Wednesday, June 08, 2005

குழந்தைகளோடு குழந்தையாதல்

சென்ற திங்களன்று என் அலுவலகத்தில் "குழந்தைகளை அலுவலகத்திற்கு அழைத்து வருக" தினம் ("Bring Your Kids to Work" Day) கொண்டாடப்பட்டது.

மாலை நாலு மணி அளவில் சுட்டிக் குட்டிக் குழந்தைகள் பலரும் வந்து அலுவலகத்தில் இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்தனர். அவரவர் தந்தை/தாயின் வேலையிடத்தில் சென்று ஆர்வத்துடன் அவர்களின் கணினிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அலமாரிகளைக் குடைந்து கொண்டிருந்தனர். அலுவலக மாடியிலிருக்கும் சிறு பூங்காவில் மனமகிழ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரவர் வயதுக்கேற்ற பிரிவுகளில் ஓவியப் போட்டி நடத்தினோம்.

அதற்குப் பிறகு நான் குழந்தைகள் பங்குபெற்று நடிக்கும் கதை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். அதாவது கதை மாந்தர்களாய்ப் பங்கு கொள்ள சில குழந்தைகள் முன் வந்தனர். நான் கதையைச் சொல்லச் சொல்ல அவர்கள் முன் பயிற்சி ஏதுமின்றி அந்தக் கதையை நடித்துக் காட்டுவதாக நிகழ்ச்சி.

கதை ஒரு காட்டில் உள்ள விலங்குகளை வைத்து நடைபெறுகிறது. சிங்கம், கங்காரு, தவளை, நாய், குரங்கு போன்ற விலங்குகள் ஒரு காட்டில் ஒரு நதியின் அருகே வசித்து வருகின்றன. திடீரென்று நதியில் வெள்ளம் வந்து விடுகிறது. தவளை இதை அறிந்து வந்து முதலில் சிங்கத்திடன் சொல்கிறது. சிங்கம் முன்யோசனையுடன் அனைத்து விலங்குகளையும் அழைத்து காட்டின் வேறு பகுதிக்கு அழைத்துச் செல்கிறது. போகும் வழியில் மரத்தில் ஏறிப் பழங்களைப் பறித்துத் தருகிறது குரங்கு. நாய் அவர்களைத் தனது நுண்ணறிவின் மூலம் சில அபாயங்களை உணர்ந்து எச்சரித்துக் காக்கிறது. கங்காரு, எஞ்சிய பழங்களைத் தனது பையில் சேமித்து வைத்து தேவைப்படும்போது தருகிறது. இப்படி ஒவ்வொரு விலங்கும் தமது தனித்தன்மைகளை வெளிப்படுத்தி, அவை அனைத்தும் ஒரு குழுவாகச் செயல்பட்டு பல அனுபவங்களைச் சந்தித்து, நதியில் வெள்ளம் குறைந்த பிறகு தம்மிடத்தை மீண்டும் வந்தடைகின்றன.

Image hosted by Photobucket.com


எந்த வித முன் பயிற்சியுமின்றி அனைத்துக் குழந்தைகளும் தாம் ஏற்று நடிக்கும் விலங்கின் தனித்தன்மையான உறுமல், குரைத்தல், போன்றவற்றைச் செய்து கொண்டே அனாயாசமாக நடித்தார்கள். நான் கதையைச் சொல்லச் சொல்ல ஒவ்வொருவரும் அதற்கேற்றபடி நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பட்டையைக் கிளப்பினார்கள்.

நடுவில் பல காமெடிகளும் நடந்தது. 'குரங்கு' பாத்திரத்தை ஏற்று நடித்த சுட்டிப் பெண்ணுக்கு திடீரென்று என்ன தோன்றியதோ, கதையின் நடுவிலேயே தான் இனிமேல் குரங்கு வேடத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு, 'இனிமேல் நான் முயல்' என்று சொல்லி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினாள். கதையில் அவசரமாக நான் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாகி விட்டது.

