார் பத்ரிகா குழுமத்தின் பல்வேறு பத்திரிக்கைகளை காட்சிக்கு வைத்திருந்தனர். தேஷ் என்ற மாதமிருறை வெளியாகும் பத்திரிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் - அந்தப் பத்திரிக்கையில் ஓவியங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம். எனக்கு வங்காள மொழி தெரியாதெனினும், உள்ளடக்கத்தின் போக்குகளை வைத்துப் பார்க்கையில் (முதல் பாதி சமீபத்திய நிகழ்வுகளும், இரண்டாம் பாதி கவிதை, கதை, கட்டுரை ஆகிய இலக்கியப் படைப்புகளும்) இதை தமிழின் எந்தவொரு சிறுபத்திரிக்கையுடனும் ஒப்பிடலாம் என்று தோன்றியது. குறிப்பாக அதில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. சாம்பிளுக்கு சில கீழே:





இவற்றை விடவும், புகழ்பெற்றவர்களைப் பற்றிய கட்டுரைகளில் அவர்களின் உருவச் சித்திரங்கள் மிக அற்புதமாக வரையப்பட்டிருந்ததாக எனக்குப் பட்டது. அவற்றில் சில சாம்பிள்கள் கீழே:





-o0o-

குறிப்பு: படங்களின் ஒரிஜினல் அளவை சுருக்கி இங்கு இட்டிருக்கிறேன். ஓவியர்களின் பெயர்கள், வங்காள மொழியில் இருந்திருக்கக் கூடும். என்னால் அறிந்து இங்கு குறிப்பிட இயலவில்லை.

Wednesday, February 16, 2005

கபீர் கவிதை ஒன்று

இன்றைக்கு பத்ரி தனது பதிவிலே "மூன்று மொழிகள் தெரிந்தவர்கள் அபூர்வமானவர்கள், ஆச்சர்யப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப்படிக்கக் கூடியவர்கள், பொறாமைப்பட வைப்பவர்கள்." என்று சொல்லியிருக்கிறார். இந்தியும் ஆங்கிலமும் எனக்கு எழுதப்படிக்கத் தெரியுமாதலால் நானும் அந்த லிஸ்டில் உண்டு. இருந்தாலும் அதில் ஆச்சர்யப்பட ஏதுமிருப்பதாக நினைக்கவில்லை. மூன்றைத் தாண்டி நான்குக்குப் போனால் அப்படி ஆச்சர்யப்படலாம் என்பேன்.

இந்தியை நான் தனியாக தக்ஷிண் பாரத் இந்தி பிரச்சார் சபா மூலமாகப் படித்தேன். எட்டு தேர்வுகளும் எழுதியிருக்கிறேன். அப்போதிலிருந்தே எனக்கு கபீர் என்றால் மிகவும் விருப்பம். எனது ஆசிரியரின் பாதிப்பாகக் கூட இருக்கலாம். வாரமொருமுறை கபீரின் சில கவிதைகளை எடுத்து வைத்துப் படிப்பதுண்டு. ஒவ்வொரு முறையும் சில புதிய அர்த்தங்கள் எனக்குப் புரிய வரும்.

அண்மையில் நான் படித்த கபீரின் சிறப்பான கவிதை ஒன்று இங்கே:

मॊकॊ कहाँ दूदॆ रॆ बन्दॆ
मैं तॊ तॆरॆ पास मॆं
ना तीरत मॆ ना मूरत मॆं
ना एकान्त निवास मॆं
ना मन्दिर मॆं ना मस्जिद मॆं
ना काबॆ कैलास मॆं
मैं तॊ तॆरॆ पास मॆं बन्दॆ
मैं तॊ तॆरॆ पास मॆं
ना मैं जप मॆं ना मैं तप मॆं
ना मैं बरत उपास मॆं
ना मैं किरिया करम मॆं रह्ता
नहिं प्राण मॆं नहिं पिण्ड मॆं
ना ब्रह्माण्ड आकाश मॆं
ना मैं प्रक्रुति प्रवार गुफा मॆं
नहिं स्वांसॆं की स्वांस मॆं
खॊजि हॊए तुरत मिल जाउं
इक फल की तालास मॆं
कहत कबीर सुनॊ भई सादॊ
मैं तॊ हूं विश्वास मॆं

எங்கு தேடுகிறாய் என்னை?
நான் உன்னோடு தான் இருக்கிறேன்.

