மரத்தடி ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்காக கலீல் கிப்ரானின் மணலும் நுரையும் தொகுப்பிலிருந்து சில நல்ல வரிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதுவரை:
1 |
2 |
3 |
4 |
5
அதில் மரங்கள் பற்றி ஒரு சிந்தனை தட்டுப்படுகிறது நமக்கு:
மரங்கள்,
பூமி வானத்தின் மீது எழுதும்
கவிதைகள்.
நாம் அவற்றை வெட்டி,
காகிதம் தயாரிக்கிறோம்,
நமது வெறுமையைப் பதிவு செய்ய.
அடேயப்பா, என்னமாய் சிந்தித்திருக்கிறார் மனிதர். இத்தனைக்கும் அவரது கவிதைகளும் சிந்தனைகளும் எல்லாம் மிக உயர்ந்தவை. அவற்றைக் கூட மரங்களாகிய கவிதைகளின் முன்னால் வெறுமையானவை என்று எவ்வளவு எளிதாகப் புறந்தள்ளி விடுகிறார். எவ்வளவு நேசித்திருக்க வேண்டும் இயற்கையை.
கவிஞர் வைரமுத்து கூட ஒரு கவிதையில்,
மரம்தான், மரம்தான்,
எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான்,
மனிதன் மறந்தான்.
என்று சொல்லும் போது அதை ஒரு சாதாரண சுற்றுச் சூழல் நோக்கோடு சொல்வார். ஆனால் கலீல் கிப்ரான் அதையெல்லாம் கடந்து, ஒரு கலை நோக்கில் கூட, இலக்கியத் தேவைகளுக்காக மரம் வெட்டிக் காகிதம் தயாரிப்பதைக் கூட வெறுமையைப் பதிவு செய்ய முனையும் வீண் காரியம் என்று உதாசீனப்படுத்தி விடுகிறார். அவர் சிந்தனையின் உயர்வினைப் புலப்படுத்தும் உயரிய வரிகள் இவை.