Sunday, February 13, 2005

காதலர் தினம்

பள்ளிப்பருவம்:

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். அப்போதெல்லாம் சென்னையில் பள்ளியில் படித்து ஸ்கூட்டி போன்ற இலகு ரக இரு சக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்களிடையே ஒரு பழக்கம் உண்டு. வெயிலின் கொடுமைக்கு எதிராக சுடிதாருக்கு வெளியே தெரியும் கைப்பகுதிக்கு க்ளவுஸ் அணிந்திருப்பார்கள். முகத்திலும், கண்கள் மட்டுமே வெளியே தெரியும்படியாக ஒரு முக்காடு அணிந்திருப்பார்கள். என் வகுப்பிலும் அப்படி சில பெண்கள் உண்டு. நாங்கள் சைக்கிளில் வரும்போது அவர்களும் இந்தக் கோலத்தில் தங்கள் வாகனத்தில் வந்து சிக்னலில் எங்களுக்குப் பக்கத்தில் நிறுத்துவார்கள். அவர்களில் ஒருத்தி மிக நல்ல தோழி.

நாங்கள் கூட்டமாக நாலைந்து பேர் இருப்போமா, எனவே அவர்களை சிக்னலில் வைத்துக் கலாய்ப்பதில் அப்படி ஒரு அலாதி மகிழ்ச்சி.

ஒருவன் சொல்வான்,
"தோ பாருடா, முகமூடிக் கொள்ளைக் காரங்க.. எப்போலேர்ந்து மா இந்தத் தொழிலு??"

நான் குறுக்கிட்டுச் சொல்வேன்,
"டேய், அவங்க எல்லாம் இதயத்தைக் கொள்ளையடிக்கிறவங்க டா..!!"

அவள் வெட்கத்தோடு முறைத்து விட்டு,
"க்ளாஸுக்கு வாங்கடா, வச்சிக்கிறேன் உங்களை" என்று முணுமுணுத்துவிட்டு நகர்வாள்.

-o0o-

கல்லூரிப் பருவம்:

கல்லூரியில் கூடப் படித்தவர்களில் சில பெண்கள் எனக்கு நல்ல தோழிகள். என்ன சொன்னாலும் அன்புடன் எடுத்துக் கொள்வார்கள்.

இதைப் போன்ற ஒரு காதலர் தினம். அதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே நான் ஒரு பெண்ணோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். அவள் வரும்போதெல்லாம் அவள் கவனிக்கும்படி அவளைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன்.

(அப்போது நான் இப்போதிருப்பதை விட சற்று அதிகமாகவே குண்டாயிருந்த நேரம்)

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு, காதலர் தினத்தன்று என்னைப் பிடித்தாள்.

"என்னாச்சுடா? எதுக்கு என்னை அவாய்ட் பண்றே?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே.."

"சும்மா நடிக்காதே, அதான் பார்க்கிறேனே, ரெண்டு நாளா. என்னடா ஆச்சு? என் மேல ஏதாவது கோபமா?"

"அதெல்லாம் இல்லையே.."

"அப்புறம் என்ன?"

"அது வந்து.. அது வந்து.."

"சொல்லித் தொலைடா..!!"

"நான் ரொம்ப குண்டாகிட்டே போறேன் இல்லையா, அதான் என் அம்மா ஸ்வீட் எல்லாம் அவாய்ட் பண்ணச் சொன்னாங்க.."

அவளுக்குப் புரியக் கொஞ்ச நேரம் ஆனது. கையிலிருந்த புத்தகத்தால் மண்டையில் போட்டு விட்டுப் போனாள்.

"படவா ராஸ்கல்..!!"

-o0o-

அலுவலகப் பருவம்:

அலுவலகத்தில் காதலர் தினம் வந்தாலே என் மேல் எதிர்பார்ப்பு கூடி விடும். காரணம், ஒவ்வொரு வருடமும் இந்த நாளன்று எனது சட்டைப் பாக்கெட்டில் ஒரு இதயத்தை மாட்டி வைத்து அதன் மேல ஏதாவது வாசகம் எழுதி வைப்பது எனது வழக்கம். முதல் வருடம், "To Let" என்று வைத்திருந்தேன். போன வருடம், "Advance Bookings Accepted" என்று.

இன்று வைத்திருக்கும் செய்தி - "First Come First Served".

அலுவலகத்திலும் அன்பான தோழிகள் உண்டு. ஒருத்தி இதைப் பார்த்து விட்டு,
"என்ன அர்த்தம் இதுக்கு?" என்றாள்.