Image hosted by Photobucket.com


கதை முடிந்து குழந்தைகள் அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிந்து அங்கங்கே நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். நான் அனைவரையும் சேர்த்து வைத்து ஒரு புகைப்படம் எடுப்பதற்காக ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தேன். குரங்காக நடித்துப் பிறகு முயலாக மாறிய சிறுமியை "முயல், இங்கே வா, ஃபோட்டோ எடுத்துக்கலாம்" என்று அழைத்த போது அவள் உடனே கதை ஞாபகத்தில் முயல் போல துள்ளியபடியே என் பக்கத்தில் வந்து நின்ற காட்சியை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

Image hosted by Photobucket.com


கதையில் பங்கு கொண்ட குழந்தைகள அனைவரும் வீட்டிற்குச் சென்று இரவு முழுக்க தங்கள் தாத்தா-பாட்டியிடம் முழுக்கதையும் நடித்துக் காட்டி மகிழ்ந்ததாக மறுநாள் அக்குழந்தைகளின் தந்தையரும் தாய்மாரும் கூறியபோது நிஜமாகவே ரொம்ப நெகிழ்ச்சியாய் இருந்தது.

குழந்தைகளின் உலகம் மிக சுவாரஸ்யமானது. வாலிபப் பருவம் அடைந்த பிறகும் அதனுள் நுழைந்து அவர்களின் உள்ளங்களில் இடம் பிடித்து அவர்களின் அன்பைப் பெறக் கிடைக்கும் இது போன்ற வாய்ப்புகளை நான் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி எனக்கு மிகுந்த மனநிறைவு உண்டு. சொல்லப் போனால் என்னை நான் அவ்வப்போது மீட்டெடுத்துக் கொள்வதெல்லாம் இது போன்று குழந்தைகளோடு குழந்தையாகிக் களிக்கும் அந்தச் சில தருணங்களில் மட்டுமே.

21 Comments:

Blogger அல்வாசிட்டி.விஜய் said...

This comment has been removed by a blog administrator.

June 08, 2005 8:56 PM  
Blogger அல்வாசிட்டி.விஜய் said...

அருமை மீனாக்ஸ். அமெரிக்காவில் வேலைப்பார்த்த போது இந்த மாதிரி குழந்தைகளை அலுவலகத்துக்கு அழைத்து ஒரு நாளை கண்டு ஆச்சரியப்பட்டேன். நம்மூருலே இந்த மாதிரி இன்னும் வரலையேன்னு குறையா இருந்திச்சி.

இந்தியாவுக்கு திரும்பி வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த போது யாரை வேண்டுமானாலும் (கேர்ள்பிரண்டை கூட) கூட்டி வரலாமுன்னு ஒரு நாள் வச்சாங்க. பெரியவங்க நிறைய பேர் வந்திருந்தாங்க. ஆனா என்ன தேமேன்னு எல்லாரும் பராக்கு பார்த்துட்டு இருந்தது செம போரிங். குட்டீஸ்களும் வந்திருந்திச்சிங்க. அங்க தான் செம ஜாலி.

இப்போ வேலை பாக்குற க்ளையண்ட் சைட்டுல ஒரு மண்ணும் இல்ல. இயந்திரமாக வருகிறோம். போகிறோம்.

June 08, 2005 8:58 PM  
Blogger icarus prakash said...

//இது போன்ற வாய்ப்புகளை நான் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி எனக்கு மிகுந்த மனநிறைவு உண்டு. சொல்லப் போனால் என்னை நான் அவ்வப்போது மீட்டெடுத்துக் கொள்வதெல்லாம் இது போன்று குழந்தைகளோடு குழந்தையாகிக் களிக்கும் அந்தச் சில தருணங்களில் மட்டுமே. //

அதிர்ஷ்டம் உள்ள ஆளய்யா நீர்...

