Sunday, February 20, 2005

'பங்கு' - அசோகமித்திரன் சிறுகதை

இந்த வாரம் வலையுலகில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா குறித்து சில பதிவுகள் இருந்தன. என் பங்குக்கு, அவரது சிறுகதை ஒன்றை இங்கு உள்ளிடுகிறேன். சிறுகதையின் பெயர் - பங்கு.

-o0o-

தலை தீபாவளிக்கு ஊருக்கு அண்ணா, மன்னியுடன் லலிதாவும் போவதாக முடிவாயிற்று. மன்னியின் பெயரும் லலிதா தான்.

'லலிதா!' என்று கூப்பிட்ட குரலுக்கு இருவர் பதில் கொடுப்பதில் அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம் தான். ஆனால் மன்னி வீட்டுக்கு வந்தவுடன் முதல் மாறுதல் இந்தப் பெயர் விஷயத்தில் தான் நிகழ்ந்தது. அண்ணாதான் முடிவெடுத்தான். மன்னியின் பெயரைக் கூப்பிடும் அளவிலாவது மாற்ற வேண்டும். என்ன புதுப்பெயர் வைப்பது? அம்மா காமாட்சி என்றாள். அண்ணா பத்மினி என்றான். லலிதாவுக்கு முதலில் இந்தப் புதுப் பெயரின் காரணம் தெரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் லலிதா, பத்மினி என்று இரு சகோதரிகள் கொடி கட்டிப் பறந்தார்கள் என்று. மன்னி பெயரைப் பத்மினி என்று கூடக் கூப்பிடாமல் பப்பி என்று அண்ணா அழைக்க ஆரம்பித்தான்.

அவன் வாங்கி வந்த இரயில் டிக்கெட்டுகளை லலிதா வாங்கிப் பார்த்தாள். ஒன்று அண்ணாவுடையது. அடுத்தது பத்மினியுடையது. மூன்றாவது அவளுடையது. தனித்தனி டிக்கெட்டுகளை எப்படி வேண்டுமானாலும் வரிசைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அண்ணா ரிஸர்வே்ஷன் விண்ணப்பத்தில் என்ன வரிசயில் எழுதியிருப்பான் என்று எண்ணிப் பார்த்த போது லலிதாவுக்கு ஒருகணம் மனம் சுருங்கியது.

தீபாவளி காலமாதலால் இரயில் பெட்டிகள் நிரம்பியிருந்தன. மூவராக ஊருக்குக் கிளம்புவதாக இருக்கக் கூடாது என்று தம்பியும் ஸ்டே்ஷன் வரையில் வந்தான். இரயிலில் இடம் கண்டுபிடித்துச் சாமான்களை ஏற்றியவுடன் அண்ணா அவனைத் திருப்பி அனுப்பி விட்டான்.

இரண்டாம் வகுப்பில் மூன்றடுக்குப் படுக்கை வண்டி. மூன்று பேருக்கும் ஒரே பிரிவில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கீழ் பெஞ்சில் மூவரும் உட்கார்ந்தார்கள். லலிதா ஜன்னல் பக்கம் போய் உட்கார்ந்தாள். அவளுக்குப் பக்கத்தில் மன்னி. அவளுக்குப் பக்கத்தில் அண்ணா. இரயிலில் ஏறியதிலிருந்து மன்னி உஸ் உஸ்ஸென்று புடவைத் தலைப்பால் தன்னை விசிறிக் கொண்டிருந்தாள்.

எதிர் பெஞ்சில் இரு சிறு குழந்தைகள் கொண்ட ஐவர் குடும்பம். மன்னியின் பக்கம் ஒரு மின்சார விசிறியைத் திருப்ப முடியுமாவென்று அண்ணா முயன்று பார்த்தான். ஆனால் விசிறிகள் ஒரே நிலையில் இருக்கும்படியாகப் பொருத்தப் பட்டவை.

"லலிதா. நீ இந்தப் பக்கம் வந்து உட்காரேன். மன்னியை ஜன்னலுக்கு விட்டுடு!" என்று அண்ணா சொன்னான். லலிதா எழுந்திருக்க மன்னி ஜன்னலருகில் நகர்ந்தாள். அவளுடன் அண்ணாவும் நகர்ந்தான். லலிதா பெஞ்சு கோடியில் உட்கார்ந்தாள்.