"இல்லை, அதாவது, யாரும் என் முன்னால க்யூவில எல்லாம் வந்து நிற்க வேணாம், முதல்ல வர்றவங்களுக்கு மட்டும் தான் என் இதயத்தில இடம்னு.." என்று இழுத்தேன்.

அவள் நக்கலாக சிரித்து விட்டு,
"First there are men. Then there are hopeful men. Then there are optimistic men. Then there are overconfident men. And then there is Meenakshisankar!!" என்று சொல்லிவிட்டுப் போனாள்.

தேவை தான் எனக்கு!!

-o0o-

நினைத்துப் பார்க்கையில் காதலியை விட இப்படி அன்பான, கோபப்படாத தோழிகள் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது.

சரி சரி, காதலர் தின வாழ்த்துகள்!!

8 Comments:

Blogger Vijayakumar said...

தூள் மாமூ.

ஏம்பா இந்த மாதிரி 'இளமை புதுமை' பதிவெல்லாத்தையும் வயசான கலத்துல என்னை படிக்க வச்சி வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிறீங்க.

குண்டு குண்டு குண்டுப்பையா... நீ கலக்கு.

February 14, 2005 12:11 AM  
Blogger Chandravathanaa said...

///நினைத்துப் பார்க்கையில் காதலியை விட இப்படி அன்பான, கோபப்படாத தோழிகள் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது///

எங்களுக்கும் அப்படித்தான். அன்புதான் எல்லோருக்கும் தேவை. அன்பான கோபப்படாத தோழர்கள் கிடைத்தால் எங்களுக்கும் சந்தோசம்தான்.

February 14, 2005 12:15 AM  
Blogger Narain Rajagopalan said...

(சுள்ளான் பசுபதி ஸ்டைலில் படிக்கவும்) வேணாம் மாமே...வேணாம்....அப்புறம் நானும் ஆட்டோகிராப் எழுதிறுவேன்.....சொல்லிட்டேன்

February 14, 2005 12:39 AM  
Blogger ரவியா said...

//நாங்கள் சைக்கிளில் வரும்போது //

meeeeeeeeeeens !!!

February 14, 2005 5:45 AM  
Blogger Mookku Sundar said...

காதலர் தினத்தில் ஆரம்பிக்கும் வாரத்துக்கு பொருத்தமான நட்சத்திரம்தான். வாழ்த்துக்கள்.

First men. Then there are Hopeful Men என்று ஆரம்பித்து ஒரு கொழந்தை அதிர்வேட்டு விட்டுதே அதுக்கு என் சார்பில் நாலு கிலோ ரஸகுல்லா பார்சலே....ய்ய்ய்ய் :-)

February 14, 2005 8:07 AM  
Blogger Shankar said...

அண்ணாத்தேய்! புல்லரிக்க வெச்சிட்டீயளே!
//நினைத்துப் பார்க்கையில் காதலியை விட இப்படி அன்பான, கோபப்படாத தோழிகள் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது.
தூள் தலீவா!

February 14, 2005 9:14 AM  
Blogger Narain Rajagopalan said...

//நினைத்துப் பார்க்கையில் காதலியை விட இப்படி அன்பான, கோபப்படாத தோழிகள் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது.//
அது சரி, சங்கர், இப்படித்தான் எல்லாரும் மனசை தேத்திக்கிறோம் ;-)

February 14, 2005 9:27 PM  
Blogger க்ருபா said...

நான் ரொம்ப குண்டாகிட்டே போறேன் இல்லையா, அதான் என் அம்மா ஸ்வீட் எல்லாம் அவாய்ட் பண்ணச் சொன்னாங்க.."மீனாக்ஸ்,

ஞாயிறன்று தாங்கள் ஏறிய வண்டி பென்களூருக்குச் செல்வதாக இருக்கலாம். ஆனால் இவ்வாக்கியத்தினால் தாங்கள் எங்கேயோ சென்று விட்டீர்கள்.

இதோ, பக்கத்துல சுவடும் ஒரு பிட்டு போடுது.

ச்சே, ச்சே பேர்ல இந்த 'ஷங்கர்'னு இருக்கறவங்க எல்லாமே இப்படிதான் போலருக்கு. (ஏதேனும் சொல்ல வரும் முன் Posted By முழுதும் பார்த்துவிடவும்)

February 15, 2005 11:00 AM  

Post a Comment

<< Home