யாத்திரைகளில் அல்ல, உருவங்களிலும் அல்ல,
தனிமையில் அல்ல,
ஆலயங்களில் அல்ல, மசூதிகளில் அல்ல,
காபாவிலும் கைலாயத்திலும் அல்ல,
நான் உன்னோடு இருக்கிறேன் மானிடா,
உன்னோடு தான் இருக்கிறேன்.

பிரார்த்தனைகளில் அல்ல, தவத்தினிலும் அல்ல,
விரதத்தில் அல்ல,
துறவிலும் அல்ல,
இயக்கச் சக்திகளில் அல்ல, உன் உடலிலும் அல்ல,
அகண்ட வெளியில் அல்ல,
இயற்கையின் கருவிலும் காற்றின் மூச்சிலும் அல்ல,
கவனத்துடன் தேடிப் பார்,
கண நேரத்தில் கண்டு கொள்வாய் என்னை.

சொல்கிறான் கபீர், கவனமாய்க் கேள்,
உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ,
அங்கெல்லாம் நானிருக்கிறேன்.


நன்றி: காமராஜ் இந்தி யூனிகோடு செயலி

Monday, February 14, 2005

உங்க வலைப்பதிவில இருக்கா பன்ச்லைன்?

நம்ம பத்ரி அண்மையில ஜெயிச்சாரே, சிறந்த தமிழ் வலைப்பதிவுன்னு 'Indibloggies 2004 award', அதில இன்னொரு பிரிவு என்னை ரொம்பவே கவர்ந்துச்சு.

அதாவது இந்திய ஆங்கில வலைப்பதிவுகளில நச்சுனு ஒரு 'பன்ச்லைன்' இருக்கிற வலைப்பதிவு யாருதுன்னு.

இதில ஜெயிச்சவர் ரவிகிரண் அப்படிங்கறவர். அவரோட வலைப்பதிவோட பன்ச்லைன் என்னா தெரியுமா?

"இது, நான் யதார்த்தத்தைத் துன்புறுத்தி, அது தானாகவே முன்வந்து உண்மையை ஒப்புக் கொள்ள வைக்கும் இடம்.."

போட்டியில இருந்த இன்னொருத்தர் கிங்ஸ்லி. எனக்கு என்னமோ அவரோட பன்ச்லைன்கள் (ஆமா, அடிக்கடி மாத்திகினே இருப்பார்) தான் ரொம்பப் பிடிச்சிருந்தது. இதோ சாம்பிளுக்கு சில:

"நான் உண்மையிலேயே வலைப்பதிவாளன் இல்லை, சும்மா இணையத்தில மட்டும் அப்படி நடிச்சுக்கிட்டு இருக்கேன்"

"டி.என்.ஏ டெஸ்ட் மூலம் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டவன்"

"உங்களுக்கு நண்பர்கள் வேண்டுமென்றால் விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்களை இலவசமாகவே வெறுக்கிறேன்."

"நல்ல நிலைமைக்குப் போகவேண்டுமானால் என்னை ஏன் பின் தொடர்கிறீர்கள்? நானும் உங்களைப் போல் தொலைந்த ஒருவனே!"

"அவர்கள் உங்களைச் சுடுகிறார்கள் என்றால், நீங்கள் ஏதோ சரியாகச் செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம்."

"உங்கள் வாழ்க்கையின் சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்க நான் மறுக்கிறேன். தயவு செய்து வற்புறுத்தாதீர்கள்."


இப்போது ரவிகிரண் ஜெயித்ததில் கடுப்பாகி, தனது பன்ச்லைனை இப்படி மாற்றியுள்ளார்:

"இது நான் பன்ச்லைன்களைத் துன்புறுத்தி அவை ரவிகிரணுடைய பன்ச்லைனை விட நல்லாயிருக்குமாறு செய்யும் இடம்."

