Saturday, April 23, 2005

பெண்ணாகிப் பூரித்த கணம்

அண்மையில் எனது நிறுவனத்தில் குடும்ப தினம் கொண்டாடப்பட்டது. பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வர, ஒரு தனியார் கிளப்பிற்குச் சென்றிருந்தோம். வழமை போல் அன்றைய மேடை நிகழ்ச்சிகளை நானே தொகுத்தளித்துக் கொண்டிருந்தேன்.

அதில் பல்வேறு போட்டிகளும் நடத்தினோம். ஒரு போட்டி ஆண்களுக்கான சேலை அணியும் போட்டி. இதில் அறிவிக்கப்பட்ட விதிகள் என்னவென்றால் ஆண்கள் மேடையில் எவ்வளவு சீக்கிரம் முழுமையாக சேலை அணிகிறார்களோ அதற்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் அவரது பெண் துணை ஒலிவாங்கியைப் பிடித்தபடி என்ன அறிவுரை வழங்குகிறாரோ அதைக் கெட்டு அதை மட்டுமே பின்பற்றி சேலையை அணிய வேண்டும். ஆண்கள் தாமாக எதுவும் செய்யக் கூடாது. மிக சுவாரஸ்யமாய் இருந்தது. இந்த குறிப்பிட்ட போட்டி நடைபெறும் போது மட்டும் நான் மேடையின்
அருகிலிருந்த உடை மாற்றும் அறைக்குச் சென்று சேலை அணிந்து மேடைக்கு வந்தேன். (சிறு வயதிலேயே அம்மாவிடம் சேலை கட்டிக் கொள்ளக் கற்றிருந்தேன்.) அரங்கில் ஒரே சிரிப்பலை.

Image hosted by Photobucket.com


"புகைப்படம் எடுப்பவர் எங்கே? அவரிடம் முக்கியமான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னைப் புகைப்படம் எடுத்து விடக் கூடாதென்று..!!" என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர் ஆர்வத்துடன் முன்னால் வந்து 'க்ளிக்'கி விட்டார்.

என் முகத்தில் தெரிகிறதா? பெண்ணாகிப் பூரித்த ஒரு கணத்தின் மகிழ்ச்சி??

Friday, April 22, 2005

கண்ணுக்குள் திரை விழாத நேரம்

இந்த வார இந்தியா டுடே ஆங்கில வார இதழில் அட்டைக் கட்டுரை தூக்கமின்மை என்ற - நோய்/உபாதை/விருப்பநிலை - யால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியர்கள் பற்றியது. உலகெங்கும் 14,000 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்தியர்களில் 61% பேர் ஏழு மணி நேரத்துக்குக் குறைவாக உறங்குவதாக முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் 64% பேர்,
காலை 7 மணிக்கு முன்பாகவே எழுந்து கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இரண்டு பிரிவுகளிலுமே
நான் 'ஆம்' என்ற தேர்வைத் தேர்ந்தெடுத்திருப்பேன் என்பதால் இது பற்றி எழுத எனக்கு தகுந்த முகாந்திரம் உள்ளது.

நினைத்துப் பார்த்தால், பள்ளிப் பருவத்தில் தேர்வுகளின் போது நடுநிசி மெழுகுவர்த்திகளை எரித்ததை விட மிக மிக அதிகமாய் நான் இப்போது இரவுகளில் விழித்திருக்கிறேன். இரவு இரண்டு மணிக்கு முன்பாக உறங்கப் போவதே இல்லை. காலையில் கிரிக்கெட் விளையாடப் போக ஆறு மணிக்கு எழுந்து கொள்வதால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது. (மதிய
நேரங்களில் உறக்கம் கொள்வதில்லை.)

இந்தப் பழக்கத்தில் அபாயங்களை நான் உணராமல் இல்லை. இருந்தாலும் அடிக்கடி எனக்கு நானே
சொல்லிக் கொள்ளும் சமாதானம், திருமணம் செய்து கொள்ளும் வரையில் தான் இப்படி இரவு நெடு நேரம் கழிந்து உறங்கப் போகிறதெல்லாம் நடக்கும், அதற்குப் பிறகு "வரப் போகிறவள்" சாம பேத தண்ட முறைகளைப் பிரயோகித்து ஒழுங்காகத் தூங்கச் செய்து விடுவாள் என்பதே ஆகும். குழந்தைக்கு அவள் பாடப் போகும் தாலாட்டை என் பக்கமாகவும் சற்று வெளிமூலம் செய்து கொள்ள வேண்டியது தான்.

