Wednesday, February 16, 2005

கபீர் கவிதை ஒன்று

இன்றைக்கு பத்ரி தனது பதிவிலே "மூன்று மொழிகள் தெரிந்தவர்கள் அபூர்வமானவர்கள், ஆச்சர்யப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப்படிக்கக் கூடியவர்கள், பொறாமைப்பட வைப்பவர்கள்." என்று சொல்லியிருக்கிறார். இந்தியும் ஆங்கிலமும் எனக்கு எழுதப்படிக்கத் தெரியுமாதலால் நானும் அந்த லிஸ்டில் உண்டு. இருந்தாலும் அதில் ஆச்சர்யப்பட ஏதுமிருப்பதாக நினைக்கவில்லை. மூன்றைத் தாண்டி நான்குக்குப் போனால் அப்படி ஆச்சர்யப்படலாம் என்பேன்.

இந்தியை நான் தனியாக தக்ஷிண் பாரத் இந்தி பிரச்சார் சபா மூலமாகப் படித்தேன். எட்டு தேர்வுகளும் எழுதியிருக்கிறேன். அப்போதிலிருந்தே எனக்கு கபீர் என்றால் மிகவும் விருப்பம். எனது ஆசிரியரின் பாதிப்பாகக் கூட இருக்கலாம். வாரமொருமுறை கபீரின் சில கவிதைகளை எடுத்து வைத்துப் படிப்பதுண்டு. ஒவ்வொரு முறையும் சில புதிய அர்த்தங்கள் எனக்குப் புரிய வரும்.

அண்மையில் நான் படித்த கபீரின் சிறப்பான கவிதை ஒன்று இங்கே:

मॊकॊ कहाँ दूदॆ रॆ बन्दॆ
मैं तॊ तॆरॆ पास मॆं
ना तीरत मॆ ना मूरत मॆं
ना एकान्त निवास मॆं
ना मन्दिर मॆं ना मस्जिद मॆं
ना काबॆ कैलास मॆं
मैं तॊ तॆरॆ पास मॆं बन्दॆ
मैं तॊ तॆरॆ पास मॆं
ना मैं जप मॆं ना मैं तप मॆं
ना मैं बरत उपास मॆं
ना मैं किरिया करम मॆं रह्ता
नहिं प्राण मॆं नहिं पिण्ड मॆं
ना ब्रह्माण्ड आकाश मॆं
ना मैं प्रक्रुति प्रवार गुफा मॆं
नहिं स्वांसॆं की स्वांस मॆं
खॊजि हॊए तुरत मिल जाउं
इक फल की तालास मॆं
कहत कबीर सुनॊ भई सादॊ
मैं तॊ हूं विश्वास मॆं

எங்கு தேடுகிறாய் என்னை?
நான் உன்னோடு தான் இருக்கிறேன்.

யாத்திரைகளில் அல்ல, உருவங்களிலும் அல்ல,
தனிமையில் அல்ல,
ஆலயங்களில் அல்ல, மசூதிகளில் அல்ல,
காபாவிலும் கைலாயத்திலும் அல்ல,
நான் உன்னோடு இருக்கிறேன் மானிடா,
உன்னோடு தான் இருக்கிறேன்.

பிரார்த்தனைகளில் அல்ல, தவத்தினிலும் அல்ல,
விரதத்தில் அல்ல,
துறவிலும் அல்ல,
இயக்கச் சக்திகளில் அல்ல, உன் உடலிலும் அல்ல,
அகண்ட வெளியில் அல்ல,
இயற்கையின் கருவிலும் காற்றின் மூச்சிலும் அல்ல,
கவனத்துடன் தேடிப் பார்,
கண நேரத்தில் கண்டு கொள்வாய் என்னை.

சொல்கிறான் கபீர், கவனமாய்க் கேள்,
உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ,
அங்கெல்லாம் நானிருக்கிறேன்.


நன்றி: காமராஜ் இந்தி யூனிகோடு செயலி

6 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

எனக்கு தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகள் முழுமையாக வரும். இத்தாலிய மற்றும் ஹிந்தி கூட அறிவேன் என்றாலும் இங்கு அவற்றைப் பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை.

இது ஒன்றும் பிரும்ம வித்தையில்லை. ஒவ்வொரு மொழிக்கும் மூளையில் தனித்தனிப் பகுதிகள் உண்டு எனப் படித்திருக்கிறேன். மேலும் ஒரு சராசரி மனிதன் தன் மூளையை மிகக் குறைந்த அளவே பயன்படுத்துகிறான் என்றும் படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

February 16, 2005 6:03 PM  
Blogger Narain Rajagopalan said...

டோண்டு ஐயா,
என்னைப் போல மூளை குறைவாக உள்ளவர்களை என்ன சொல்வீர்கள் ;-)

February 16, 2005 8:54 PM  
Blogger தகடூர் கோபி(Gopi) said...

//இது ஒன்றும் பிரும்ம வித்தையில்லை.//

டோண்டு ஐயா, ஒருவேளை உங்கள் அனுபவத்தில் புதிதாய் கற்கும் மொழிகள் உங்களுக்கு சுலபமாக வருகிறது என நீங்கள் சொல்லலாம்.

என் போன்ற அரைவேக்காட்டு மூளைக்கு தமிழ், ஆங்கிலம் தாண்டி மூன்றாவது (தெலுங்கு போன்ற) மொழியைத் தவறில்லாமல் கற்றுத்தெளிய மூன்றாண்டுகளானாலும் கூட கஷ்டமாய்த்தான் இருக்கிறது.

