பென்சிலுக்கு சில அறிவுரைகள்
இன்று ஒரு கதை படித்தேன். மிக எளிமையான ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டு ஆழமான ஒரு பொருளைப் புலப்படுத்திக் காட்டியது. [படித்து முடித்த போது எனக்கு ரிச்சர்ட் பாக் (Richard Bach) எழுதிய ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் (Jonathan Livingston Seagull) நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி இன்னொரு நாள்.] ஆங்கிலத்தில் இருப்பதை என்னால் முடிந்த அளவு தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்:
பென்சில் செய்பவர், தான் உருவாக்கிய பென்சிலை எடுத்தார். அட்டைப் பெட்டிக்குள் அதனை வைக்கும் முன்னால் அதனிடம் சொன்னார் - "உன்னை நான் வெளியுலகுக்கு அனுப்பும் முன்னால் நீ அறிந்து கொள்ள வேண்டியவை ஐந்து இருகின்றன. எந்நாளும் அவற்றை மறக்காதே. என்றும் நினைவில் வைத்துக் கொள். அவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே உன்னால் மிகச் சிறந்த பென்சிலாக வர முடியும்.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. அறிவுரைகள் பென்சிலுக்கா, எனக்கும் உங்களுக்குமா?
ஒன்று: உன்னால் பெரிய பெரிய காரியங்களைச் செய்ய முடியும். உண்மை. ஆனால் அதற்கு, நீ இன்னொருவர் கையில் ஒரு கருவி ஆகவும் தயாராய் இருக்க வேண்டும்.
இரண்டு: அடிக்கடி நீ கூர்தீட்டப்படுவாய். மிக வலிக்கும். ஆனால், நீ ஒரு சிறந்த பென்சில் ஆக அது துணை புரியும். அது மிக அவசியம்.
மூன்று: நீ செய்யும் தவறுகளை உன்னால் திருத்திக் கொள்ள முடியும். அதற்கு உனக்கு வாய்ப்பே இல்லை என்று என்றும் எண்ணி விடாதே.
நான்கு: உன்னில் மிக முக்கியமான பாகமாக பிறரால் கருதப்படப் போவது உனக்கு உள்ளே என்ன இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது என்பது மட்டுமே. உன் வெளிப்புறத் தோற்றம் அல்ல.
ஐந்து: நீ எந்த எந்த தளங்களில் உபயோகப்படுத்தப் படுகிறாயோ, அந்தத் தளங்கள் அனைத்திலும் உனது தடத்தை விட்டுச் செல்ல வேண்டும். எத்தகைய சூழலாக இருந்தாலும் உனது தடத்தைப் பதிக்க வேண்டும்.
புரிந்ததா? நினைவில் கொள்வாயா?"
பென்சிலுக்குப் புரிந்தது. கடைசி வரையில் இதை மறக்க மாட்டேன் என்று உறுதியளித்து பெட்டிக்குள் சென்றது.
2 Comments:
அன்பின் மீனாக்ஸ்:
மிகச் சிறந்த க்தை. உங்கள் பதிவுன் கடைசி இரு வரிகள் மிகப் போருத்தம்.
மீனாக்ஸ்,
பதிவின் கடைசி இரு வரிகளை தவிர்த்திருக்கலாம்... படிப்பவர்களை மதித்து..
Post a Comment
<< Home