கட்டுரையின் கருத்துப்படி, உலகின் அனைத்து நாடுகளிலுமே ஒரு நூற்றாண்டுக்கு முன் எவ்வளவு நேரம் தூங்கினார்களோ அதிலிருந்து இரண்டு மணி நேரம் குறைவாகத் தான் இன்று தூங்குகிறார்கள். இதிலே மிக மோசமானவர்கள் போர்த்துகீசியர்களாம். உலகிலேயே அதிகமாக உறங்குபவர்கள் ஆஸ்திரேலியர்கள் மற்றும் நியூஸீலாந்துக்காரர்கள்.

இரவுகள் நீள்வதற்கான காரணங்களைக் கட்டுரை அலசுகிறது. முக்கியமாகப் பணி நேரங்கள். இன்றைய பன்னாட்டு நிறுவன வேலைகளும் அவற்றோடு தொடர்புடைய முன்னேற்ற வாய்ப்புகளும், அழைப்பு மைய வேலைகளும் பழைய 'ஒன்பதிலிருந்து ஐந்து வரை' என்ற பணி நியமத்தை சர்வசாதாரணமாகப் புறந்தள்ளி விட்டன. இதனால் சொந்த வாழ்க்கைக்கான தேவைகளை இரவுகளில்
பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயங்கள் எழுந்துள்ளன.

அடுத்தது இணையம். இணைய வழி உரையாடல்கள், மின்னஞ்சல்களைப் படித்துப் பதிலளித்தல், வலைப்பதிவுகளில் எழுதுதல்/ அவற்றைப் படித்தல் போன்றவற்றுக்கு இன்று இரவுகள் மிகப் பயன்படுகின்றன. மற்ற வகையான தளங்களைப் பார்வையிடவும் இரவுகள் பொருத்தமானதே என்றால் மிகையல்ல ;-))

அடுத்தது களைப்பான பணிக்கிடையில் உடலையும் மனதையும் களிப்பாக்குவதற்காக (என்று சொல்லி) பங்கு பெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பின்னிரவுகள் வரை நீள்கின்றன. இரவு பத்து மணிக்கு மேல் தொடங்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளே வரவேற்பைப் பெறுகின்றன.

செல்லிடப் பேசியின் கட்டணங்கள் இரவுகளின் போது குறைவாக இருப்பதால் நண்பர்களிடம் அதிக நேரம் உரையாடிக் கொண்டிருப்பதும் பிறவும் அதிகமாக நடக்கின்றன.

உயர்பதவிகளில் இருப்போர் ஒரே இடத்திலிருந்து பணி செய்வது குறைந்து நாடு முழுக்க பிரயாணம் செய்து பணியாற்றும் நிலையைக் காண்கிறோம். இவர்கள் அதே நாளில் சொந்த ஊருக்குத் திரும்புமாறு இருந்தால் நீண்ட இரவுகளைப் பிரயாணத்தில் கழிக்க வேண்டியிருக்கிறது.

திரைப்படம் மற்றும் இதர கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை இரவுகளை ஆக்கிரமிக்கின்றன. கே டிவியில் விடுமுறைக் கொண்டாட்டம் என்று இரவு பதினொரு மணிக்கு ஒரு திரைப்படம் துவங்குகிறது. பெருந்தொடர்கள் பன்னிரண்டு மணி வரை இருக்கின்றன.
(அதற்குப் பிறகும் கூட.. ம்ஹூம், நான் சொல்ல மாட்டேன்..!!) புத்தகம் படிப்பதும், இதர கலை சார்ந்த தேடல்களும் இரவிலேயே நடைபெறுகின்றன. பிற வேலையிலிருந்து கொண்டே எழுதுபவர்கள்
இரவில் எழுதுகிறார்கள், ஓவியம் வரைகிறவர்கள் இரவில் வரைகிறார்கள், இப்படி.

வேலை செய்து கொண்டே தங்களை அடுத்தொரு வேலைக்குத் தயார் செய்து கொள்ள வேண்டிப்
படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. இவர்கள், தங்களது படிப்பின் பாடங்களைப் படிக்கவும் பயிற்சிகளை முடிக்கவும் இரவையே நம்புகின்றனர்.

இதற்கெல்லாம் நாம் காரணமாகச் சொல்ல வேண்டிய நபர், தாமஸ் ஆல்வா எடிசன் தான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவர் என்றைக்கு மின்சாரத்தைத் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தாரோ, அன்றைக்கு மனிதர்கள் தூக்கத்தை மறந்து வேறு பணிகளில் இறங்க ஏதுவானது. இருட்டு தன் ஆதிக்க சக்தியை இழந்தது. எல்லாப் புகழும் எடிசனுக்கே!!