Wednesday, May 25, 2005

இது எங்க சாமி

அண்மையில் விடுமுறையில் எனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அதாவது எனது அப்பாவின் சொந்த ஊர். எங்கள் குலதெய்வமான மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவில் (இதைப் பற்றி மரத்தடியில் முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்) சில வருடங்களுக்குப் பிறகு கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. புதிய இலக்கமுறை நிழற்படக் கருவி (Digital Camera) வாங்கியிருக்கும் ஆர்வத்தில் திருவிழா முழுக்க படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றை உங்களுக்குக் காண்பிப்பதும், திருவிழாவின் நடைமுறைகளை விளக்குவதும் இந்தப் பதிவின் நோக்கங்கள்.

எங்கள் ஊரின் பெயர் S.இராமச்சந்திரபுரம். சக வலைப்பதிவர் சுந்தரின் சொந்த ஊரான வற்றாயிருப்புக்கு மிக அருகில் உள்ள கிராமம். ஊர் பெயரில் இருக்கும் ஆங்கில முதலெழுத்து, தாலுகாவான திருவில்லிபுத்தூரைக் குறிக்கிறது.

திருவிழா பற்றிச் சொல்லும் முன் எங்கள் ஊர் மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும் மற்ற இரு தெய்வங்களைப் பற்றி. மிக சமீபத்தில் கோவிலில் அமைக்கப்பட்டது துர்க்கை அம்மன். மிக உக்கிரமான தோற்றம் இருந்தாலும் அவள் கண்களில் ஒரு கருணை இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றும்.

Image hosted by Photobucket.com


இந்தக் கோவிலானது எங்கள் குடும்பத்துக்கும் எங்கள் உறவினர்களான சில குடும்பங்களுக்கும் பாத்தியப்பட்டது. எங்கள் குடும்பங்களுக்கும் மீனாட்சியம்மனுக்கும் காவல் தெய்வமாக விளங்குவது முனிசாமி. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் எங்களுடன் வந்திருந்து
எங்களை இன்னல்களிலிருந்து இவர் காத்தருள்வதாக எங்கள் நம்பிக்கை. புலி வாகனம், தோளில் நாகம் என்று இவரும் ஒரு உக்கிரமான தெய்வம் தான்.

Image hosted by Photobucket.com


திருவிழா எப்போதும் இரண்டு தினங்கள் நடைபெறும். எங்கள் ஊரில் இரண்டு பிரதான தெருக்கள் உள்ளன. வடக்குத் தெருவும், தெற்குத் தெருவும். திருவிழாவின் முதல் நாளன்று உற்சவ அம்மன் கோவிலிருந்து ஊருக்குள் எடுத்து வரப்பட்டு வடக்குத் தெரு பிள்ளையார் கோவிலில் எழுந்தருளுவாள். அன்று இரவே தேரில் ஊர்சுற்றி வரும் நிகழ்ச்சி. ஊரின் ஒவ்வொரு சிறு தெருவுக்குள்ளும் சென்று ஒவ்வொரு நடை/வீடு முன்பாகவும் அந்தந்தக் குடும்பங்களின் பூஜை மரியாதை நடைபெறும். அம்மனுக்கு தேங்காய், பூ, பழம் ஆகியவற்றைப் படைத்தலே பூஜை ஆகும். தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவத்தைக் கீழே காணலாம்.

Image hosted by Photobucket.com


அம்மன் ஊர்வலம் வரும் தேரின் முன்னால் கலை நிகழ்ச்சிகள் நடந்தபடி அவையும் ஊரைச் சுற்றி வரும். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடம் சிறு பெண்களின் கரகாட்டமும் கோலாட்டமும் நடைபெற்றன. இவர்கள் மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்டனர். சில கரகாட்ட கோலாட்டக் காட்சிகள் இங்கே:

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


இவர்கள் ஆடுவதற்கான பாடல்களை பேண்டு வாத்தியமாக வாசிக்கவும் ஒரு குழுவினர் வந்திருந்தனர். சீருடை அணிந்து அவர்கள் உற்சாகமாக பாடல்களை வாசித்தபடி முன் சென்றனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல்களையே இவர்கள் மிகுதியாக வாசித்தனர். சில கிராமத்துப் பெரிசுகள் பணம் கொடுத்து தங்கள் வீடுகளின் முன்னால் இவர்களை நிறுத்தி வைத்து, தங்களுக்கு விருப்பமான 'வாத்தியார்' பாடலை முழுமையாக வாசிக்க வைத்து மகிழ்ந்தனர்.

Image hosted by Photobucket.com


பேண்டு வாத்திய வாசிப்பில் இவர்கள் சில புதுமைகளையும் செய்தனர். ஒருவர் பேண்டு வாத்தியத்தின் மீது ஏறி நின்று கொண்டார். கையிலிருந்த குச்சிக்குப் பதிலாக நீளமான ஒரு கயிற்றில் ஒரு குண்டைக் கட்டிக் கொண்டு அதைக் கொண்டு இவர்கள் பேண்டு வாசித்தது மிக சுவாரஸ்யமாக இருந்தது.