இரயில் கிளம்பியது. உடனேயே எதிர்வரிசைக் குடும்பம் உணவு மூட்டையைப் பிரிக்கத் தொடங்கியது. லலிதாவுக்குப் பசிப்பது போலிருந்தது. "நாம்பளும் சாப்பிட்டுடலாமா?" என்று அண்ணாவைக் கேட்டாள். மன்னி முந்திக் கொண்டு, "எட்டு மணியாவது ஆகட்டுமே" என்றாள். வீட்டில் இரவுச் சாப்பாடு எட்டு, எட்டரைக்குத்தான் துவங்கும். ஆனால் இரயிலில் ஏழு மணிக்கு லலிதாவுக்குப் பசித்தது.

இரயில் இருளைக் கிழித்துக் கொண்டு விரைந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த இருளிலும் அண்ணா ஜன்னல் வழியாக மன்னிக்கு எதையோ சுட்டிக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தான். அவளும் அதை மிகவும் ரசித்தபடி தோற்றம் கொண்டிருந்தாள். உண்மையில் அவன் நெருக்கியடித்து உட்கார்ந்தது தான் அந்த மலர்ச்சியை உண்டு பண்ணி இருக்க வேண்டும்.

அவனுக்கும் லலிதாவுக்கும் இடையில் நிறைய இடைவெளி இருந்தது. அப்படியே காலை மடக்கிக் கொண்டு படுத்து விடலாம் என்று கூட எண்ணினாள். ஆனால் எதிர்வரிசைக் குடும்பத்தின் குழந்தை ஒன்றை எதிர்வரிசைக்காரர் அங்கு உட்கார வைத்தார். லலிதா உட்கார்ந்தபடியே தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாள்.

செவி மட்டும் செயல்படும்போது ஒரே நேரத்தில் இவ்வளவு ஒலிகள் எழும்பப்படுகின்றன என்று லலிதாவுக்கு உணர முடிந்தது. அவள் பார்வை எட்ட முடியாத அந்தப் பெட்டியின் பிற இடங்களில் கூட நிறைய பேர் பேசிக் கொண்டிருப்பதை அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது. கூரையில் பொருந்த்தி வைக்கப்பட்ட விசிறிகள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாகச் சப்தம் எழுப்பின. இதெல்லாவற்றுக்கும் பின்னணியாக இரயிலோட்டத்தின் சப்தம். அண்ணாவும் மன்னியும் விடாது பேசிக் கொண்டிருந்தார்கள். நடு நடுவில் மன்னியின் சிரிப்பொலியும் கேட்கும்.

அண்ணா வேடிக்கையாகப் பேசக் கூடியவன் தான். அவர்கள் குடும்பத்தில் இரயில் பயணம் நேரும்போதெல்லாம் அவனும் லலிதாவும் தான் சேர்ந்து உட்காருவார்கள். அவனுக்கு அவளிடம் பேச அவ்வளவு வி்ஷயங்கள் இருந்தது. அவளாலும் அவனைத் தொடர்ந்து பேச வைக்ககூடிய வகையில் அவன் பேசும் விஷயங்களிலும் கலந்து கொள்ள முடிந்திருக்கிறது. அவள் வாய்விட்டுச் சிரிக்கமாட்டாள். அதே நேரத்தில் அவன் பேசிலுள்ள நகைச்சுவை என்றும் அவளிடமிருந்து நழுவிப் போனதில்லை. அதுவே அண்ணாவை இன்னும் அதிகமாகவும் புதுமையாகவும் பேச வைக்கும். இப்போது அந்த அண்ணாவுக்கு அவளிடம் பேச எதுவுமே இல்லாது போயிருந்தது. இரயிலில் ஏறியதிலிருந்து 'ஜன்னல் பக்கத்தை மன்னிக்குக் கொடுத்து விடு' என்று மட்டுந்தான் பேசத் தோன்றியிருக்கிறது.

மன்னிக்குப் பசி வந்துவிட்டது என்று எண்ணும்படி அவளே அண்ணாவிடம், "இப்ப சாப்பிடறேளா, இன்னும் கொஞ்சம் நாழியாகட்டுமா?" என்று கேட்டாள். அவன் என்ன பதில் சொன்னான் என்று கண்களை மூடிக் கொண்டிருந்த லலிதாவுக்குத் தெரியவில்லை. மன்னி டிபன் கேரியரைத் திறக்கும் சப்தம் கேட்டது. லலிதா கண்ணைத் திறந்தாள்.

மன்னி டிபன் கேரியர் மூடியில் உணவு எடுத்து வைத்து லலிதாவிடம் தான் முதலில் கொடுத்தாள். அவன் முறைக்காக அண்ணாவும் காத்திருந்தான். ஒரு டிப்ன காரியர் தட்டை ஒரு மாதிரி காலை செய்து அதில் அண்ணாவுக்குச் சாப்பாடு தந்தாள். லலிதாவும் அண்ணாவும் சாப்பிடத் தொடங்கினார்கள். அண்ணா லலிதாவின் பக்கம் திரும்பி, "ஏன் ஒரு மாதிரி இருக்கே? உடம்பு ஏதாவது சரியில்லையா?" என்று கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லையே" என்று லலிதா பதில் சொன்னாள்.

