Wednesday, June 08, 2005

குழந்தைகளோடு குழந்தையாதல்

சென்ற திங்களன்று என் அலுவலகத்தில் "குழந்தைகளை அலுவலகத்திற்கு அழைத்து வருக" தினம் ("Bring Your Kids to Work" Day) கொண்டாடப்பட்டது.

மாலை நாலு மணி அளவில் சுட்டிக் குட்டிக் குழந்தைகள் பலரும் வந்து அலுவலகத்தில் இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்தனர். அவரவர் தந்தை/தாயின் வேலையிடத்தில் சென்று ஆர்வத்துடன் அவர்களின் கணினிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அலமாரிகளைக் குடைந்து கொண்டிருந்தனர். அலுவலக மாடியிலிருக்கும் சிறு பூங்காவில் மனமகிழ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரவர் வயதுக்கேற்ற பிரிவுகளில் ஓவியப் போட்டி நடத்தினோம்.

அதற்குப் பிறகு நான் குழந்தைகள் பங்குபெற்று நடிக்கும் கதை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். அதாவது கதை மாந்தர்களாய்ப் பங்கு கொள்ள சில குழந்தைகள் முன் வந்தனர். நான் கதையைச் சொல்லச் சொல்ல அவர்கள் முன் பயிற்சி ஏதுமின்றி அந்தக் கதையை நடித்துக் காட்டுவதாக நிகழ்ச்சி.

கதை ஒரு காட்டில் உள்ள விலங்குகளை வைத்து நடைபெறுகிறது. சிங்கம், கங்காரு, தவளை, நாய், குரங்கு போன்ற விலங்குகள் ஒரு காட்டில் ஒரு நதியின் அருகே வசித்து வருகின்றன. திடீரென்று நதியில் வெள்ளம் வந்து விடுகிறது. தவளை இதை அறிந்து வந்து முதலில் சிங்கத்திடன் சொல்கிறது. சிங்கம் முன்யோசனையுடன் அனைத்து விலங்குகளையும் அழைத்து காட்டின் வேறு பகுதிக்கு அழைத்துச் செல்கிறது. போகும் வழியில் மரத்தில் ஏறிப் பழங்களைப் பறித்துத் தருகிறது குரங்கு. நாய் அவர்களைத் தனது நுண்ணறிவின் மூலம் சில அபாயங்களை உணர்ந்து எச்சரித்துக் காக்கிறது. கங்காரு, எஞ்சிய பழங்களைத் தனது பையில் சேமித்து வைத்து தேவைப்படும்போது தருகிறது. இப்படி ஒவ்வொரு விலங்கும் தமது தனித்தன்மைகளை வெளிப்படுத்தி, அவை அனைத்தும் ஒரு குழுவாகச் செயல்பட்டு பல அனுபவங்களைச் சந்தித்து, நதியில் வெள்ளம் குறைந்த பிறகு தம்மிடத்தை மீண்டும் வந்தடைகின்றன.

Image hosted by Photobucket.com


எந்த வித முன் பயிற்சியுமின்றி அனைத்துக் குழந்தைகளும் தாம் ஏற்று நடிக்கும் விலங்கின் தனித்தன்மையான உறுமல், குரைத்தல், போன்றவற்றைச் செய்து கொண்டே அனாயாசமாக நடித்தார்கள். நான் கதையைச் சொல்லச் சொல்ல ஒவ்வொருவரும் அதற்கேற்றபடி நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பட்டையைக் கிளப்பினார்கள்.

நடுவில் பல காமெடிகளும் நடந்தது. 'குரங்கு' பாத்திரத்தை ஏற்று நடித்த சுட்டிப் பெண்ணுக்கு திடீரென்று என்ன தோன்றியதோ, கதையின் நடுவிலேயே தான் இனிமேல் குரங்கு வேடத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு, 'இனிமேல் நான் முயல்' என்று சொல்லி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினாள். கதையில் அவசரமாக நான் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாகி விட்டது.

Image hosted by Photobucket.com


கதை முடிந்து குழந்தைகள் அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிந்து அங்கங்கே நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். நான் அனைவரையும் சேர்த்து வைத்து ஒரு புகைப்படம் எடுப்பதற்காக ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தேன். குரங்காக நடித்துப் பிறகு முயலாக மாறிய சிறுமியை "முயல், இங்கே வா, ஃபோட்டோ எடுத்துக்கலாம்" என்று அழைத்த போது அவள் உடனே கதை ஞாபகத்தில் முயல் போல துள்ளியபடியே என் பக்கத்தில் வந்து நின்ற காட்சியை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

Image hosted by Photobucket.com


கதையில் பங்கு கொண்ட குழந்தைகள அனைவரும் வீட்டிற்குச் சென்று இரவு முழுக்க தங்கள் தாத்தா-பாட்டியிடம் முழுக்கதையும் நடித்துக் காட்டி மகிழ்ந்ததாக மறுநாள் அக்குழந்தைகளின் தந்தையரும் தாய்மாரும் கூறியபோது நிஜமாகவே ரொம்ப நெகிழ்ச்சியாய் இருந்தது.