இப்ப இதை என்னாத்துக்கு சொல்ல வந்தேன்னா, நம்ம தமிழ் வலைப்பதிவுகள் உலகத்திலயும் இப்படி அழகழகான பன்ச்லைன் இல்லாமயா இருக்கும் அப்படின்னு ஒரு நெனப்பு வந்துச்சு. நாங்களே கூட மேல்Kind-ல ஒரு பன்ச்லைன் வச்சிருக்கோம் - "தி.மு.: பேச்சுலர், தி.பி.: பேச்சிலர்" அப்படின்னு.

அதனால தொறந்தேன் தமிழ்மணத்தை. பண்ணினேன் ஆராய்ச்சியை. அகழ்வாராய்ச்சியின் பலனாக, தமிழ் வலைப்பதிவுகள் உலகத்திலிருந்து எனக்குப் பிடித்தமான பன்ச்லைன்கள் கீழே:

அஜீவன் - சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்...

அகரவலை - மனவெளித் துளிகளும் சில மதிவழிப் பதிவுகளும்

கறுப்பி - கனவுகளில் வாழ்பவளின் தளமிது

கதவு - ....வந்து எட்டிப் பாருங்கள்

ஓடை - தமிழ் நதியின் சிறுகிளை

முகவரி - தொலைந்து போனேனென்று நினைத்திருந்தேன்... இதுதான் என் முகவரி என்று தெரியாமல்...

இதுவும் கடந்து போகும் - விழுந்ததும்... எழுந்ததும்... விழுந்தெழுந்ததில் தெரிந்ததும்...

என் மூக்கு - கருத்துக்கள் மூக்கைப் போன்றவை. எல்லோருக்கும் இருக்கும், எல்லாமே மணக்கும்

சுந்தரவடிவேல் - காட்சியும், கனவும், எழுத்தும்

பினாத்தல்கள் - "அனுபவச் சிதறல்கள்" அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!!

E(n)-முரசு - சக்தி யென்ற மதுவையுண் போமடா! தாளங்கொட்டித் திசைகள் அதிரவே.

தோழியர் - யாதுமாகி நின்றாய்!

ம்.. - விட்டு விடுதலையாகி நிற்போம்...

இருக்கிறது*இல்லை - குப்பனுக்குக் குவாண்டம் இயற்பியல். மியாவ்!

மழை - சின்னச் சின்ன அழகான தருணங்கள்

Sunday, February 13, 2005

காதலர் தினம்

பள்ளிப்பருவம்:

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். அப்போதெல்லாம் சென்னையில் பள்ளியில் படித்து ஸ்கூட்டி போன்ற இலகு ரக இரு சக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்களிடையே ஒரு பழக்கம் உண்டு. வெயிலின் கொடுமைக்கு எதிராக சுடிதாருக்கு வெளியே தெரியும் கைப்பகுதிக்கு க்ளவுஸ் அணிந்திருப்பார்கள். முகத்திலும், கண்கள் மட்டுமே வெளியே தெரியும்படியாக ஒரு முக்காடு அணிந்திருப்பார்கள். என் வகுப்பிலும் அப்படி சில பெண்கள் உண்டு. நாங்கள் சைக்கிளில் வரும்போது அவர்களும் இந்தக் கோலத்தில் தங்கள் வாகனத்தில் வந்து சிக்னலில் எங்களுக்குப் பக்கத்தில் நிறுத்துவார்கள். அவர்களில் ஒருத்தி மிக நல்ல தோழி.

நாங்கள் கூட்டமாக நாலைந்து பேர் இருப்போமா, எனவே அவர்களை சிக்னலில் வைத்துக் கலாய்ப்பதில் அப்படி ஒரு அலாதி மகிழ்ச்சி.

ஒருவன் சொல்வான்,
"தோ பாருடா, முகமூடிக் கொள்ளைக் காரங்க.. எப்போலேர்ந்து மா இந்தத் தொழிலு??"

நான் குறுக்கிட்டுச் சொல்வேன்,
"டேய், அவங்க எல்லாம் இதயத்தைக் கொள்ளையடிக்கிறவங்க டா..!!"

அவள் வெட்கத்தோடு முறைத்து விட்டு,
"க்ளாஸுக்கு வாங்கடா, வச்சிக்கிறேன் உங்களை" என்று முணுமுணுத்துவிட்டு நகர்வாள்.

