எழுத்து வெளி, எழுத்து வழி, எழுத்து வலி
பாப்லோ நெரூதா பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். கவிதை பற்றியே அவர் எழுதிய கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம் எனது முயற்சியில் இங்கே:
மூலக் கவிதை (ஆங்கிலத்தில்) இங்கே.
அந்த வயதில் தான்,படிப்பவர் மனதில் சென்று உட்புகுந்து ஆழக் குழிதோண்டித் தன்னைப் புதைத்துக் கொண்டு, அவர்களின் சுகங்களில், வலிகளில், ஆசைகளில், கவலைகளில் அவ்வப்போது கலந்து தன் வாசனையை கரைத்து அனுப்பும் எழுத்து பாப்லோ நெரூதாவினுடையது. மேற்கண்டது அதன் சாட்சி.
கவிதை என்னைத் தேடி வந்தடைந்தது.
எனக்குத் தெரியாது,
எங்கிருந்து வந்ததென்று.
குளிர்காலத்திலிருந்தா, நதியிலிருந்தா என்று
எனக்குத் தெரியாது.
எப்படி அல்லது எப்பொழுது என்று
எனக்குத் தெரியாது.
இல்லை,
அவை குரல்களில்லை,
அவை சொற்களில்லை,
மௌனங்களுமில்லை.
ஒரு தெருவிலிருந்து நான் அழைக்கப்பட்டேன்,
இரவின் கிளைகளிலிருந்து,
பிறரிடமிருந்து
சட்டென்று பிரிக்கப்பட்டு
தீவிர நெருப்புகளுக்கிடையே வைக்கப்பட்டேன்,
அல்லது திரும்பிக் கொண்டிருந்தேன்,
அங்கே முகமில்லாது நானிருந்தேன்,
அது என்னைத் தொட்டது.
என்ன சொல்வதென்று நான் அறியவில்லை,
பெயர்களுடன் என் வாய்க்கு
அது வரை பழக்கமில்லை,
என் கண்களுக்குப் பார்வையில்லை,
என் ஆன்மாவினுள் ஏதோ ஒரு துடிப்பு,
சுரமோ அல்லது
மறக்கப்பட்ட எனது சிறகுகளோ?
என் பாதையை நானே கண்டு கொண்டேன்,
அந்தத் தீயைப் புரிந்து கொண்டேன்,
முதல் மெல்லிய வரியை எழுதினேன்.
மெல்லிய வரி, பொருளற்ற வரி,
முழுக்கப் பிதற்றலான வரி,
முழுக்க ஞானம் மிக்க வரி,
ஏதும் அறியாதவனின் வரி.
திடீரெனக் கண்டேன்
கழன்று திறந்து தன்னைக் காட்டும் வானத்தை,
கோள்களை,
நடுங்கும் வயல்வெளிகளை,
துளைக்கப்பட்ட நிழல்களை,
அம்புகள், தீ, பூக்களை,
நீளமான இரவை,
பிரபஞ்சத்தை.
நான்,
மிகச் சிறிய நான்,
பெருங்கனவின் வெறுமையின் போதையில் மிதந்து,
என் புதிரின் பிம்பத்தில் கலந்து,
ஆழக் குழியின்
பிரிக்கவியலா பாகமானேன்.
நட்சத்திரங்களுடன் பறந்தேன்,
தளையறுத்துக் காற்றில் கலந்தது என் மனது.
மூலக் கவிதை (ஆங்கிலத்தில்) இங்கே.
0 Comments:
Post a Comment
<< Home