Wednesday, May 25, 2005

இது எங்க சாமி

அண்மையில் விடுமுறையில் எனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அதாவது எனது அப்பாவின் சொந்த ஊர். எங்கள் குலதெய்வமான மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவில் (இதைப் பற்றி மரத்தடியில் முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்) சில வருடங்களுக்குப் பிறகு கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. புதிய இலக்கமுறை நிழற்படக் கருவி (Digital Camera) வாங்கியிருக்கும் ஆர்வத்தில் திருவிழா முழுக்க படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றை உங்களுக்குக் காண்பிப்பதும், திருவிழாவின் நடைமுறைகளை விளக்குவதும் இந்தப் பதிவின் நோக்கங்கள்.

எங்கள் ஊரின் பெயர் S.இராமச்சந்திரபுரம். சக வலைப்பதிவர் சுந்தரின் சொந்த ஊரான வற்றாயிருப்புக்கு மிக அருகில் உள்ள கிராமம். ஊர் பெயரில் இருக்கும் ஆங்கில முதலெழுத்து, தாலுகாவான திருவில்லிபுத்தூரைக் குறிக்கிறது.

திருவிழா பற்றிச் சொல்லும் முன் எங்கள் ஊர் மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும் மற்ற இரு தெய்வங்களைப் பற்றி. மிக சமீபத்தில் கோவிலில் அமைக்கப்பட்டது துர்க்கை அம்மன். மிக உக்கிரமான தோற்றம் இருந்தாலும் அவள் கண்களில் ஒரு கருணை இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றும்.

Image hosted by Photobucket.com


இந்தக் கோவிலானது எங்கள் குடும்பத்துக்கும் எங்கள் உறவினர்களான சில குடும்பங்களுக்கும் பாத்தியப்பட்டது. எங்கள் குடும்பங்களுக்கும் மீனாட்சியம்மனுக்கும் காவல் தெய்வமாக விளங்குவது முனிசாமி. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் எங்களுடன் வந்திருந்து
எங்களை இன்னல்களிலிருந்து இவர் காத்தருள்வதாக எங்கள் நம்பிக்கை. புலி வாகனம், தோளில் நாகம் என்று இவரும் ஒரு உக்கிரமான தெய்வம் தான்.

Image hosted by Photobucket.com


திருவிழா எப்போதும் இரண்டு தினங்கள் நடைபெறும். எங்கள் ஊரில் இரண்டு பிரதான தெருக்கள் உள்ளன. வடக்குத் தெருவும், தெற்குத் தெருவும். திருவிழாவின் முதல் நாளன்று உற்சவ அம்மன் கோவிலிருந்து ஊருக்குள் எடுத்து வரப்பட்டு வடக்குத் தெரு பிள்ளையார் கோவிலில் எழுந்தருளுவாள். அன்று இரவே தேரில் ஊர்சுற்றி வரும் நிகழ்ச்சி. ஊரின் ஒவ்வொரு சிறு தெருவுக்குள்ளும் சென்று ஒவ்வொரு நடை/வீடு முன்பாகவும் அந்தந்தக் குடும்பங்களின் பூஜை மரியாதை நடைபெறும். அம்மனுக்கு தேங்காய், பூ, பழம் ஆகியவற்றைப் படைத்தலே பூஜை ஆகும். தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவத்தைக் கீழே காணலாம்.

Image hosted by Photobucket.com


அம்மன் ஊர்வலம் வரும் தேரின் முன்னால் கலை நிகழ்ச்சிகள் நடந்தபடி அவையும் ஊரைச் சுற்றி வரும். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடம் சிறு பெண்களின் கரகாட்டமும் கோலாட்டமும் நடைபெற்றன. இவர்கள் மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்டனர். சில கரகாட்ட கோலாட்டக் காட்சிகள் இங்கே:

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


இவர்கள் ஆடுவதற்கான பாடல்களை பேண்டு வாத்தியமாக வாசிக்கவும் ஒரு குழுவினர் வந்திருந்தனர். சீருடை அணிந்து அவர்கள் உற்சாகமாக பாடல்களை வாசித்தபடி முன் சென்றனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல்களையே இவர்கள் மிகுதியாக வாசித்தனர். சில கிராமத்துப் பெரிசுகள் பணம் கொடுத்து தங்கள் வீடுகளின் முன்னால் இவர்களை நிறுத்தி வைத்து, தங்களுக்கு விருப்பமான 'வாத்தியார்' பாடலை முழுமையாக வாசிக்க வைத்து மகிழ்ந்தனர்.

