Tuesday, November 21, 2006

என்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்

அழைத்த பாஸ்டன் பாலாவுக்கு என் நன்றிகள்.

1. எனக்கொரு மகள் பிறப்பாள், அவள் என்னைப் போலவே இருப்பாள்.
எனக்கு மகள் தான் பிறக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எதிர்பார்ப்பு. 'என்னைப் போலவே இருப்பாள்' என்பதை விட Harry Potter கதைப் பாத்திரமான Hermione Granger போல் இருக்க வேண்டும் என்பது sub-clause.

2. சொல்லித் த‌ர‌வா.. சொல்லித் த‌ர‌வா..
பிறருக்கு எதையேனும் கற்றுக் கொடுப்பதில் எனக்கு சளைக்காத ஆர்வம். MIT-ல் படிக்கும் போது, வகுப்பில் நான் எடுக்கும் குறிப்புகளுக்குப் பெருத்த வரவேற்பு உண்டு. கிட்டத்தட்ட என் வகுப்பில் அனைத்து மாணவர்களும் எனது குறிப்புகளை வைத்துத் தான் படித்தார்கள் எனலாம். (இதனாலேயே வேறு department மாணவர்கள், தாங்கள் படிப்பது Madras Institute of Technology-ல் என்றும், எங்கள் department மாணவர்கள் மட்டும் படிப்பது Meenaks Institute of Technology-ல் என்று கிண்டல் செய்தது சகஜம்). அனைவரும் சேர்ந்து என் குறிப்புகளைப் பிரதி எடுத்த வகையிலேயே பல ஆயிரங்கள் செலவு செய்திருப்பார்கள். (மூன்று ஆண்டுகள், ஆண்டுக்குப் பன்னிரண்டு பாடங்கள், பாடத்துக்கு 200 பக்கங்கள், வகுப்பில் நாற்பது பேர்.) குறிப்பேட்டை வைத்துக் கொண்டு நான் நடுவிலே உட்கார்ந்திருக்க, பிரதிகளை வைத்துக் கொண்டு ஹாஸ்டலர்கள் என்னைச் சுற்றியிருக்க, குறிப்புகளை விளக்க நான் கதாகாலட்சேபம் செய்ததில் துவங்கியது என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு அலுவல் இடங்களிலும் training session, mentoring போன்றவற்றில் எனக்கு அதீத ஆர்வம். பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்துக் கொண்டு, அவருக்கு ஒரு அழகான விஷயத்தை எடுத்துரைத்து விள‌க்குவதில் உள்ள சுகம் வேறெதிலும் கண்டதில்லை. எதிர்காலத்தில் கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பது இலட்சியம்.

3. அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே
பிள்ளையார் என்ற உருவத்தின் மீது (கவனிக்க, கடவுள் அல்ல) எனக்கு இனம் புரியாத ஈடுபாடு. சிறிது சிறிதான பிள்ளையார் உருவங்களை வாங்கிச் சேர்ப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. எனது பிள்ளையார் collection-லிருந்து சில இங்கே.

4. பாட்டும் நானே பாவமும் நானே
பாடுவதில் அலாதி பிரியம். கல்லூரி, அலுவலகம் என்று எந்த மேடையையும் விட்டு வைத்ததில்லை. என் மனைவிக்கு என்னிடம் மிகப் பிடித்தமான அம்சம் என் பாட்டுத் திறன் எனலாம். மேடை நடிப்பிலும் ரொம்ப ஆர்வம் உண்டு. எந்த எந்த விஷயத்துக்கு எப்படி எப்படி டைப் டைப்பாக முழியை மாற்றுவேன் என்று என் மனைவிக்கு இன்னும் பிடிபடாததால் வீட்டிலும் அராஜகம் தொடர்கிறது.

5. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்னக் குழந்தையும் சொல்லும்
பேனர் கட்டுவது, தோரணம் கட்டுவது, பாலபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாத தீவிரமான ரசிகன். பாபா ரிலீஸ் அன்று கையாலேயே எழுதி, படங்கள் வெட்டி ஒட்டிய வாழ்த்து போஸ்டரை IIM Bangalore மெஸ்ஸில் ஒட்டிய சரித்திர சம்பவம் மட்டுமே குறிப்பிடத்தக்க சாதனை. அரசியல் 'புலி வருது' செயல்களை விரும்பாதவன். நல்ல நடிகரை இமேஜுக்கு இழந்து விட்ட வருத்தம் உள்ளவன். என்றாலும் விட்டுத் தராமல் அடுத்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்குத் தயாராகிறவன்.

6. கண் போன போக்கிலே கால் போகலாமே
திருமணத்திற்கு முன்பு வரை கணிசமான ஊர் சுற்றி. உள்ளூரிலும் 'மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்' என்பதே தினசரி வழக்கம். இது வரை சென்று பார்த்த வெளியிடங்களில் என்னைக் கவர்ந்த இடம், ரிஷிகேஷில் கங்கையின் மீது அமைக்கப்பட்ட லக்ஷ்மண் ஜூலா பாலத்தின் நடுப்பகுதியில் நின்று அழகாய்ச் செல்லும் நதியிடம் மனம் கொடுத்தது. இருந்தாலும், 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா' என்று சொல்லும் சென்னைக் காதலன். பர்க்க விரும்பும் வெளிநாடுகள் என்று ஒரு தனிப் பட்டியல் உண்டு.

7. நதியே நதியே காதல் நதியே
ஏனென்று விளக்க இயலாமல் நதிகளின் மேல் அளவு கடந்த காதல் எனக்கு. கடலிலிருந்து மழையாகி, நதியாகி, நிலம் கடந்து, கடலில் சேரும் சுழற்சியாலோ?

8. தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை ப‌ரோட்டா, நீ தொட்டுக் கொள்ள சிக்கன் தரட்டா
எளிமையான சாலையோரக் கடைகளில் சாதாரண விலையில் கிடைக்கும் அசாதாரண சுவை மிக்க உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் எனது நண்பர்களும் இம்மாதிரி கடைகளை தேடித் திரிந்து உண்டு மகிழ்ந்து ஊன் பெருக்கி வாழ்ந்ததொரு வசந்த‌ காலம்.

9. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே..
கல்லூரிப் பருவத்திலேயே வளராமல் வாழ்க்கை நின்றிருக்கக் கூடாதா, அங்கேயே நாங்கள் லூட்டியடித்து இன்றும் திரிந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கங்கள் எனக்கு உண்டு. I miss those moments.

நான் அழைப்ப‌வ‌ர்க‌ள்: விருப்ப‌முள்ள‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் (தற்போது தமிழ் வலைப்பதிவுலகில் நிறைய‌ புதுமுக‌ங்க‌ள் என்ப‌தால்...)