மூணாவது புகைப்படத்துக்கு பொருத்தமா ஏதாவது ஒரு ஒன்லைனர் தோணுமா என்று, கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது என்று புரிந்தது.

இது என்ன மாசாந்திர நிகழ்ச்சியா? மீடியா ஆட்களை உள்ள வந்து கவர் பண்ண விடுவாங்களா?

June 08, 2005 9:01 PM  
Blogger துளசி கோபால் said...

//மூணாவது புகைப்படத்துக்கு பொருத்தமா ஏதாவது ஒரு ஒன்லைனர் தோணுமா
என்று, கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். //


'குழந்தைகளோடு குழந்தையாக' ன்னு போடவேண்டியதுதான்!!!

மீனாக்ஸ், நல்ல பதிவு. இப்பவே குழந்தைகளோட பழகிவச்சுக்கறது ஒரு அனுபவத்தைக்
கொடுக்கும். 'பின்னாலே' ரொம்ப உபயோகம்.

ஏன்னா, குழந்தைகள் பிறக்கறப்ப 'கையேடு' கொண்டு வர்றதில்லை:-((((

June 08, 2005 9:21 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//icarus said...
இது என்ன மாசாந்திர நிகழ்ச்சியா? மீடியா ஆட்களை உள்ள வந்து கவர் பண்ண விடுவாங்களா? //

மாதாமாதம் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி உண்டு. முக்கியமான பண்டிகைகள் வருகிற மாதங்களில் (தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் மாதிரி) அவற்றைக் கொண்டாடுவோம். அதற்கு வழியில்லாத மாதங்களில் காதலர் தினம், குழந்தைகளை அழைத்து வருதல், என்று இந்த மாதிரி வேறு நிகழ்ச்சிகள்.

இது தவிர மாதா மாதம் ஒரு நாள் ஏதேனும் போட்டியும் நடத்துவதுண்டு. போன மாதம் பழைய இந்திப் பாடல்களுக்காக கரோக்கெ பாட்டுப் போட்டி நடத்தினோம்.

மீடியாவையெல்லாம் அழைப்பதில்லை. நிறுவனத்தின் உள் பத்திரிக்கையில் (internal magazine) இது பற்றி சிறு குறிப்பு எழுதுவதுண்டு.

June 08, 2005 9:40 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

துளசி கோபால் said...
//ஏன்னா, குழந்தைகள் பிறக்கறப்ப 'கையேடு' கொண்டு வர்றதில்லை:-(((( //

துளசி மேடம், நல்லாச் சொன்னீங்க.. நல்லாச் சொன்னீங்க..

June 08, 2005 10:34 PM  
Blogger rajkumar said...

பிராமதம் மீனாக்ஸ்.

இன்னும் சில வருடங்கள் கழித்து நீங்கள் இந்தப்பதிவை படித்துப்பாருங்கள்.

பல புதிய பரிமாணங்கள் கிடைக்கும்.

அன்புடன்

ராஜ்குமார்

June 08, 2005 11:04 PM  
Blogger வீ. எம் said...

This comment has been removed by a blog administrator.

June 09, 2005 2:28 AM  
Blogger வீ. எம் said...

மீனாக்ஸ் , நல்ல பதிவு !

//மூணாவது புகைப்படத்துக்கு பொருத்தமா ஏதாவது ஒரு ஒன்லைனர் தோணுமா
என்று, கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். //

"வானமே - கோபமா? உன்னைவிட்டு "வானவில்" என்னருகில் வந்தமைக்கு "

வீ. எம்

June 09, 2005 2:29 AM  
Blogger ராம்கி said...

உங்க மனசாட்சியோட குரலை புரிஞ்சுக்கிறவன் நான் மட்டும்தான். பெரம்பூர் பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு, போகும்போது பிரிண்ட் எடுத்துட்டு போறேன். கவலையே படாதீங்க... கூடிய சீக்கிரமே மாங்கல்யப்ராப்தி கிஸ்து!

