Sunday, January 30, 2005

Extreme Harry Potter Fanclub

(எச்சரிக்கை: நீங்கள் என்னைப் போன்ற தீவிரமான Harry Potter ரசிகனாக இல்லாமல் போனால், இந்தப் பதிவு உங்களுக்குப் புரியாமல் போகக் கூடும்.)

நீங்கள் அளவுக்கு அதிகமான Harry Potter ரசிகர் என்பதற்கான அறிகுறிகள் :-)

1. சம்பந்தா சம்பந்தமில்லாமல் லத்தீன் மொழிச் சொற்களை அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டிருக்கிறீர்கள்

2. உங்களுக்குப் பிடிக்காத ஆசிரியரை 'ஸ்நேப்' என்று பட்டப் பெயர் அளித்து அழைக்கிறீர்கள்

3. உங்கள் கணினியில், 'You've Got mail' என்று செய்தி வந்தால், உடனே வீட்டுக்கு வெளியே ஓடி வானத்தில் ஆந்தை ஏதாவது வருகிறதா என்று கவனிக்கிறீர்கள்

4. இரவு படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குப் போகும்போது வெளிச்சத்திற்கு விளக்கைப் போடாமல், 'Lumos' என்று மந்திரம் சொல்கிறீர்கள்

5. நீங்கள் பார்க்கின்ற ஒவ்வொருவரையும் 'இவர் Gryffindor-ஆ, Hufflepuff-ஆ, Ravenclaw-ஆ, Slytherin-ஆ என்று பாகுபடுத்திப் பார்க்க முனைககிறீர்கள்

6. செண்ட்ரல் ஸ்டேஷனில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் ப்ளாட்பாரங்களுக்கு இடையிலான சுவற்றில் நுழைய முனைந்து மண்டையை உடைத்துக் கொண்டீர்கள்

7. அம்மாவின் சேலைகளை மற்றும் அப்பாவின் வேட்டிகளை எடுத்து உங்கள் மேல் சுற்றி நீங்கள் மாயமாய் மறைந்து போகிறீர்களாவென்று பார்க்க முயற்சி செய்கிறீர்கள்.

8. எழுந்து சென்று ஒரு பொருளை எடுப்பதற்கு முன்னால் 'Accio ரிமோட்' என்று எதற்கும் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக் கொள்கிறீர்கள்

9. செஸ் விளையாடும் போது காய்களை உங்கள் கையால் நகர்த்தாமல், தானாக நகரும்படி கட்டளையிட்டுப் பார்க்கிறீர்கள்

10. ஐந்தாம் புத்தகம் ஒரு வழியாகக் கையில் கிடைத்த போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது

11. உங்கள் நண்பர்களெல்லாம் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் Apparating/Disapparating லைசென்ஸ் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

12. உங்கள் பிறந்த தினங்களை விடவும் விமரிசையாக ஹாரி (July 31, 1980), ரான் (March 01, 1980), ஹெர்மையொனி (September 19, 1980) ஆகியோரின் பிறந்த தினங்களைக் கொண்டாடி மகிழ்கிறீர்கள்.

நன்றி: MuggleNet

Monday, January 17, 2005

Worthwhile சிந்தனைகள்

புதுவருட உறுதிமொழிகள் எடுத்துக் கொள்வது பெரிதல்ல, அவற்றைத் தொடர்ந்து காப்பாற்றுவது தான் பெரிது என்று சொல்வதுண்டு. Worthwhile என்ற பத்திரிக்கை/வலைப்பதிவில் இது குறித்து சில விஷயங்கள் படித்தேன். சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் தெரிந்தது. அது கீழே: (அது சரி, புது வருடம் எப்பவோ பிறந்து பொங்கலும் முடிஞ்சு போச்சே, இப்ப என்னாத்துக்கு புது வருட உறுதிமொழி பத்தி பேச்சுன்னு கேக்கறீங்களா? Better late than never இல்லையா? அதான்..)