குழந்தைகளின் உலகம் மிக சுவாரஸ்யமானது. வாலிபப் பருவம் அடைந்த பிறகும் அதனுள் நுழைந்து அவர்களின் உள்ளங்களில் இடம் பிடித்து அவர்களின் அன்பைப் பெறக் கிடைக்கும் இது போன்ற வாய்ப்புகளை நான் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி எனக்கு மிகுந்த மனநிறைவு உண்டு. சொல்லப் போனால் என்னை நான் அவ்வப்போது மீட்டெடுத்துக் கொள்வதெல்லாம் இது போன்று குழந்தைகளோடு குழந்தையாகிக் களிக்கும் அந்தச் சில தருணங்களில் மட்டுமே.

Tuesday, June 07, 2005

Book Meme

ஆங்கில வலைப்பதிவரான செந்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். Meme என்பதைப் பற்றிச் சொல்லி என்னையும் அதில் பங்கு பெறுமாறு
அழைத்திருந்தார். (நான், பிரகாஷ், பத்ரி ஆகிய மூவரை)

Meme என்றால் என்னவென்று அகராதியில் தேடிப் பார்த்தேன். 'ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் ஏதேனும் பொருள் குறித்த சிந்தனை' என்றிருந்தது. அவர் அழைப்பு விடுத்த சிந்தனை புத்தகங்களைப் பற்றியது. ஐந்து கேள்விகள் வாயிலாக. அவற்றுக்கு எனது பதில்களைக் கீழே தந்திருக்கிறேன்.

என்னிடம் இருக்கும் புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை: 80+

கடைசியாக வாங்கிய புத்தகம்: The Mimic Men by VS Naipaul

கடைசியாகப் படித்து முடித்த புத்தகம்: The Writerly Life by RK Narayan

என் வாழ்க்கையில் மிக முக்கியமானவையாகக் கருதும் ஐந்து புத்தகங்கள் (தமிழ்/ஆங்கிலம்/இரண்டிலும்):

ஆங்கிலம்

Atlas Shrugged by Ayn Rand (எவண்டா அவன், ஜான் கால்ட்?)

Everything by Kahlil Gibran (சிந்தனையின் பாய்ச்சலும், கருத்தாழமும், அடடா!)

A Suitable Boy by Vikram Seth (இப்படித்தான் இருக்க வேண்டும் புதினம் என என்னை நினைக்க வைத்ததால்!)

Harry Potter series by JK Rowling ('என் மகள்' ஹெர்மையொனி இருக்கும் புத்தகம்...)

Twenty Love Poems and a Song of Despair by Pablo Neruda (என்னமா உருகியிருக்காரு, அவரு பெரிய தல மா!!)

தமிழ்

பொன்னியின் செல்வன் by கல்கி (மானசீக குரு # 1) (வந்தியத்தேவனும் ஒருவகையில் மானசீக குரு தான், ஹி ஹி!!)

விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பு / எப்போதும் பெண் by சுஜாதா (மானசீக குரு # 2)

பாரதியார் கவிதைகள் (தமிழ்ப்பெருங்கவிஞன்)

என் பெயர் ராமசேஷன் by ஆதவன் (the ultimate growing up story)

புதுமைப்பித்தன் சிறுகதைகள் / தி.ஜானகிராமன் சிறுகதைகள் (இரு பெரும் தமிழ்ச் சிறுகதை ஆளுமைகள்)

இதே விளையாட்டைத் தொடர்ந்து ஆட நான் பரிந்துரைக்கும் ஐந்து தமிழ் வலைப்பதிவாளர்கள்:

சுவடு ஷங்கர்
மதி கந்தசாமி (மேடம், இது ரெண்டாவது இன்விடேஷன்)
தங்கமணி
பாஸ்டன் பாலாஜி
பவித்ரா

Monday, June 06, 2005

மூன்று சங்கர்களும் ஒரு ரவியாவும்

அண்மையில் ரவியா இந்தியாவுக்கு வந்திருந்த போது க்ருபாசங்கர், 'சுவடு' ஷங்கர் மற்றும் நான் ஆகிய மூவரும் அவரைப் பார்க்க ஒரு நாள் புதுவைக்குப் போயிருந்தோம். நான் பெங்களூரிலிருந்து முதல் நாள் இரவே கிளம்பி அதிகாலை புதுவை அடைந்தேன். நான் பேருந்தை விட்டிறங்கிக் காத்திருந்த இடத்திற்கு ஐந்து மணிக்குத் தூக்கக் கலக்கத்தோடு ரவியா வந்து என்னை அழைத்துச் சென்றார். ஆறு மணி முதல் ஏழு மணி வரை தமிழ் வலையுலக நிலவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருவரும் வாக்கிங் போனோம்.

