Friday, March 31, 2006

Pink Floyd கவிதைகள் - 1

காத்திருக்காமையால் அஃது காலம்

சுவாரஸ்யமற்ற ஒரு நாளின் கணங்கள்
டிக், டிக்கென உன்னைக் கடந்தவாறு செல்லும்.
இளஞ்சூரிய வெளிச்சத்தில் புல்வெளியொன்றில்
கால்நீட்டிப் படுத்தும்,
மழை நாளொன்றின் மிச்சமாய்
ஜன்னலோரம் சொட்டும் துளிகளை இரசித்தும்,
நீ களைப்புறுவாய்.
இன்று இளமையின் வெள்ளத்தை நீ
வாரிக் குடிக்கிறாய், வாரி இறைக்கிறாய்,
பின்னொரு நாள் திடுமென அதிர்ச்சியில் உறைவாய்,
பல பத்தாண்டுகள் உன் பின்னால் நழுவிச் சென்றுவிட்டதாய்.
துப்பாக்கி ஓசையைக் கேட்க மறந்திருப்பாய்,
ஓட்டப் பந்தயத்தில் நீ பின் தங்கியிருப்பாய்.
ஓடி முயன்றாலும் தொட முடியாத உயரத்தில்
உனக்கான சூரியன் மூழ்கிக் கொண்டிருக்கும்.
உனக்குப் பின்னால் அது மறுபடி முளைக்கும்,
என்ன செய்வது, சூரியனின் மரணம் உனக்காகக் காத்திருப்பதில்லை.

நேரம் கடந்து விட்டது,
என் பாடல் முடிந்து விட்டது.

-o0o-

நன்றி: Pink Floyd rock band


Wednesday, March 15, 2006

சொந்தக் கதை

க்ருபாவைத் தொடர்ந்து நானும்...

21-Jan-2006

வந்தாள், கண்டாள், வென்றாள்

(அல்லது)

போனேன், பார்த்தேன், பூத்தேன்

உன் மேல் கவிந்திருக்கும்
மௌனத்தின் நீர்நிலை மேல்
பார்வைகளால் கல்லெறிகிறேன் நான்.
ஒற்றை வளையமாய்
ஒரு புன்னகையைத் தோற்றுவித்து
உன்னுள்ளே மூழ்கடிக்கிறாய் நீ.

என் முன்கதைச் சுருக்கத்தை
உன் காதருகே
உலவ விடுகிறேன் நான்.
நாம் இருவருக்கான எதிர்காலக் கனவை
அறையின் கூரையெங்கும்
பரவ விடுகிறாய் நீ.

நான் எழுதியிருக்கும்
கவிதைகள் பிடிக்குமென்கிறாய் நீ.
என் எதிரிலிருக்கும்
கவிதையைப் பிடிக்குமென்கிறேன் நான்.

உன் எதிர்பார்ப்புகளின் தவிப்பும்
என் விருப்பங்களின் இருப்பும்
நேர்கோட்டில் சந்திக்கின்றன.

என் கற்பனைகள் ஒவ்வொன்றும்
உன் கண்களில்
தத்தம் முகம் பார்த்துக் கொள்கின்றன.

உன் குறும்புப் பார்வைகள்
என் மீசையைப்
பிடித்திழுத்து விளையாடுகின்றன.

இதுவரை
தனித்தனியே
தேடிக் கொண்டிருந்த
நமக்கான பிரபஞ்ச முடிச்சை
சேர்ந்து கண்டுகொண்ட பரவசத்தில்
மிதக்கிறோம் நாம்.

சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலும்,
சில தினங்களுக்குப் பிறகும்,
என் காதுகளில்
இன்னும் ஒலித்தபடியே இருக்கிறது,
என்னைப் பிடித்திருப்பது பற்றிய
எனது கேள்விக்கு
நீ பதிலாய்த் தந்த
ஒரு சொல்,
ஓர் எழுத்து,
ஓர் ஓசை,
"ம்..!"

மூணு + ஒண்ணு = நாலு

பாஸ்டன் பாலாஜி ஒண்ணும் என் பேரைச் சொல்லிக் கூப்பிடலை. பொதுவாத் தான் சொன்னாரு. இருந்தாலும் நானும் இந்த வலைப்பதிவைக் கண்டுக்காம விட்டு பல நாள் ஆகிடுச்சா, அதான் இதை எழுதியாவது அடுத்த ரவுண்டு இஸ்டார்ட் பண்ணலாம்னு...

நான் பார்த்த நான்கு வேலைகள்:

1. Customer Service Engineer (Medical Equipment - CT/MRI Scanners)
2. Assistant Manager - Product Development (Life Insurance)
3. Senior Business Analyst (Information Technology)
4. Student Chairman of Department Association

நான் வசித்த நான்கு இடங்கள்:

1. ஸ்பிக் நகர், தூத்துக்குடி
2. சிங்காரச் சென்னை
3. பெங்களூரு
4. மதுரை (வசிக்கவில்லையென்றாலும் பிடித்த ஊர்)

நான் பார்க்கச் சலிக்காத நான்கு திரைப்படங்கள்:

1. காதலிக்க நேரமில்லை
2. தில்லு முல்லு
3. காக்க காக்க (ஜோ ஜோ ஜோ ஜோதிகா..!!)
4. Sholay

நான் ரசித்துப் பார்க்கும் நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:

1. லொள்ளு சபா (சந்தானம் இருந்த வரை) - விஜய் டிவி
2. கலக்கப் போவது யாரு - விஜய் டிவி
3. Just for Laughs Gags - POGO
4. F.R.I.E.N.D.S.

நான் விடுமுறைக்குச் சென்ற நான்கு இடங்கள்:

1. ஹரித்வார்/ரிஷிகேஷ்
2. பாங்காக், தாய்லாந்து
3. கோவா
4. (சிறு வயதில்) பாட்டி வீடு

நான் விரும்பும் நான்கு உணவு வகைகள்:

1. பிரியாணி (The Biryani Merchant, Bangalore)
2. 'Death By Chocolate' ice cream (Corner House, Bangalore)
3. கேசரி, பொங்கல், வடை
4. கைக்கு ஒன்றாக குச்சி ஐஸ்

நான் தினமும் பார்வையிடும் நான்கு இணையதளங்கள்:

1. தமிழ்மணம்
2. Cricinfo
3. Mugglenet
4. BlogLines

நான் தற்போது இருக்க விரும்பும் நான்கு இடங்கள்:

1, 2, 3, 4. கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிற பையன் கிட்ட என்ன கேள்வி இது? எல்லாம் 'அவங்க' பக்கத்தில தான் :-))

-o0o-

நானே ஓசி காஜி. நான் எங்கே நாலு பேரை அழைப்பது?