(எனது வலைத்தளத்திலுள்ள பிற மொழி மொழிமாற்றிகள் முற்றிலும் நண்பர்களின் துணை கொண்டு உருவானது. தமிழ்,ஆங்கிலம் தவிர வேறெந்த மொழியையும் நன்றாகத்தெரியும் என்ற அளவு நான் அறிந்திலன்)

February 16, 2005 10:19 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

வணக்கம் கோபி அவர்களே. உங்கள் காமராஜ் ஹிந்தி எழுத்து மாற்றியையும் என் வன்தகட்டில் கீழிறக்கிக் கொண்டேன் மிக்க நன்றி.
சாதாரணமாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள ஒரு குழந்தையாக மாற வேண்டும் என்பது தற்கால நிலை. அது எப்படி முடியும் என்றுக் கேட்டால் அது முடியத்தான் வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் உண்மையில்லாமல் இல்லை.
நான் ருஷ்ய மொழி கற்றுக் கொள்ள சிறிது காலம் முயற்சித்தேன். முதல் நாளன்று ஒரு ருஷ்யப் பெண் உள்ளே நுழைந்தார். எங்களை ஒரு நிமிடம் கூர்ந்துப் பார்த்தர். பிறகு இரண்டு உள்ளங்கைகளையும் தன் இதயத்தின் மீது வைத்துக் கொண்டு "மின்யா ஸவூத் இல்யானா" என்றார், பிறகு எங்கள் பக்கம் கைகளை நீட்டி "கக் வாஸ் ஸவூத்?" என்றுக் கேட்டார். ஒரு கேனத்தனமானக் குரல் "மின்யா ஸவூத் ராகவன்" என்றுக் கூறியது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது அக்குரலுக்குச் சொந்தக்காரன் அடியேன்தான் என்று. இது எவ்வாறு சாத்தியமாயிற்று? அதற்கு முழு கிரெடிட் அந்த ருஷ்யப் பெண்மணிக்குத்தான். பிறகு வேறு சில நிர்பந்தங்களால் ருஷ்ய மொழி கற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டியிருந்தது, அது ஒரு தனி சோகக் கதை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

February 17, 2005 4:47 AM  
Blogger Badri Seshadri said...

நான் மூன்று மொழிகளை அறிந்தவர்கள் எனும்போது குறிப்பிடுவதும், மீனாக்ஸ், டோண்டு ஆகியோர் சொல்வதற்கும் சில வேறுபாடுகள் உண்டு.

மீனாக்ஸ்: நானும் ஹிந்தி பிரச்சார் சபாவில் பிரவீண் வரை கற்றவன். இப்பொழுதைக்கு ஹிந்தி என்றால் ஹிந்தி சினிமா பார்ப்பது, ஹிந்தி தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பது, வட இந்தியாவில் தட்டுத்தடுமாறி ஹிந்தி பேசி போக வேண்டிய இடத்துக்கு வழி கேட்பது... அவ்வளவே.

ஹிந்தியில் எதையும் இப்பொழுது படிப்பது கிடையாது. முக்கியமாக தற்கால இலக்க்கியங்களை. நீங்கள் படிக்கிறீர்களா? அக்கப்போர் வார இதழ்களைப் படிபப்து கிடையாது. எப்பொழுதோ ஒருமுறை ஆவல் காரணமாக இரண்டொரு ஹிந்தி வலைப்பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவே. எனக்கும் ஹிந்தி தெரியும் என்று நான் சொன்னால் அது முழு உண்மையாகாது.

பாவண்ணன் கன்னட இலக்கியங்களை தினமும் படிக்கிறார். உள்வாங்குகிறார். மொழிமாற்றி பிற மொழியாளர்களுக்கு வழங்குகிறார்.

என்னால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்தான் அப்படிச் செய்ய முடியும்.

டோண்டுவின் வாழ்க்கை மொழிபெயர்ப்பது. அதனால் அதன் காரணமாக அவர் பல மொழிகளைக் கற்கிறார். அது பிழைப்பு என்றாகி விடுகிறது. முடியும். முடியாதென்பதில்லை.

வாழ்க்கையில் பிழைக்க மார்கெடிங் அல்லது எஞ்சினியரிங் அல்லது மாவரைப்பது என்று ஏதோ ஒன்று செய்யும்போது பல மொழிகளையும் ஆர்வத்துக்காகவே கற்று (அம்மா, அப்பா ஹிந்தி பிரச்சார் சபாவில் கொண்டு விடுவது இங்கு உதவாது), அதன்பின் அம்மொழியில் நல்ல பரிச்சயத்துடன் மேலும் மேலும் நுணுக்கங்களைக் கற்று அதை நாளும் உபயோகிப்பவனுக்கும், அதைச் செய்யாது இருப்பவனுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

ஓ.. நான் பிரெஞ்சும் இரண்டு செமஸ்டர்கள் கற்றுக்கொண்டு "Le Petit Prince" ஒரிஜினலிலேயே படித்திருக்கிறேன். இப்பொழுது சத்தியமாக பிரெஞ்சு முழுவதுமாக மறந்துபோய்விட்டது.

February 17, 2005 8:05 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

பத்ரி, நீங்கள் "எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்" என்று சொல்லியிருந்ததால் என்னையும் சேர்த்துக் கொண்டேன். நான் தற்கால இலக்கியம் தேடிப் படிப்பதில்லை, இருந்தாலும் கிடைத்தால் படித்துப் புரிந்து கொள்ள இயலும் என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறேன்.

February 19, 2005 9:43 PM  

Post a Comment

<< Home