Image hosted by Photobucket.com


இவர்களுக்குப் பின்னால் சம்பிரதாயத்துக்காக நாயனமும் தவிலும் வாசித்தபடி இருவர் வந்தனர். பேண்டு வாத்தியக்காரர்களின் அதிரடி வாசிப்புக்கு முன்னால் இவர்களின் வாசிப்பு அவ்வளவாக எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

Image hosted by Photobucket.com


இவர்களோடு தமிழர் வாத்தியமான பறை மேளம் வாசித்தபடி ஒரு குழுவினர் வந்தனர். இவர்களில் முன்னணியில் பனியன் அணிந்தபடி வந்த வாலிபர் மிகத் திறமைசாலியாக இருந்தார். இவருக்கும் தவில்காரருக்கும் இடையில் வாசிப்பில் சுவையான போட்டி நிகழ்ந்தது. தவில்காரர் வாசிக்க, அதையே பறை கொண்டு இவர் வாசிக்க என்று மிக உற்சாகமாக வாசித்தபடி வந்தனர்.

Image hosted by Photobucket.com


அம்மன் தேரில் பவனி வரும் இன்னொரு காட்சி. இதில் தேரின் அலங்காரத்தை நன்றாகக் காணலாம்.

Image hosted by Photobucket.com


இந்தத் தேரைச் 'சப்பரம்' என்றும் அழைப்பதுண்டு. முன்பெல்லாம் இந்தச் சப்பரத்தைத் தோளில் சுமந்தபடி ஊரை வலம் வருவார்கள். இப்போது சப்பரத்துக்கு சக்கரங்கள் அமைத்து இழுத்து வருகின்றனர். தேரை இழுத்து வருவது மிக்க பெருமைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது. இங்கே தேரிழுக்கும் பக்தர்களின் காட்சி:

Image hosted by Photobucket.com


எங்கள் குடும்பத்தினர் அம்மனை வழிபடும் காட்சி கீழே. இதில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டிருப்பவர் எனது தந்தையார். அவரே குடும்பத்தில் மூத்தவர். சட்டை அணிந்திருக்கும் மற்ற இருவரும் எனது சித்தப்பாமார்.

Image hosted by Photobucket.com


ஊர் முழுக்க வலம் வந்தபிறகு, 'தடம் பார்த்தல்' என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. அதாவது ஊர்வலம் வந்த பாதையில் அப்படியே திரும்பி அம்மன் செல்வாள். இது முடிவதற்குள் அதிகாலை நேரமாகிவிட்டது. பிறகு தெற்குத் தெரு பிள்ளையார் கோவிலில் அம்மன் எழுந்தருளுவாள். இங்கு இரண்டாம் காலை அவள் ஊஞ்சலில் அமர்த்தப்படுவாள்.

இரண்டாம் நாள் முற்பகலில் கோவிலுக்கு முன்பாக பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும். ஊர்ப் பெண்கள் பொங்கல் வைக்கும் ஒரு காட்சி:

Image hosted by Photobucket.com


திருவிழாவின் இரு தினங்களிலும் சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பவர்கள் ஊரை ஆக்கிரமிப்பார்கள். ஒரு வியாபாரியையும் அவரது மனைவியையும் நான் படமெடுத்து மினி பேட்டியும் எடுத்தேன். அவர் கூமாபட்டி என்ற ஊரிலிருந்து வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் வியாபார நோக்கம் மட்டுமில்லாது மீனாட்சியம்மனின் அருளைப் பெறவும் இந்தத் திருவிழாவுக்குத் தவறாமல் வந்து விடுவதாகவும் தெரிவித்தார். புகைப்படத்துக்கு அனுமதி
கேட்டபோது அவர் அகமகிழ்ந்து போய் மீசை முறுக்கிக் கொண்ட அழகே அழகு!

Image hosted by Photobucket.com


திருவிழாவை நடத்தும் நிர்வாகக் கமிட்டியில் இடம்பெற்றிருப்போரை இந்தப் புகைப்படத்தில் காணலாம்.

Image hosted by Photobucket.com


படத்தின் வலது ஓரத்தில் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்து பந்தாவாகக் காட்சி அளிப்பவர் தான் எனது அப்பா வழிப் பாட்டனார். என்ன கம்பீரமான அழகு..!!

இரண்டாம் நாள் மாலை, மஞ்சத்தண்ணி மாவிளக்கு சுமந்து இளம்பெண்கள் ஊரை வலம் வரும் நிகழ்ச்சி. நான் பெங்களூர் திரும்ப வேண்டியிருந்ததால் அதன் நிழற்படங்களை எடுக்க இயலவில்லை. இந்நிகழ்ச்சியின் போது இவர்களுக்கு முன்னால் இளைஞர்களின் ஒயிலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரு தினங்கள் திருவிழா முடிந்து அம்மன் மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுவாள். அங்கு பூஜைகள் முடிந்து அவள் கோவிலின் முன்னாள் பூசாரியான என் இன்னொரு தாத்தாவின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவாள். அடுத்த திருவிழா வரை உற்சவ அம்மன் அங்கே தான் இருப்பாள்.

ஞாயிற்றுக் கிழமை மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். திங்களும் செவ்வாயும் எனது ஊரில் மீனாட்சியம்மன் திருவிழா என்று மூன்று நாட்களும் மீனாட்சியம்மன் தரிசனம் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மன நிறைவு.

Sunday, May 01, 2005

நிழலிலாடும் நிஜப் படங்கள்

Popular Photography என்ற பத்திரிக்கையில் 2005-ம் ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர் விருதுக்கான தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் என்னைக் கவர்ந்த சில இங்கே. நம்ம சென்னையைச் சேர்ந்த ஷரத் ஹக்ஸர் (Sharad Haksar) தான் முன்னணியில் இருப்பதாகக் கேள்வி.









புகைப்படங்கள் அனைத்தின் உரிமையும் புகைப்படக் கலைஞர்களுக்குரியது.
நன்றி: Popular Photography