Worthwhile சிந்தனைகள்
புதுவருட உறுதிமொழிகள் எடுத்துக் கொள்வது பெரிதல்ல, அவற்றைத் தொடர்ந்து காப்பாற்றுவது தான் பெரிது என்று சொல்வதுண்டு. Worthwhile என்ற பத்திரிக்கை/வலைப்பதிவில் இது குறித்து சில விஷயங்கள் படித்தேன். சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் தெரிந்தது. அது கீழே: (அது சரி, புது வருடம் எப்பவோ பிறந்து பொங்கலும் முடிஞ்சு போச்சே, இப்ப என்னாத்துக்கு புது வருட உறுதிமொழி பத்தி பேச்சுன்னு கேக்கறீங்களா? Better late than never இல்லையா? அதான்..)
1. முறையான திட்டத்தோடு மட்டுமே ஒரு புதிய உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். 'இந்த வருடம் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன்' என்ற உறுதிமொழியை எடுத்தவர்களின் எண்ணிக்கை, சூப்பர் கம்ப்யூட்டர்களாலும் கையாள முடியாத அளவுக்குப் பெரிது. இப்படி மொட்டையாக உறுதிமொழி எடுக்காமல், 'காலையில் 6 மணி முதல் 7 மணி வரை அருகிலுள்ள பார்க்கில் நடப்பது அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜிம் செல்வது' என்று குறிப்பாக ஒரு திட்டமிடல் இருந்தால் உறுதிமொழிக்கு ஒரு மரியாதை இருக்கும். அல்லது 'ஐஸ்கிரீமை முடிந்த அளவுக்குக் குறைத்து சப்பிடுவது' என்று பொதுப்படையாக உறுதிமொழி எடுக்காமல், என்னைப் போல் குறிப்பாக 'ஒரு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவது' என்று ஒரு திட்டத்துடன் உறுதிமொழி எடுக்கலாம்.
2. கீழ்த்தளத்திலிருந்து மேல்மாடிக்குச் செல்ல ஒவ்வொரு படியாக ஏறிச் செல்வது அறிவுடைமை. உறுதிமொழியை சிறு சிறு பாகங்களாகப் பிரித்துக் கொள்ள இயலுமென்றால் தயங்காமல் செய்யுங்கள். இந்த சிறு சிறு பாகங்கள் அத்தனையும் இறுதிக் குறிக்கொளை எட்டுவதற்கு உறுதுணையாய் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பணம் செலவழியும் ஒரு கெட்ட பழக்கத்தை விட முனையும் போது, முதலில் ஒரு வாரம், பிறகு ஒரு மாதம் என்று பொறுமையாகவே முயற்சி செய்யலாம். ஒவ்வொரு சிறு பகுதியின் முடிவிலும் அந்த சிறு வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒரு சிறிய பரிசை உங்களுக்கு நீங்களே அளிக்கலாம். ('அந்த கெட்ட பழக்கத்தை ஒரு முறை செய்து கொள்வது' போன்ற பரிசு அல்ல!!)
3. 'நாம் தடுக்கி விழும்போது இன்னும் வேகமாக முன்னோக்கி செல்கிறோம்' என்று சொல்கிறது ஒரு ஆப்பிரிக்க பழமொழி. தவறு செய்வது என்பது மிக இயல்பே என்ற புரிதல் அவசியம். தவறைத் தொடர்ந்து செய்வதையும் அல்லது தவறைத் திருத்திக் கொள்வதையும் வைத்தே நம்மை அறிவுடையவர்களாக வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள முடியும். 'பெர்ஃபெக்ட்' மனிதர்கள் என்று யாருமில்லை, தனது தவறுகளை மூடி மறைத்து அல்லது கண்டு கொள்ளாமல் தன்னையும் பிறரையும் ஏமாற்றிக் கொள்பவர்களே அந்தப் பெயரில் திரிகிறார்கள். அமேஸாம்.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos), ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது இணைய தளத்தை ஆய்வு செய்து அதில் தவறாக நடைபெறுகின்ற பத்து காரியங்களைப் பட்டியலிட்டுக் கொள்கிறார். திங்கட்கிழமை காலையில் இதன் அடிப்படையில் தனது வேலையைத் துவக்குகிறார்.
4. பயணத்தின் போது கூட வருபவர்களை உங்கள் வழித்துணைகளாக மட்டுமே வைத்திருங்கள். அவர்களை இடர்களாகவோ, இறுதி இலக்காகவோ மாற்றி விடாதீர்கள். உங்கள் உறுதிமொழிகளுக்குப் பொறுப்பாளி ஒரு நபர் தான், அது நீங்கள் தான். உங்கள் முடிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உறுதிமொழிகளைத் தவற விடும்போது உங்கள் குடும்பத்தாரையோ அல்லது நண்பர்களையோ அதற்குப் பழி சொல்வது மிக எளிது. ஆனால் அது யாருக்கும் உதவாதது. பயணத்தில் வழித்துணைகளைத் தேடுங்கள், அவர்களில் லயித்துப் பாதி வழியில் நின்று போகாதீர்கள்.
0 Comments:
Post a Comment
<< Home