காலை குளித்து உணவருந்தி விட்டு அரவிந்தர் ஆஸ்ரமத்துக்குச் சென்றோம். அருகே இருந்த விநாயகர் கோவிலுக்கும். கோவில் வாசலில் இருந்த யானை என்னை மிகவும் கவர்ந்தது. அண்மையில் விகடன் இதழில் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கதாவிலாசம் அத்தியாயத்தில் யானைகளைப் பற்றி எழுதியிருந்தார். யானைகளைப் புரிந்து கொள்வதில் மனிதர்கள் பல வேளைகளில் கண்ணிருந்தும் குருடர்களாகத் தான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.



அடுத்து ரவியா வீட்டுக் குழந்தை ஒன்றின் முடியிறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, நகருக்குத் திரும்பி வந்தோம். அதற்குள் க்ருபாவும் ஷங்கரும் வந்து சேர்ந்தனர். ஆளுக்கொரு புகைப்படக் கருவியோடு திரிந்து கொண்டிருந்தோம். க்ருபாவின் புகழ்பெற்ற கைத் தொலைபேசிக் காமிராவை அன்று தான் பார்த்தேன்.



எனக்குத் திருமண வயது வந்து விட்டதால், பெண் வீட்டாருக்கு அனுப்பி வைக்கும் தன்மையதாய் ஒரு புகைப்படம் எடுத்துத் தருவதாய் ரவியா சொன்னார். நானும் சம்மதித்து ஒரு தென்னை மரத்தில் சாய்ந்து ரொமாண்ட்டிக்காக ஒரு போஸ் கொடுத்துப் பார்த்தேன். 'கோலிவுட்டுக்கு ஒரு புதிய வில்லன் கிடைத்து விட்டார்!!' எனும்படியாய் வந்திருக்கிறது என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.



இந்தக் களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே க்ருபாவின் ஓரப் பார்வைக்கு வேலை வந்து விட்டது. தெருவில் நடந்து சென்ற ஒரு அழகிய இளம்பெண்ணின் கடைக்கண் பார்வையைப் பெற பிரயத்தனம் செய்யும் க்ருபாவின் முயற்சி:



இதை நாங்கள் 'கண்ணும் களவுமாகப்' பிடித்து விட்டதால் க்ருபா வெட்கித் தலை கவிழ்ந்து நிற்கும் காட்சி:



ஆனாலும் கலங்கவில்லை க்ருபா. சில நொடிகளில் மனதைத் தேற்றிக் கொண்டு ஒரு 'லகலகலகலக' பார்வை பார்க்கும் க்ருபா:



இந்தக் காமெடிகளை நிறுத்திக் கொண்டு மாலை கவிந்ததும் ஆரோவில் மாத்ரி மந்திர் என்ற சர்வமத ஆலயத்துக்குச் சென்றோம். நீண்ட நடைப்பயணத்துக்குப் பிறகு அந்த ஆலயத்தை அடைந்தோம். அங்கே மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தூரத்திலிருந்து மட்டும் பார்க்க முடிந்தது. புகைப்படம் எடுப்பது தடை செய்யப் பட்டிருந்தது. இருந்தாலும் சில படங்கள் எடுத்தோம்.



திரும்பி வரும் வழியில் ஆலமர நிழலில் பயணிகள் இளைப்பாறும் ஓர் அரிய காட்சி:



இறுதியாக, பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞர், எங்கள் உள்ளம் கவர் கள்வர் ரவியாவின் கவர்ச்சிகரமான ஆளுமை, இங்கே எனது கைவண்ணத்தில்:



ஆரோவில்லிலிருந்து திரும்பும் வழியிலேயே பேருந்து நிலையத்தில் க்ருபாவும் ஷங்கரும் கழன்று கொண்டனர். நான் இரவு கிளம்பினேன். இனிமையான அனுபவங்களை மனசினுள் பதியன் போட்டுக் கழிந்தது அந்த நாள்.