Image hosted by Photobucket.com


பேண்டு வாத்திய வாசிப்பில் இவர்கள் சில புதுமைகளையும் செய்தனர். ஒருவர் பேண்டு வாத்தியத்தின் மீது ஏறி நின்று கொண்டார். கையிலிருந்த குச்சிக்குப் பதிலாக நீளமான ஒரு கயிற்றில் ஒரு குண்டைக் கட்டிக் கொண்டு அதைக் கொண்டு இவர்கள் பேண்டு வாசித்தது மிக சுவாரஸ்யமாக இருந்தது.

Image hosted by Photobucket.com


இவர்களுக்குப் பின்னால் சம்பிரதாயத்துக்காக நாயனமும் தவிலும் வாசித்தபடி இருவர் வந்தனர். பேண்டு வாத்தியக்காரர்களின் அதிரடி வாசிப்புக்கு முன்னால் இவர்களின் வாசிப்பு அவ்வளவாக எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

Image hosted by Photobucket.com


இவர்களோடு தமிழர் வாத்தியமான பறை மேளம் வாசித்தபடி ஒரு குழுவினர் வந்தனர். இவர்களில் முன்னணியில் பனியன் அணிந்தபடி வந்த வாலிபர் மிகத் திறமைசாலியாக இருந்தார். இவருக்கும் தவில்காரருக்கும் இடையில் வாசிப்பில் சுவையான போட்டி நிகழ்ந்தது. தவில்காரர் வாசிக்க, அதையே பறை கொண்டு இவர் வாசிக்க என்று மிக உற்சாகமாக வாசித்தபடி வந்தனர்.

Image hosted by Photobucket.com


அம்மன் தேரில் பவனி வரும் இன்னொரு காட்சி. இதில் தேரின் அலங்காரத்தை நன்றாகக் காணலாம்.

Image hosted by Photobucket.com


இந்தத் தேரைச் 'சப்பரம்' என்றும் அழைப்பதுண்டு. முன்பெல்லாம் இந்தச் சப்பரத்தைத் தோளில் சுமந்தபடி ஊரை வலம் வருவார்கள். இப்போது சப்பரத்துக்கு சக்கரங்கள் அமைத்து இழுத்து வருகின்றனர். தேரை இழுத்து வருவது மிக்க பெருமைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது. இங்கே தேரிழுக்கும் பக்தர்களின் காட்சி:

Image hosted by Photobucket.com


எங்கள் குடும்பத்தினர் அம்மனை வழிபடும் காட்சி கீழே. இதில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டிருப்பவர் எனது தந்தையார். அவரே குடும்பத்தில் மூத்தவர். சட்டை அணிந்திருக்கும் மற்ற இருவரும் எனது சித்தப்பாமார்.

Image hosted by Photobucket.com


ஊர் முழுக்க வலம் வந்தபிறகு, 'தடம் பார்த்தல்' என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. அதாவது ஊர்வலம் வந்த பாதையில் அப்படியே திரும்பி அம்மன் செல்வாள். இது முடிவதற்குள் அதிகாலை நேரமாகிவிட்டது. பிறகு தெற்குத் தெரு பிள்ளையார் கோவிலில் அம்மன் எழுந்தருளுவாள். இங்கு இரண்டாம் காலை அவள் ஊஞ்சலில் அமர்த்தப்படுவாள்.

இரண்டாம் நாள் முற்பகலில் கோவிலுக்கு முன்பாக பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும். ஊர்ப் பெண்கள் பொங்கல் வைக்கும் ஒரு காட்சி:

Image hosted by Photobucket.com


திருவிழாவின் இரு தினங்களிலும் சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பவர்கள் ஊரை ஆக்கிரமிப்பார்கள். ஒரு வியாபாரியையும் அவரது மனைவியையும் நான் படமெடுத்து மினி பேட்டியும் எடுத்தேன். அவர் கூமாபட்டி என்ற ஊரிலிருந்து வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் வியாபார நோக்கம் மட்டுமில்லாது மீனாட்சியம்மனின் அருளைப் பெறவும் இந்தத் திருவிழாவுக்குத் தவறாமல் வந்து விடுவதாகவும் தெரிவித்தார். புகைப்படத்துக்கு அனுமதி
கேட்டபோது அவர் அகமகிழ்ந்து போய் மீசை முறுக்கிக் கொண்ட அழகே அழகு!

Image hosted by Photobucket.com


திருவிழாவை நடத்தும் நிர்வாகக் கமிட்டியில் இடம்பெற்றிருப்போரை இந்தப் புகைப்படத்தில் காணலாம்.