அண்ணா மன்னியைப் பார்த்து, "நீ சாப்பிடலயா?" என்று கேட்டான்.

"நீங்க முதல்லே முடிங்கோ" என்று மன்னி சொன்னாள். அண்ணா மன்னிக்கு சற்று அதிகமாகவே பணிந்து போவது போல் லலிதாவுக்குத் தோன்றியது. அவன் மறுபேச்சு பேசாமல் சாப்பிட்டான்.

பசி அடங்கியதில் லலிதாவுக்கு உற்சாகம் திரும்பியது. அவள் அண்ணாவுடன் பேசக் காத்திருந்தாள். பேசி முடிவெடுக்க வேண்டிய காரியம் ஒன்றும் கிடையாது. என்றாலும் அவளுக்கு ஏதாவது பேச வேண்டும் என்றிருந்தது. ஆனால் மன்னியும் அவள் உணவை முடித்துக் கொண்டவுடன் அண்ணா படுக்கையைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டான். கீழ் அடுக்கில் மன்னி. நடு அடுக்கில் லலிதா, அவன் மூன்றாவதில் ஏறிப் படுத்தும் விட்டான். இனி காலை ஆறு மணி வரை அவர்கள் யாவரும் படுத்தபடியே தான் இருக்க வேண்டும். மூன்றடுக்குப் படுக்கை வண்டியில் யாவரும் படுத்தபடி இன்னொருவருடன் பேச முடியாது.

எதிர்வரிசைக் குடும்பமும் ஒரு மாதிரி தூக்கத்துக்கு ஆயத்தமாகி விட்டது. லலிதா தூங்க முடியவில்லை. வீடு வரையில் மன்னி வந்து சேர்ந்தது, சில மேலோட்டமான மாறுதல்களை தான் சேர்த்திருந்தது. ஆனால் இந்த இரயில் பயணத்தின் போதுதான் அந்த மாறுதல்களின் பரிணாமங்களை அதிகமாக உணர முடிந்தது. உடைமைகளைப் பகிர்ந்து கொள்வதைவிட உடன்பிறந்தவனைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமமான காரியம் என்று தெரிந்தது.

லலிதா படுத்தபடியே தலையை நீட்டித் தன் மன்னியை எட்டிப் பார்த்தாள். நாளெல்லாம் உழைத்துக் களைப்புற்றதை அவள் தூங்குவதில் நன்கு காண முடிந்தது. வீட்டு மருமகளாக ஒருத்தி வந்துவிட்டால் எப்படியோ அந்த வீட்டு வேலைகள் அதிகரித்து விடுகின்றன. அவற்றில் பெரும்பகுதி அந்த மருமகள் தலையில் விடிந்து விடுகிறது.

லலிதாவுக்கு அவள் புகப் போகும் வீடு எப்படி இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. மன்னியும் அவள் திருமணத்திற்கு முன்பு எப்படியெல்லாம் நினைத்திருப்பாளோ? ஆனால் இப்போது அவளது எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி அடைந்த மாதிரி தான் நடந்து கொள்கிறாள். உண்மையிலேயே அப்படித் தானா?

லலிதா அவள் பார்த்த தமிழ் சினிமா எல்லாவற்றிலும் ஏதாவது ஓரிடத்தில் பெண் மனதைப் பெண் தான் அறிய முடியும் என்று வசனம் பேசப்பட்டதை நினைத்துக் கொண்டாள். அவளுக்கு அவளுடைய மனதையே அறிய முடியவில்லை. இதே மன்னியை ஒரு சமயம் பார்க்கும் போது எரிச்சல் வந்தது. இன்னொரு முறை பச்சாதாபம் மேலிட்டது. ஆனால் ஒன்று மட்டும் ஒருவாறு புலனாயிற்று. யாரோ ஒருவருடைய சுகசௌகரியத்தைப் பறிக்காதபடி கல்யாணமே சாத்தியமில்லை.

அவளுக்கு அந்த நேரத்தில் கல்யாணமே வேண்டாம் என்று தான் எண்ணத் தோன்றியது.


-o0o-

நன்றி: நெஞ்சில் நிற்பவை - 60 முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள் - முதல் தொகுப்பு - தொகுப்பாசிரியர்: சிவசங்கரி, வானதி பதிப்பகம், இரண்டாம் பதிப்பு மே 2003, ரூ.150

0 Comments:

Post a Comment

<< Home