-o0o-

கல்லூரிப் பருவம்:

கல்லூரியில் கூடப் படித்தவர்களில் சில பெண்கள் எனக்கு நல்ல தோழிகள். என்ன சொன்னாலும் அன்புடன் எடுத்துக் கொள்வார்கள்.

இதைப் போன்ற ஒரு காதலர் தினம். அதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே நான் ஒரு பெண்ணோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். அவள் வரும்போதெல்லாம் அவள் கவனிக்கும்படி அவளைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன்.

(அப்போது நான் இப்போதிருப்பதை விட சற்று அதிகமாகவே குண்டாயிருந்த நேரம்)

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு, காதலர் தினத்தன்று என்னைப் பிடித்தாள்.

"என்னாச்சுடா? எதுக்கு என்னை அவாய்ட் பண்றே?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே.."

"சும்மா நடிக்காதே, அதான் பார்க்கிறேனே, ரெண்டு நாளா. என்னடா ஆச்சு? என் மேல ஏதாவது கோபமா?"

"அதெல்லாம் இல்லையே.."

"அப்புறம் என்ன?"

"அது வந்து.. அது வந்து.."

"சொல்லித் தொலைடா..!!"

"நான் ரொம்ப குண்டாகிட்டே போறேன் இல்லையா, அதான் என் அம்மா ஸ்வீட் எல்லாம் அவாய்ட் பண்ணச் சொன்னாங்க.."

அவளுக்குப் புரியக் கொஞ்ச நேரம் ஆனது. கையிலிருந்த புத்தகத்தால் மண்டையில் போட்டு விட்டுப் போனாள்.

"படவா ராஸ்கல்..!!"

-o0o-

அலுவலகப் பருவம்:

அலுவலகத்தில் காதலர் தினம் வந்தாலே என் மேல் எதிர்பார்ப்பு கூடி விடும். காரணம், ஒவ்வொரு வருடமும் இந்த நாளன்று எனது சட்டைப் பாக்கெட்டில் ஒரு இதயத்தை மாட்டி வைத்து அதன் மேல ஏதாவது வாசகம் எழுதி வைப்பது எனது வழக்கம். முதல் வருடம், "To Let" என்று வைத்திருந்தேன். போன வருடம், "Advance Bookings Accepted" என்று.

இன்று வைத்திருக்கும் செய்தி - "First Come First Served".

அலுவலகத்திலும் அன்பான தோழிகள் உண்டு. ஒருத்தி இதைப் பார்த்து விட்டு,
"என்ன அர்த்தம் இதுக்கு?" என்றாள்.

"இல்லை, அதாவது, யாரும் என் முன்னால க்யூவில எல்லாம் வந்து நிற்க வேணாம், முதல்ல வர்றவங்களுக்கு மட்டும் தான் என் இதயத்தில இடம்னு.." என்று இழுத்தேன்.

அவள் நக்கலாக சிரித்து விட்டு,
"First there are men. Then there are hopeful men. Then there are optimistic men. Then there are overconfident men. And then there is Meenakshisankar!!" என்று சொல்லிவிட்டுப் போனாள்.

தேவை தான் எனக்கு!!

-o0o-

நினைத்துப் பார்க்கையில் காதலியை விட இப்படி அன்பான, கோபப்படாத தோழிகள் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது.

சரி சரி, காதலர் தின வாழ்த்துகள்!!

Tuesday, February 01, 2005

என் பெயர் மீனாக்ஸ் :-)

'விவரம்' புரிந்த பருவ வயதுக்குள் நான் அடியெடுத்து வைத்ததிலிருந்தே எனக்கு சற்றே சதைப்பிடிப்பான பெண்களென்றால் மிகவும் விருப்பம். என் அபிமான நடிகைகள் முதல், சொந்த வாழ்க்கையில் என்னை மிகவும் கவர்ந்த பெண்கள் வரை எல்லோருமே இந்த வகையினர் தான்.