Image hosted by Photobucket.com


படத்தின் வலது ஓரத்தில் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்து பந்தாவாகக் காட்சி அளிப்பவர் தான் எனது அப்பா வழிப் பாட்டனார். என்ன கம்பீரமான அழகு..!!

இரண்டாம் நாள் மாலை, மஞ்சத்தண்ணி மாவிளக்கு சுமந்து இளம்பெண்கள் ஊரை வலம் வரும் நிகழ்ச்சி. நான் பெங்களூர் திரும்ப வேண்டியிருந்ததால் அதன் நிழற்படங்களை எடுக்க இயலவில்லை. இந்நிகழ்ச்சியின் போது இவர்களுக்கு முன்னால் இளைஞர்களின் ஒயிலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரு தினங்கள் திருவிழா முடிந்து அம்மன் மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுவாள். அங்கு பூஜைகள் முடிந்து அவள் கோவிலின் முன்னாள் பூசாரியான என் இன்னொரு தாத்தாவின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவாள். அடுத்த திருவிழா வரை உற்சவ அம்மன் அங்கே தான் இருப்பாள்.

ஞாயிற்றுக் கிழமை மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். திங்களும் செவ்வாயும் எனது ஊரில் மீனாட்சியம்மன் திருவிழா என்று மூன்று நாட்களும் மீனாட்சியம்மன் தரிசனம் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மன நிறைவு.

16 Comments:

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Meenaks,

thanks for the wonderful photographs.

May 25, 2005 10:13 AM  
Blogger Jayaprakash Sampath said...

நல்ல மண்வாசனை கமழும் பதிவு. வாழ்த்துக்கள். ஹ¤ம்ம்ம்ம்... இதுக்கெல்லாம் எனக்கு கொடுத்து வைக்கலே...:-)

May 25, 2005 10:22 AM  
Blogger Unknown said...

நம் மண் சார்ந்த சாமிகள் எல்லாம் ஏதோ நமது பாட்டனோ, பாட்டியோ என எண்ணியே பாசங் கொள்ளத் தோன்றும். பாசாங்கில்லாத மேற்கூரை கூடயின்றி தனது குடி படைகளுக்கு காவல் இருக்கும் இத் தெய்வங்கள் வெளிநாடென்ன? வேற்றுக் கிரகம் நாம் சென்றாலும், மனதிற்கு தெம்பு தரும் வரங்கள். நல்ல பதிவு. நன்றி.

May 25, 2005 10:28 AM  
Blogger ஏஜண்ட் NJ said...

இக்கரைக்கு அக்கரைப் பச்சை.

எல்லா காலமும் விடுமுறையாக இருக்கவேண்டும் என நினைக்கும் மனது ஒருபுறம்; வேலைக்குத் திரும்ப இன்னும் இத்தனை நாட்களே உள்ளன என அறிவுறுத்தும் மூளை ஒருபுறம்.

சே... what a 'headless chicken' life.

May 25, 2005 12:55 PM  
Blogger சீமாச்சு.. said...

This comment has been removed by a blog administrator.

May 25, 2005 1:49 PM  
Blogger சீமாச்சு.. said...

அன்பின் மீனாக்ஸ்
நல்ல அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் ஊரை உங்களுடன் வலம் வந்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.
அம்மா அப்பாவோட மயிலாடுதுறையில், கடைமுகத்துக்கு சுற்றிய் மாதிரி இருந்தது. எங்கள் ஊரில் கடைமுகம் பத்து நாள் நடக்கும்.
அப்போ எல்லா ஊரிலிருந்தும் வியாபாரிகள் வந்து மகாதானத்தெரு முழுவதும் திருவிழாக்கடைகள் போடுவார்கள்.
அந்தக் கடைகளைச் சுற்றி வருவதே தனி அனுபவம்.

பேச்சிலராக இருக்கும் போது, இந்த மாதிரி மஞ்சத்தண்ணி ஊத்தும் போது ஓடி வந்துரக்கூடாது.. அப்ப ஊர்ல
இருந்தாத்தான் கிராமத்து சிம்ரன், கிராமத்து ஜோதிகா, கிராமத்து ரேவதி, கெளதமி யெல்லாம் உங்க மேல மஞ்ச்தண்ணி
ஊத்துவாங்க.. உங்களுக்கும் ரெண்டு டூயட் கெடைக்கும்.. கல்யாணமும் ஆகும்.. (ரொம்ப தமிழ்ப்படம் பாக்கறேனோ?)