June 09, 2005 3:32 AM  
Blogger லதா said...

குழந்தையாக "முயல்"

----இது இரண்டாவது படத்திற்கான என் எண்ணம்

June 09, 2005 6:11 AM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

நல்ல பதிவும் அழகுப் படங்களும்.

அமெரிக்காவில் அலுவலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துவரும் தினத்தில் பெண்குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி. அப்படியின்றி ஆண் குழந்தைகளையும் உங்கள் படத்தில் பார்க்க முடிவது நன்று. இங்கு எட்டு வயதோ, ஒன்பது வயதோ ஆகியிருக்க வேண்டும். காத்திருக்கிறேன் என் பெண்களை அழைத்துச் செல்ல.

June 09, 2005 6:24 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//ஜெ. ரஜினி ராம்கி said...
கூடிய சீக்கிரமே மாங்கல்யப்ராப்தி கிஸ்து!//

அடப்பாவி ராம்கி! எதுல ஆரம்பிச்சாலும் எப்படிய்யா 'அங்க' வந்து முடியுது உனக்கு மட்டும்?

June 09, 2005 8:22 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//லதா said...
குழந்தையாக "முயல்"

----இது இரண்டாவது படத்திற்கான என் எண்ணம் //

லதா, மிக அருமை.

June 09, 2005 8:23 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

//செல்வராஜ் said...
அமெரிக்காவில் அலுவலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துவரும் தினத்தில் பெண்குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி. //

செல்வராஜ்! இது எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்தது. எதற்கு இப்படி ஒரு பாரபட்சமான பாலிசி??

June 09, 2005 8:24 PM  
Blogger ரவியா said...

This comment has been removed by a blog administrator.

June 11, 2005 12:42 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

ரவியா, உங்கள் பின்னூட்டத்தை நீக்கியதற்கு மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிட்டிருந்ததை பொதுவில் எழுதாமல் இருப்பது அனைவருக்கும் நன்மை என்று கருதுகிறேன்.

June 13, 2005 1:10 AM  
Blogger PositiveRAMA said...

இனிய அனுபவத்தை புகைப்படத்தோடு பகிர்ந்து கொண்டீர்கள்.நானும் எனது Programe களில் இதைப்போல் நடத்துவது உண்டு. வேடிக்கையாக இருக்கும். கட்டுரை அருமை.

June 13, 2005 3:27 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

செல்வராஜ் said...
//அமெரிக்காவில் அலுவலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துவரும் தினத்தில் பெண்குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி. //

மீனாக்ஸ் said...
//செல்வராஜ்! இது எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்தது. எதற்கு இப்படி ஒரு பாரபட்சமான பாலிசி?? //

இது ஹிலரி ரோதம் க்ளிண்டன் 'முதல் பெண்மணி'யாக இருந்தபோது பெண் குழந்தைகளையும் சிகரங்களைத் தொட கனவு காண ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டது. ஒருவேளை செல்ஸி க்ளிண்டனுக்கு ஒரு தம்பி இருந்திருந்தால் பையன்களையும் சேர்த்திருப்பார்கள். செல்ஸிக்கு அப்பாவைப் பார்த்து ஊக்கம் வந்ததோ இல்லையோ, ஹிலரிக்கே ஜனாதிபதியாக வேண்டுமென்று ஆர்வமிருப்பதும் இதை ஆரம்பிக்க ஒரு காரணமாக இருக்கலாம்.

June 20, 2005 9:13 PM  
Blogger ROSAVASANTH said...

மிகவும் விரும்பி படித்தேன்.

June 21, 2005 7:51 AM  
Blogger KARTHIKRAMAS said...

மீனாக்ஸ் , நல்ல பதிவு !

June 21, 2005 8:56 AM  

Post a Comment

<< Home