1. முறையான திட்டத்தோடு மட்டுமே ஒரு புதிய உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். 'இந்த வருடம் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன்' என்ற உறுதிமொழியை எடுத்தவர்களின் எண்ணிக்கை, சூப்பர் கம்ப்யூட்டர்களாலும் கையாள முடியாத அளவுக்குப் பெரிது. இப்படி மொட்டையாக உறுதிமொழி எடுக்காமல், 'காலையில் 6 மணி முதல் 7 மணி வரை அருகிலுள்ள பார்க்கில் நடப்பது அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜிம் செல்வது' என்று குறிப்பாக ஒரு திட்டமிடல் இருந்தால் உறுதிமொழிக்கு ஒரு மரியாதை இருக்கும். அல்லது 'ஐஸ்கிரீமை முடிந்த அளவுக்குக் குறைத்து சப்பிடுவது' என்று பொதுப்படையாக உறுதிமொழி எடுக்காமல், என்னைப் போல் குறிப்பாக 'ஒரு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவது' என்று ஒரு திட்டத்துடன் உறுதிமொழி எடுக்கலாம்.

2. கீழ்த்தளத்திலிருந்து மேல்மாடிக்குச் செல்ல ஒவ்வொரு படியாக ஏறிச் செல்வது அறிவுடைமை. உறுதிமொழியை சிறு சிறு பாகங்களாகப் பிரித்துக் கொள்ள இயலுமென்றால் தயங்காமல் செய்யுங்கள். இந்த சிறு சிறு பாகங்கள் அத்தனையும் இறுதிக் குறிக்கொளை எட்டுவதற்கு உறுதுணையாய் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பணம் செலவழியும் ஒரு கெட்ட பழக்கத்தை விட முனையும் போது, முதலில் ஒரு வாரம், பிறகு ஒரு மாதம் என்று பொறுமையாகவே முயற்சி செய்யலாம். ஒவ்வொரு சிறு பகுதியின் முடிவிலும் அந்த சிறு வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒரு சிறிய பரிசை உங்களுக்கு நீங்களே அளிக்கலாம். ('அந்த கெட்ட பழக்கத்தை ஒரு முறை செய்து கொள்வது' போன்ற பரிசு அல்ல!!)

3. 'நாம் தடுக்கி விழும்போது இன்னும் வேகமாக முன்னோக்கி செல்கிறோம்' என்று சொல்கிறது ஒரு ஆப்பிரிக்க பழமொழி. தவறு செய்வது என்பது மிக இயல்பே என்ற புரிதல் அவசியம். தவறைத் தொடர்ந்து செய்வதையும் அல்லது தவறைத் திருத்திக் கொள்வதையும் வைத்தே நம்மை அறிவுடையவர்களாக வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள முடியும். 'பெர்ஃபெக்ட்' மனிதர்கள் என்று யாருமில்லை, தனது தவறுகளை மூடி மறைத்து அல்லது கண்டு கொள்ளாமல் தன்னையும் பிறரையும் ஏமாற்றிக் கொள்பவர்களே அந்தப் பெயரில் திரிகிறார்கள். அமேஸாம்.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos), ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது இணைய தளத்தை ஆய்வு செய்து அதில் தவறாக நடைபெறுகின்ற பத்து காரியங்களைப் பட்டியலிட்டுக் கொள்கிறார். திங்கட்கிழமை காலையில் இதன் அடிப்படையில் தனது வேலையைத் துவக்குகிறார்.