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

பிகு: போன கமெண்டை நானேதான் டிலீட் பண்ணி இந்த புது கமெண்ட் இட்டேன்.

May 25, 2005 1:54 PM  
Blogger -/பெயரிலி. said...

நல்ல படங்கள்

May 25, 2005 4:16 PM  
Blogger Thangamani said...

//புதிய இலக்கமுறை நிழற்படக் கருவி//

இதற்கு வேறொரு சொல் படித்ததாக நினைவு. இப்போது நினைவில் இல்லை. நல்ல பதிவும் படங்களும்.

May 25, 2005 7:16 PM  
Blogger துளசி கோபால் said...

நல்ல படங்கள் & நல்ல பதிவு!!!! ரொம்ப நாளைக்கப்புறம்( 20 வருஷம்) திருவிழாவை நேரில்
பார்த்தமாதிரி இருந்துச்சு!

இப்ப ஊருக்குப் போனாலும் திருவிழாக் கூட்டத்துலே போய் கலந்துக்க தெம்பு இருக்குமான்னு தெரியலை!

ஆமாம்,'மஞ்சத்தண்ணி'யை மிஸ் பண்ணிட்டீங்களே(-:

என்றும் அன்புடன்,
துளசி.

May 25, 2005 8:44 PM  
Blogger ஜெ. ராம்கி said...

நல்ல ரிப்போர்ட்டிங். மீனாக்ஸ் கலக்கிட்டீங்க.

சீமாச்சு.. கவலையே படாதீங்க.. கூடிய சீக்கிரம் துலாக்கட்டத்தை சுத்திக்காட்டுறேன்!

May 25, 2005 9:51 PM  
Blogger வீ. எம் said...

நல்ல அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் ஊரை உங்களுடன் வலம் வந்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.

May 25, 2005 11:59 PM  
Blogger அன்பு said...

ரொம்ப நன்றி மீனாக்ஸ் உங்களின் இந்தப்பதிவுக்கு. எங்கள் ஊரில் பங்குனி(இப்பல்லாம் சித்திரை)ப் பொங்கலுக்குப் (கொடை) போய் 4 வருடமாச்சு. இந்தமுறையாவது போகலாம் என்று முயற்சி செய்து இயலவில்லை. அந்தக்குறையை உங்களின் இந்தப்பதிவு படங்களுடன் தீர்த்துவிட்டது. ரொம்ப நன்றி. எங்கள் ஊரிலும் கொடை கிட்டத்தட்ட இதுபோல்தான் நடக்கும் - விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

May 26, 2005 12:06 AM  
Blogger ரவியா said...

பாரதிராஜா படம் பாத்த மாதிரியயிருக்கு மீனாக்ஸ் !(முக்கியமா அந்த பொங்கல்) நான் நேரில் பார்ததேயில்லை ! :( நல்ல படங்கள்..
அந்த பலூன்/விளையாட்டு பொருள் விற்பவர்கள் இன்னும் இருக்கிறார்களா?

May 26, 2005 12:35 AM  
Blogger Boston Bala said...

பூக்குழி இறங்குவது உங்க ஊரில் உண்டா? சமீபத்தில் நத்தம் திருவிழாவுக்கு சென்று வந்ததை மலரும் நினைவுகளாக்கிய பதிவு. நன்றி மீனாக்ஸ்

May 26, 2005 12:43 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

கருத்தளித்துப் பாராட்டிய அன்பர்களுக்கு நன்றிகள். மஞ்சத்தண்ணி, மாவிளக்கு வைபவத்தை இழந்தது ஒரு 'ஈடு செய்ய முடியாத இழப்பு' தான். என்ன செய்வது ;-)

// Boston Bala said...
பூக்குழி இறங்குவது உங்க ஊரில் உண்டா?//

பாலா, எங்கள் ஊர் திருவிழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இல்லை. ஆனால் திருவில்லிபுத்தூரில் பூக்குழி இறங்கவென்றே வருடா வருடம் ஒரு திருவிழா உண்டு.

May 31, 2005 8:12 PM  
Blogger Dr.Srishiv said...

அருமையா வந்திருக்கு மீனாக்ஸ், உங்க கவிதை ஒன்னு படிச்சேன் இன்னைக்கு, அது மூலமா உங்க வலைப்பூவிற்கு வந்தேன், அருமையா எழுதறீங்க...வாழ்த்துக்கள்...
அன்புடன்,
ஸ்ரீஷிவ்....அஸ்ஸாமிலிருந்து...

July 06, 2005 12:47 PM  

Post a Comment

<< Home