Sunday, October 10, 2004

துக்ளக்கில் 'சத்யா'வின் நையாண்டி

எனக்குப் பிடித்தமான நகைச்சுவை நையாண்டி ஆசாமிகளில் ஒருவர், துக்ளக் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வரும் சத்யா ஆவார். சமீபகாலமாக இவர் எழுதி வரும் தொடர்கதை (தொடர் உண்மைச் சம்பவங்கள்?!) 'பதவி படுத்தும் பாடு.' தமிழக அரசியல் சூழ்நிலையை மையமாக வைத்து, நாம் யாரென்று எளிதில் கண்டுபிடித்துவிடக் கூடிய கதாபாத்திரங்களுடன் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் மனிதர். குறிப்பாக இந்த வாரம் அவர் வாரியிருப்பது மிக ஹை-க்ளாஸ்!!

தமிழ் சமுதாய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 'நாற்பெரும் விழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கட்சித் தலைவர் தமிழரசனைப் பாராட்டிக் கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கவிஞர் வாசிக்கும் கவிதை இது:
அன்று நீ தமிழரசன்.
இன்று நீ தமிழர் சன்!

இந்நாடு கண்டதுண்டா உன் போலொரு சிடிசன்?
இங்குள்ளோர் வியாதிக்கு நீ தான் மெடிசன்!

அரசியல் பந்தை எடுத்து நீ போட்டால் ஒரு ஓவர்,
ஆட்சியே ஆகிவிடும் ஓவர்.
அமைச்சர்களுக்கு வந்துவிடும் ஃபீவர்
ஆட்சியாளர்கள் வீட்டுக்குப் போவர்.

நீ தமிழ் கரை கடந்த தன்மானப் புயல்
உன்னைத் தட்டிக் கேட்க உண்டா இங்கு ஒரு பயல்?

உன் படைப்புகள் ஏற்படுத்திய சேதாரம்
பகுத்தறிவின் பத்தாவது அவதாரம்
பாரில் தோன்றி விட்டதற்கு ஆதாரம்.

ஊரில் பலர் துண்டு போட்டதுண்டு
ஆனால் நீ தோளில் போட்ட துண்டு
பகைவர் ஆணவம் அழிக்கும் குண்டு
அதனால் உனை எதிர்ப்போர் அது கண்டு
ஓடுவர் பதறிக் கொண்டு.

நீ சென்னையில் தும்மினால்
டெல்லியில் புயல் அடிக்கும்.
இங்கே சினம் கொண்டால்
அங்கே அனல் அடிக்கும்.

நீ பேனாவைத் திறந்தால்
தானாக வரும் தமிழ், தேனாக இனிக்கும்
பகைவர் தலையில் பேனாகக் கடிக்கும்.

உனை ஒத்த தமிழ் உலகில் இல்லை;
முத்தமிழ் மட்டுமல்ல நீ
மொத்த தமிழும் நீ தான்!!
அடுத்து வருகிறார் இன்னொரு கவிஞர். அவர் மட்டும் சும்மா இருப்பாரா? அவரும் போட்டுத் தாக்குகிறார்:
தாயின் கர்ப்பத்திலேயே தமிழ் படித்தவன்
ஈயின் மிரட்டலுக்கா பயந்து விடுவான்?
பூகம்பத்தின் நடுவே பூபாளம் பாடுபவன்
பூச்சிகளின் பாய்ச்சலுக்கா பதறி விடுவான்?

இவன் இமயமலையைப் பூமியில் புதைப்பவன்
இந்துமாக்கடலை வின்ணில் விதைப்பவன்
இவன் பிறந்த பிறகே தமிழ் கண் விழித்தது
இவன் தமிழ் மூச்சில் தால் தமிழகத்துக்கே ஆக்ஸிஜன் கிடைக்கிறது.

எரிமலை ஏறவந்த வெறிபிடித்த நரிகளே,
தமிழ்மலையுடன் மோத வந்த கிலி பிடித்த எலிகளே,
ஏணியேறி ஆகாயத்திலே ஆணி அடிக்க முடியுமா?
வானவில்லின் வண்ணம் நீக்க வாத்துகளால் முடியுமா?

அவன் தலை நிமிர்ந்தால் மலை கூட நிலைகுலைந்து போகும்.
தமிழ் நடை கண்டால் பகைவர் படை கூட விடைபெற்றுப் போகும்.

தமிழா!
விழி, எழு!
அவன் காலடி
விழு, தொழு!
அவன் தாய்க்கரம் இழு
தமிழ்ப்பாலுக்கு அழு
எதிரிகள் புழு!
அடடா அடடா!! சத்யா, தொப்பிகளைத் தூக்குகிறேன் உமக்கு!!

1 Comments:

Blogger ரவி said...

ரொம்ப ரசிச்சேன்...

ரவி...

April 26, 2006 1:18 AM  

Post a Comment

<< Home