Friday, March 31, 2006

Pink Floyd கவிதைகள் - 1

காத்திருக்காமையால் அஃது காலம்

சுவாரஸ்யமற்ற ஒரு நாளின் கணங்கள்
டிக், டிக்கென உன்னைக் கடந்தவாறு செல்லும்.
இளஞ்சூரிய வெளிச்சத்தில் புல்வெளியொன்றில்
கால்நீட்டிப் படுத்தும்,
மழை நாளொன்றின் மிச்சமாய்
ஜன்னலோரம் சொட்டும் துளிகளை இரசித்தும்,
நீ களைப்புறுவாய்.
இன்று இளமையின் வெள்ளத்தை நீ
வாரிக் குடிக்கிறாய், வாரி இறைக்கிறாய்,
பின்னொரு நாள் திடுமென அதிர்ச்சியில் உறைவாய்,
பல பத்தாண்டுகள் உன் பின்னால் நழுவிச் சென்றுவிட்டதாய்.
துப்பாக்கி ஓசையைக் கேட்க மறந்திருப்பாய்,
ஓட்டப் பந்தயத்தில் நீ பின் தங்கியிருப்பாய்.
ஓடி முயன்றாலும் தொட முடியாத உயரத்தில்
உனக்கான சூரியன் மூழ்கிக் கொண்டிருக்கும்.
உனக்குப் பின்னால் அது மறுபடி முளைக்கும்,
என்ன செய்வது, சூரியனின் மரணம் உனக்காகக் காத்திருப்பதில்லை.

நேரம் கடந்து விட்டது,
என் பாடல் முடிந்து விட்டது.

-o0o-

நன்றி: Pink Floyd rock band


9 Comments:

Blogger ROSAVASANTH said...

ஒரிஜினல் பாட்டு பற்றிய தகவலை கொஞ்சம் தந்திருக்கலாமே?!

March 31, 2006 1:52 AM  
Blogger Voice on Wings said...

அருமையான பாடல் வரிகளை நாஸ்தி செய்ததற்காக உங்களை வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன் ;) உலக நன்மைக்காக இதன் மூலப்பாடலின் வரிகள் மற்றும் ஒலியோடையை இங்கு வழங்குகிறேன்.

March 31, 2006 2:07 AM  
Blogger Sam said...

இந்தப் பாடலை கல்லூரியின் கடைசி வருடத்தில், கூடப் படித்த நண்பனை எழுதச் சொல்லி வாங்கி வைத்துக் கொண்டேன். அந்த அளவிற்கு இந்தப் பாடல் என்னை ஈர்த்தது. உங்கள்
மொழியாக்கம் நன்றாக இருந்தது. மூலத்தையும் ஆங்கிலத்தில் ப்திவு செய்ய முடியுமா?
அன்புடன்
சாம்

March 31, 2006 2:29 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

ரோஸாவஸந்த், voice on wings மாதிரி ஆட்கள் இருப்பாங்க என்ற நம்பிக்கையில தான் நான் எதுவும் தரலை.

Voice on Wings, நன்றிகள் - பராட்டுக்கும் (!!) சேர்த்து தான் :-)

March 31, 2006 2:31 AM  
Blogger Sam said...

என் கேள்விக்கு உங்கள் பின்னூட்டத்திலேயே விடை கிடைத்து விட்டது
அன்புடன்
சாம்

March 31, 2006 2:33 AM  
Blogger Voice on Wings said...

'பாராட்டைப்' பத்தி கண்டுக்காதீங்க :) பெரும்பாலும் சரியாவே தமிழாக்கியிருக்கீங்க.
"என்ன செய்வது, சூரியனின் மரணம் உனக்காகக் காத்திருப்பதில்லை." - இந்த வரிகள்ல கொஞ்சம் கருத்துப் பிழை இருக்கற மாதிரி படுது. மூலப்பாடலில் சொல்லப்படும் கருத்து, "ஒவ்வொரு முறை சூரியன் மறைந்து தோன்றும் போதும் அது மாறுவதில்லை், ஆனால் நீயோ கொஞ்சம் வலுவிழந்து, உன் மரணத்திற்கு கொஞ்சம் அருகே செல்கிறாய்்" இந்தக் கருத்து உங்கள் தமிழாக்கத்தில் வெளிப்படவில்லை என்று தோன்றுகிறது.

March 31, 2006 3:01 AM  
Blogger ROSAVASANTH said...

இந்த பாடலை நூறுமுறையாவது கேட்டிருப்பேன்(வரிகளை விட இசைக்காக). உங்கள் மொழிபெயர்ப்பை மட்டும் வைத்து பாடலை என்னால் கண்டுபிடிக்க இயலாததற்கு, மொழிபெயர்ப்பு குறைபாடு உடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

March 31, 2006 3:44 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

ரோஸா, மொழிபெயர்ப்பிலே நான் பல இடங்களில் நிறைய liberty எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் பாடலைக் கண்டுபிடிக்க முடியாததில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பாடலைக் கண்டுபிடிக்கப் பந்தயமா நடக்கிறது? பாடலின் கருத்தை மொழிபெயர்க்கும் முயற்சி மட்டுமே எனக்கு.

March 31, 2006 3:49 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//Voice on Wings said...

"என்ன செய்வது, சூரியனின் மரணம் உனக்காகக் காத்திருப்பதில்லை." - இந்த வரிகள்ல கொஞ்சம் கருத்துப் பிழை இருக்கற மாதிரி படுது.//

Voice on Wings,அந்த வரிக்குப் பல வகைகளில் பொருள் எடுத்துக் கொள்ளலாம். அப்படியே மாறுபடும் பொருள் என்றாலும் கூட இருந்து விட்டுப் போகட்டுமே. வேண்டுமானால், 'நன்றி' என்பதற்குப் பதிலாக 'inspired by' என்று போட்டுக் கொள்ளலாம்.

March 31, 2006 3:55 AM  

Post a Comment

<< Home