புஷ்டியான (ஆங்கிலத்தில் இதற்கு 'Chubby' என்ற அழகான வார்த்தை இருக்கிறது, தமிழ் வார்த்தையை விட அது எனக்குப் பிடித்திருக்கிறது) பெண்களை மட்டுமே இது வரை நான் ஏறெடுத்துப் பார்த்திருக்கிறேன்.

இதற்கு என்ன காரணமென்று சில சமயம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். நானும் கொஞ்சம் புஷ்டியானவன், எனவே இனம் இனத்தோடு சேர்கிறது என்று எளிமையாகச் சொல்லி விட முடியும். ஆனால் அது, சிற்றிதழ் பாணியில், மிகத் தட்டையான ஒரு காரணமாக இருக்குமோ என ஐயுறுகிறேன். மேலும், ஆங்கிலத்தில் 'Like poles repel, Unlike poles attract' என்று சொல்வது வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது.

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒரு காரணம் புலப்படுகிறது. எனக்கு ஒல்லியான தேகம் உள்ளவர்களைப் பார்த்தால் அடிமனதில் ஒரு வெறுப்பு உண்டு. அவர்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு என் தந்தை நான் குண்டாயிருப்பது பற்றி அடிக்கடி குறை கூறுவதால், 'இவர்களால் தானே இப்படி ஆகிறது, இவர்களும் என்னைப் போலவே இருந்து விட்டால் எந்தத் தொல்லையும் இல்லையே' என்ற அடிப்படையில் ஒல்லியான உருவ அமைப்பு உள்ளவர்கள் மேல் எனக்கு தீவிரமான மறைமுக கோபம் உண்டு. எனவே ஒன்றைப் பிடிக்காதவனுக்கு அதற்கு எதிரானதை மிகவும் பிடித்துப் போவதில் ஆச்சர்யமில்லை. எனவே எனக்கு chubby பெண்களைப் பிடிக்கிறது என்று சொல்லலாம்.

இன்னொன்று, இந்த வகையான பெண்களுக்கு மத்தியில் தான் நான் எனது உடல் குறித்த தயக்கங்களைக் கை விட்டு சகஜமாகப் பழகுகிற மனநிலைக்குத் தயாராவேன் என்பதும் கூட ஒரு ஆழ்நிலை காரணமாக இருக்கக் கூடும்.

ஆனால் இவையெல்லாமே எனது பிரியத்துக்கான காரணத்தை ஓரளவுக்கே வெளிப்படுத்துவதாக நான் நினைப்பதுண்டு. இதையெல்லாம் மீறிய ஏதோ ஒன்று இருப்பதாகவே எனக்கு அடிக்கடி தோன்றும். என் மனதுக்குப் பிடித்த பெண்களைப் பார்க்கும் போது அல்லது நினைக்கும் போது மனசுக்குள் ஓடுகிற பரவச உணர்வு இருக்கிறதே, அதன் தன்மைகள் அலாதியானவை. அந்த உணர்வுகளை வார்த்தைகளால் அலங்கரிக்க முயன்று அடிக்கடி தோற்றிருக்கிறேன்.

இத்தகைய சூழ்நிலையில் தான் நேற்று முன் தினம் ஆதவன் எழுதிய 'என் பெயர் ராமசேஷன்' என்ற நாவலைப் படிக்க நேர்ந்தது. படுத்திருந்தபடி படித்திருந்தவனை நடுவில் சில வரிகள் நிமிர்ந்து உட்காரச் செய்தன:
திடீரென ஒரு படம் உயிர் பெற்றது போல உருண்டு திரண்ட உடம்பைப் போன வருடம் தைத்த மாக்ஸிக்குள் திணித்திருந்த ஒரு பெண் அறைக்குள் வந்தாள். ஒரு பெரும் டூத் பேஸ்ட் டியூபை நினைவூட்டினாள் அவள். Squeeze பண்ண வேண்டும் போல ஒரு ஆசை...
மிஸ்டர் ஆதவன், you so got me there..!!

பின் குறிப்பு: chubby என்பதற்கும் என்னளவிலே ஒரு வரையறை உண்டு. குஷி அல்லது டும் டும் டும் திரைப்படங்களில் வந்த ஜோதிகா, எனக்குப் பிடித்த chubby பெண்ணுக்கு ஒரு எடுத்துக்காட்டு.