4. பயணத்தின் போது கூட வருபவர்களை உங்கள் வழித்துணைகளாக மட்டுமே வைத்திருங்கள். அவர்களை இடர்களாகவோ, இறுதி இலக்காகவோ மாற்றி விடாதீர்கள். உங்கள் உறுதிமொழிகளுக்குப் பொறுப்பாளி ஒரு நபர் தான், அது நீங்கள் தான். உங்கள் முடிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உறுதிமொழிகளைத் தவற விடும்போது உங்கள் குடும்பத்தாரையோ அல்லது நண்பர்களையோ அதற்குப் பழி சொல்வது மிக எளிது. ஆனால் அது யாருக்கும் உதவாதது. பயணத்தில் வழித்துணைகளைத் தேடுங்கள், அவர்களில் லயித்துப் பாதி வழியில் நின்று போகாதீர்கள்.

எழுத்து வெளி, எழுத்து வழி, எழுத்து வலி

பாப்லோ நெரூதா பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். கவிதை பற்றியே அவர் எழுதிய கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம் எனது முயற்சியில் இங்கே:

அந்த வயதில் தான்,
கவிதை என்னைத் தேடி வந்தடைந்தது.
எனக்குத் தெரியாது,
எங்கிருந்து வந்ததென்று.
குளிர்காலத்திலிருந்தா, நதியிலிருந்தா என்று
எனக்குத் தெரியாது.
எப்படி அல்லது எப்பொழுது என்று
எனக்குத் தெரியாது.

இல்லை,
அவை குரல்களில்லை,
அவை சொற்களில்லை,
மௌனங்களுமில்லை.

ஒரு தெருவிலிருந்து நான் அழைக்கப்பட்டேன்,
இரவின் கிளைகளிலிருந்து,
பிறரிடமிருந்து
சட்டென்று பிரிக்கப்பட்டு
தீவிர நெருப்புகளுக்கிடையே வைக்கப்பட்டேன்,
அல்லது திரும்பிக் கொண்டிருந்தேன்,
அங்கே முகமில்லாது நானிருந்தேன்,
அது என்னைத் தொட்டது.

என்ன சொல்வதென்று நான் அறியவில்லை,
பெயர்களுடன் என் வாய்க்கு
அது வரை பழக்கமில்லை,
என் கண்களுக்குப் பார்வையில்லை,
என் ஆன்மாவினுள் ஏதோ ஒரு துடிப்பு,
சுரமோ அல்லது
மறக்கப்பட்ட எனது சிறகுகளோ?

என் பாதையை நானே கண்டு கொண்டேன்,
அந்தத் தீயைப் புரிந்து கொண்டேன்,
முதல் மெல்லிய வரியை எழுதினேன்.
மெல்லிய வரி, பொருளற்ற வரி,
முழுக்கப் பிதற்றலான வரி,
முழுக்க ஞானம் மிக்க வரி,
ஏதும் அறியாதவனின் வரி.

திடீரெனக் கண்டேன்
கழன்று திறந்து தன்னைக் காட்டும் வானத்தை,
கோள்களை,
நடுங்கும் வயல்வெளிகளை,
துளைக்கப்பட்ட நிழல்களை,
அம்புகள், தீ, பூக்களை,
நீளமான இரவை,
பிரபஞ்சத்தை.

நான்,
மிகச் சிறிய நான்,
பெருங்கனவின் வெறுமையின் போதையில் மிதந்து,
என் புதிரின் பிம்பத்தில் கலந்து,
ஆழக் குழியின்
பிரிக்கவியலா பாகமானேன்.
நட்சத்திரங்களுடன் பறந்தேன்,
தளையறுத்துக் காற்றில் கலந்தது என் மனது.
படிப்பவர் மனதில் சென்று உட்புகுந்து ஆழக் குழிதோண்டித் தன்னைப் புதைத்துக் கொண்டு, அவர்களின் சுகங்களில், வலிகளில், ஆசைகளில், கவலைகளில் அவ்வப்போது கலந்து தன் வாசனையை கரைத்து அனுப்பும் எழுத்து பாப்லோ நெரூதாவினுடையது. மேற்கண்டது அதன் சாட்சி.

மூலக் கவிதை (ஆங்கிலத்தில்) இங்கே.